(என்.வீ.ஏ.)

பாங்கொக் குவீன் சேர்க்கிட் ஞாபகார்த்த விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த ஆசிய விளையாட்டு விழா ஆடவர் ஹொக்கி தகுதிகாண் சுற்றில் இலங்கை 5ஆம் இடத்தைப் பெற்றது.

ஆசிய விளையாட்டு விழா ஆடவர் ஹொக்கி போட்டியில் விளையாட ஏற்கனவே தகுதிபெற்றிருந்த இலங்கை, இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற உஸ்பெகிஸ்தானுடனான போட்டியில் 3 - 1 என்ற பெனல்டி முறையில் வெற்றிபெற்று  இலங்கை 5ஆம் இடத்தைப் பெற்றது.

5ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் இரண்டு அணிகளும் தலா 3 கோல்களைப் போட்டு ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால் வெற்றி அணியைத் தீரமானிக்க கள மத்தியஸ்தர்களினால் பெனல்டி முறை அமுல்படுத்தப்பட்டது.

போட்டியின் 15ஆவது நிமிடத்தில் பெனல்டி கோர்ணர் கோல் ஒன்றை எஸ். சுபசிங்க போட்டு இலங்கையை முன்னிலையில் இட்டார்.

இரண்டாவது கால் மணி நேர ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் போடவில்லை. இடைவேளையின்போது 1 - 0 என்ற கோல் அடிப்படையில் இலங்கை முன்னிலையில் இருந்தது.

3ஆவது கால் மணி நேர ஆட்டத்தில் 37ஆவது   நிமிடத்தில் உஸ்பெகிஸ்தான் சார்பாக கரிமோவ் ருஸ்லான், கள கோல் போட்டு கோல் நிலையை சமப்படுத்தினார். ஆனால், சில செக்கன்களில் பெனால்டி கோல் ஒன்றைப் பொட்ட தம்மிக்க ரணசிங்க மீண்டும் இலங்கையை முன்னிலையில் இட்டார்.

எனினும் முஹம்மத்கதிர் வக்கோப்ஜோனவ் 44ஆவது நிமிடத்திலும் ஷவ்காத்பெக் மேர்ஸாகரிமோவ் 51ஆவது நிமிடத்திலும் கள கோல்களைப் போட்டு உஸ்பெகிஸ்தானை முன்னிலையில் இட்டனர்.

போட்டி முடிவடைய ஒரு நிமிடம் இருந்தபோது விப்புல பெர்னாண்டோ போட்ட கள கோலின்மூலம் இலங்கை கோல்நிலையை சமப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ஆட்டம் 3 - 3 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததை அடுத்து பெனல்டி முறை அமுல்படுத்தப்பட்டது.

பெனல்டி முறையில் இலஙகை 3 - 1 என வெற்றிபெற்று 5ஆம் இடததை உறுதிசெய்துகொண்டது.

இதேவேளை, சம்பியனைத் தீர்மானிக்கு இறுதிப் போட்டியில் பங்களாதேஷை 6 - 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்டு ஓமான் சம்பியன் பட்டத்தை சூடியது.

அதற்கு முன்னர் தாய்லாந்தை 4 - 3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட இந்தோனேசியா 3ஆம் இடத்தைப் பெற்றது.