(நெவில் அன்தனி)

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான  2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டி சட்டாக்ரோம் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

க்றிஸ் சில்வர்வுடின் பயிற்றுவிப்பில் இலங்கை அணி எதிர்கொள்ளும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இதுவாகும். அவரது பயிற்றுவிப்பில் தொடரை சிறப்பாக ஆரம்பிக்கும் எதிர்பார்ப்புடன் இலங்கை அணி களம் இறங்கவுள்ளது.

இந்தியாவுக்கு எதராக இவ் வருட முற்பகுதியில் 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் தோல்வி அடைந்த பின்னர் பல மாற்றங்களுடன பங்களாதேஷுடனான டெஸ்ட் தொடரை இலங்கை சந்திக்கவுள்ளது.

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் அதிசிறந்த பெறுபேறுகளைக் கொண்டுள்ள இலங்கை, இன்று ஆரம்பமாகும் டெஸ்ட் தொடரிலும் வெற்றிபெற்று உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிகளை அதிகரிக்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மைக் காலங்களில் டெஸ்ட் அரங்கில் மேடு பள்ளங்களை சந்தித்துவந்துள்ள பங்களாதேஷ் அணி தனது சொந்த மண்ணில் சவால்மிக்க அணியாக இருந்துவந்துள்ளதை அவதானிக்கலாம்.

எனவே இந்த டெஸ்ட் தொடர் இரண்டு அணிகளுக்கும் சவால் மிக்க தொடராக அமையவுள்ளது.

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் 4 சதங்களையும் 4 அரைச் சதங்களையும் குவித்த ஓஷத பெர்னாண்டோ, முதலாவது டெஸ்ட் போட்டியில் திமுத் கருணாரட்னவுடன் ஆரம்ப ஜொடியாக விளையாடவுள்ளார்.

'எனது ஆரம்ப ஜோடியாக பெரும்பாலும் ஓஷத பெர்னாண்டோ விளையாடுவார். சட்டாக்ரோம் அரங்கில் முன்னர் இடம்பெற்ற 2 போட்டிகளில் பிரகாசித்தது போல எமது துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் இம்முறையும் திறமையை வெளிப்படுத்துவர் என எதிர்பார்க்கிறேன்' என அணித் தலைவர் திமுத் கருணாரட்ன தெரிவித்தார்.

'இரண்டு அணிகளையும் ஒப்பிடும்போது எமது துடுப்பாட்ட வரிசை சிறந்தது என நான் கருகின்றேன். அவர்களிடமிருந்து அதிகப்பட்ச ஆற்றல் வெளிப்படும் என நம்புகிறேன்' என்றார் அவர்.

குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் முதல் பதினொருவர் அணியில் இடம்பெறுவர். துடுப்பாட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் தினேஷ் சந்திமால் அல்லது ரமேஷ் மெண்டிஸ் அணியில் இணைக்கப்படுவார்.

பங்களாதேஷ் அணியில் சகலதுறை வீரர் ஷக்கிப் அல் ஹசன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் கொரோனாவால்  பாதிக்கப்பட்ட ஷக்கிப் அல் ஹசனின் அண்மைய கொரோனா பரிசோதனை அறிக்கை எதிர்மறையாக இருந்ததை அடுத்து அவர் அணியில் இடம்பெற்று மத்திய துடுப்பாட்ட வரிசையைப் பலப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையும் பங்களாதேஷும் 22 தடவைகள் டெஸ்ட் போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன. அவற்றில் 17 - 1 என்ற ஆட்டக்கணக்கல் இலங்கை முன்னிலை வகிக்கிறது. 4 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளன.  

அணிகள் விபரம்

இலங்கை: திமுத் கருணாரட்ன (தலைவர்), ஓஷத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, தினேஷ் சந்திமால் அல்லது ரமேஷ் மெண்டிஸ், லசித் எம்புல்தெனிய, கசுன் ராஜித்த அல்லது அசித்த பெர்னாண்டோ, ப்ரவீன் ஜயவிக்ரம, விஷ்வா பெர்னாண்டோ.

பங்களாதேஷ்: தமிம் இக்பால், மஹ்முதுல் ஹசன் ஜோய், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ, மொமினுள் ஹக் (தலைவர்), முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ், ஷக்கிப் அல் ஹசன் அல்லது மொசாடெக் ஹொசெய்ன், தய்ஜுல் இஸ்லாம், ஷொரிபுல் இஸ்லாம், ஈபாடொத் ஹொசெயன்.