(என்.வீ.ஏ.)
பங்களாதேஷுக்கு எதிராக சட்டாக்ரோம் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஏஞ்சலோ மெத்யூஸ் குவித்த ஆட்டமிழக்காத சதத்தின் உதவியுடன் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் கௌரவமான நிலையை அடைந்துள்ளது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஏஞ்சலோ மெத்யூஸ் 114 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமால் 34 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
மொத்த எண்ணிக்கை 23 ஓட்டங்களாக இருந்தபோது அணித் தலைவர் திமுத் கருணாரட்ன 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ஓஷத பெர்னாண்டோவும் குசல் மெண்டிஸும் 43 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஓஷத பெர்னாண்டோ 36 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.
இந் நிலையில் குசல் மெண்டிஸுடன் 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ஏஞ்சலோ மெத்யூஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 92 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.
குசல் மெண்டிஸ் மிக நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 131 பந்துகளை எதிர்கொண்டு 54 ஓட்டங்களைப் பெற்றார்.
உதவி அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா 6 ஓட்டங்களுடன் வெளியேறியபோது மொத்த எண்ணிக்கை 183 ஓட்டங்களாக இருந்தது.

மெத்யூஸும் சந்திமாலும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையை பலமான நிலையை நொக்கி நகரவைத்துள்ளனர்.
தனது 95ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஏஞ்சலோ மெத்யூஸ் 12ஆவது சதத்தைப் பூர்த்திசெய்தார்.
மெத்யூஸ் 69 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தய்ஜூலின் பந்துவீச்சில் கொடுத்த பிடியை ஸ்லிப் நிலையிலிருந்த மஹ்முதுல் ஹசன் ஜோய் தவறவிட்டமை பங்களாதேஷ் அணிக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தொடர்ந்து நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய மெத்யூஸ், 213 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகளையும் ஒரு சிக்ஸையும் அடித்திருந்தார்.
பங்களாதேஷ் பந்துவீச்சில் நயீம் ஹசன் 71 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
