(என்.வீ.ஏ.)
மும்பை ப்றேபோர்ன் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (14) நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸை 24 ஓட்டங்களால் ராஜஸ்தான் றோயல்ஸ் வெற்றிகொண்டது.

இரண்டு அணிகளுக்கும் தீர்மானமிக்கதாக அமைந்த அப் போட்டியில் யஷஸ்வி ஜய்ஸ்வால், சஞ்சு செம்சன், தேவ்தத் படிக்கல் ஆகியோர் துடுப்பாட்டத்தில் வழங்கிய அதிகபட்ச பங்களிப்பும் ட்ரென்ட் போல்ட், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரது கட்டுப்பாடான பந்துவீச்சும் ராஜஸ்தான் றோயல்ஸ் வெற்றி பெறுவதற்கு உதவின.
இந்தப் போட்டி முடிவுடன் ராஜஸ்தான் றோயல்ஸ் 16 புள்ளிகளைப் பெற்று லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸை பின்தள்ளி 2ஆம் இடத்துக்கு முன்னேறியது.
இந்த இரண்டு அணிகளும் ப்ளே ஓவ் சுற்றுக்கு செல்லவேண்டுமானால் தத்தமது கடைசிப் போட்டிகளில் வெற்றிபெறுவது அவசியமாகும்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது.
இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிக மொத்த ஓட்டங்களைக் குவித்துள்ள ஜொஸ் பட்லர், இந்தப் போட்டியில் வெறும் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றார்.
எனினும், யஷஸ்வி ஜய்ஸ்வால் (42), அணித் தலைவர் சஞ்சு செம்சன் (32) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 39 பந்துகளில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து ஐவர் இரட்டை இலக்க ஓட்டங்களைப் பெற்று மொத்த எண்ணிக்கைக்கு வலுசேர்த்தனர்.
தேவ்தத் படிக்கல் (39), ரியான் பரக் (19), ஜேம்ஸ் நீஷாம் (14), ரவிச்சந்திரன் அஷ்வின் (10 ஆ.இ.), ட்ரென்ட் போல்ட் (17 ஆ.இ.) ஆகியோர் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர்.
பந்துவீச்சில் 8 பேரை லக்னோ பயன்படுத்திய போதிலும் ரவி பிஷூ மாத்திரம் சிறப்பாக பந்துவீசி 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
179 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
குவின்டன் டி கொக் (7), கே. எல். ராகுல் (10), அயுஷ் படோனி (0) ஆகிய முதல் 3 துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டமிழந்தமை லக்னோவுக்கு பேரிடியைக் கொடுத்தது. (29 - 3 விக்.)

தீப்பக் ஹூடா (59), க்ருணல் பாண்டியா (25) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஓரளவு நம்பிக்கையைக் கொடுத்தனர்.
ஜேசன் ஹோல்டர் (1), துஷ்மன்த சமீர (0) ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்து ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர்.
கடைசிக்கட்டத்தில் போராடிய மார்க்ஸ் ஸ்டொய்னிஸ் 27 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் ஆட்டமிழந்தபோது லக்னோவின் அற்பசொற்ப நம்பிக்கையும் அற்றுப்போனது.
பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் 4 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ராசித் க்ரிஷ்ணா 32 ஒட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஒபெத் மெக்கோய் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஷ்வின் 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.