விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் மீண்டும் தாக்குதல்களை நடத்த திட்டம் : 'த இந்து'வின் செய்தி தொடர்பில் விசாரணை - பாதுகாப்பு அமைச்சு

15 May, 2022 | 12:36 PM
image

(எம்.மனோசித்ரா)

விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் மீண்டும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக 'த இந்து' வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 

அதற்கமைய இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு இலங்கைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென இந்திய புலனாய்வு அறிவித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கையில் தாக்குதல் ஒன்றை நடத்த விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள் காட்டி, கடந்த 13 ஆம் திகதி இந்தியாவில் வெளியாகும் 'த ஹிந்து' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்படி தகவல் தொடர்பில் இலங்கை வினவிய போது, அவை பொதுவான தகவலாகவே வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு இலங்கைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், தேசிய பாதுகாப்பு தொடர்பில் உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைக்கும் அனைத்து தகவல்களும் முறையாக விசாரிக்கப்பட்டு, அந்தந்த பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கப்படும் அதேவேளை பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right