(எம்.மனோசித்ரா)
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுக்கான மக்கள் ஆணையை ஏலத்தில் விட தயாராக இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக போலியான செய்திகளை வெளியிட்டு சர்வாதிகாரத்தை பாதுகாப்பதற்காக செயற்பட வேண்டாம் என்று ஊடகங்களிடம் கேட்டுக் கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

விசேட அறிவிப்பொன்றை விடுத்து இதனைத் தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைவதாக சில ஊடகங்கள் போலியான செய்திகளை வெளியிட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கட்சியையும் , மக்களையும் , கட்சி ஆதரவாளர்களையும் , மனசாட்சியையும் , தமது பெற்றோரையும் ஒருபோதும் வரப்பிரசாதங்களுக்காகவும் அமைச்சு பதவிகளுக்காகவும் காட்டிக்கொடுக்க மாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஐக்கிய மக்கள் சக்தி , ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பணத்திற்கு விற்கப்பட மாட்டார்கள். அரசியல் துறையில் ஏலம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் , ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் மக்கள் ஆணையை ஏலத்தில் விட தயாராக இல்லை. இவ்வாறான போலியான செய்திகளை வெளியிட்டு சர்வாதிகாரத்தை பாதுகாப்பதற்காக செயற்பட வேண்டாம் என்று ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
எமது வரம் மக்கள் ஆணையாகும். எமது நலன் மக்களின் நலன் ஆகும். எவ்வகையான வரப்பிரசாதங்கள் கிடைக்கப் பெற்றாலும் எமக்கான வரத்தைதையும் நலத்தையும் காட்டிக்கொடுக்க நாம் தயராக இல்லை. அவற்றை எமது உயிருக்கும் மேலாக பாதுகாப்போம். இவ்வாறான பொய்களுக்கு ஏமாற வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். பொது மக்களை கைவிட்டு உயர் பதவிகளில் அமரப்போவதில்லை.
நாம் எமது நாட்டைப் பாதுகாப்போம். நாட்டைப் பாதுகாப்பதற்கான தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடிய இயலுமை எமக்கிருக்கிறது. அந்த பொறுப்பை நாம் நிறைவேற்றுவோம் என்றார்.