(ஆர்.ராம்)

நிறைவேற்று அதிகாரத்தினை வலுப்படுத்தும் 20ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  பாராளுமன்ற உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான சஜித் பிரேமதாச அவசரமாக அழைத்து கலந்துரையாடியுள்ளார். 

குறித்த சந்திப்பில், மு.கா சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசீம், எம்.எஸ்.தௌபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 

இந்தச் சந்திப்பு தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது, 

புதிதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் அவருக்கான ஆதரவினை குறித்த உறுப்பினர்கள் வழங்குவது பற்றி எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கரிசனை செலுத்தியுள்ளார். 

20ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளித்தமை தொடர்பில் எதிர்மறையான நிலைப்பாடுகள் இருந்தாலும், தொடர்ச்சியாக பரஸ்பர ஒத்துழைப்புடன் செயற்படுவது பற்றி சஜித் பிரேமதாச கவனம் செலுத்தியுள்ளார். 

அத்துடன், ஜனாதிபதி தேர்தலின்போது, தனக்கு குறித்த உறுப்பினர்கள் அளித்த ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்களையும் நினைவு கூர்ந்த அவர் தொடர்ச்சியாக தம்முடன் இணைந்து பணியாற்றுவதற்கும் அழைப்பு விடுத்துள்ளார். 

அதேநேரம், மக்கள் தன்பக்கம் உள்ளனர் என்று தெரிவித்த சஜித் குறித்த உறுப்பினர்கள் நம்பிக்கையுடன் தன்னுடன் கரம்கோர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்நிலையில் குறித்த உறுப்பினர்களும் சஜித் பிரேமதாசவுக்கு சதமான சமிக்ஞைகளை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.