(எம்.மனோசித்ரா)

நாட்டின் போராடிக் கொண்டிருக்கும் மக்கள் கோரும் சீர்திருத்தங்களுக்கு இணையான வேலைத்திட்டத்திற்காகவே நானும், ஐக்கிய மக்கள் சக்தியும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எனவே அந்த போராட்டம் ஒருபோதும் காட்டிக்கொடுக்கப்படமாட்டது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒரு தரப்பினர் நேற்று சனிக்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து தமது கோரிக்கையை அவரிடம் சமர்ப்பித்தனர். இதன் போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்தனர்.

இதன் போது எதிர்க்கட்சி தலைவர் மேலும் குறிப்பிடுகையில் ,

போராட்ட களத்தின் கோரிக்கைகளை நாம் உணர்ந்து செயற்படுகின்றோம். அந்தக் கோரிக்கைகளுக்கு ஒருபோதும் துரோகமிழைக்க மாட்டோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை.

அதற்கு மேலதிகடாக குறிப்பிட்ட கால வரையறைக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குதல், 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீளக் கொணர்தல், அதிகாரங்களை கட்டுப்படுத்துவதற்கான தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறையின் ஊடாக சட்டமன்றம்,  நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரங்களை நிறுவுதல் போன்ற ஜனநாயக செயற்பாடுகளுக்கான அர்ப்பணிப்பில் ஐக்கிய மக்கள் சக்தி மாற்றமின்றி உறுதியாக இருக்கும் என்றார்.