(நா.தனுஜா, எம்.மனோசித்ரா)

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளினதும் இணக்கப்பாட்டினை பெற்றுக் கொள்வதற்கான தனது இயலுமையையும் மக்களின் நலன்களை முன்னிறுத்திய பொதுவான குறைந்தபட்ச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான தனது நாட்டத்தையும் இயலுமானவரை விரைவில் வெளிக்காட்ட வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

அத்தோடு ஸ்திரமற்ற தன்மையும் பல்வேறு நெருக்கடிகளும் நிலவுகின்ற தற்போதைய சூழ் நிலையில் நாட்டு மக்களினதும் உள்ளக மற்றும் வெளியக தரப்பினரதும் நம்பகத்தன்மையை வென்றெடுக்கக் கூடிய வகையில் புதிய அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. 

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இச்சூழ்நிலையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுக் கொண்டதையடுத்து அவரது பொறுப்புக்களை நினைவுறுத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே சட்டத்தரணிகள் சங்கம் மேற்கண்டவாறு வலியுறத்தியுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

ஜனாதிபதியினால் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எமது செயற்குழு அவதானம் செலுத்தியுள்ளது. பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்களின் நியமனம் நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு இன்றியமையாததாகும். அத்தகைய நியமனங்கள் பொது மக்களின் நம்பகத்தன்மையை பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அமைவதே அவசியமாகும். 

இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரதன்மையை உறுதிப்படுத்துவதற்கான எமது பரிந்துரையை கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி ஜனாதிபதியிடம கையளித்திருந்தோம். ஜனாதிபதியின் அழைப்பின் கீழ் அப்பரிந்துரைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எமது சங்கத்தின் நிர்வாகக் குழு கடந்த 8ஆம் திகதி ஜனாதிபதி இல்லத்தில் வைத்து ஜனாதிபதியை சந்தித்தது. 

அன்றைய தினம் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தல் உள்ளடங்கலாக எமது பரிந்துரைகளுக்கு ஜனாதிபதி தனது இணக்கத்தை வெளிப்படுத்தினார். தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த எமது பரிந்துரையில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. 

15 அமைச்சரவை அமைச்சர்களை உள்ளடக்கியதாக தேசிய ஒருமைப்பாட்டுடன் கூடியதாக இடைக்கால அரசாங்கத்தை அமைத்தல் , தேசிய பொருளாதாரம் மற்றும் அதில் அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு சபாநாயகரின் அங்கீகாரத்துடன் அனைத்து அரசியல் கட்சிகளினதும் இணக்கப்பாட்டை பெற்றுக் கொள்ளக் கூடிய பாராளுமன்ற உறுப்பினராக பிரதமர் திகழ்தலை உள்ளடக்கியிருந்தது. 

இந்த பரிந்துரையானது நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமற்ற தன்மையைக் கருத்திற் கொண்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை பெற்றுக் கொள்வதற்கு அப்பால் பாராளுமன்றத்திற்குள் அனைத்து அரசியல் கட்சிகளினதும் இணைக்கப்பாட்டினை உறுதி செய்யக் கூடிய இயலுமை உள்ள ஒருவரை பிரதமராக நியமிப்பதை முன்னிருத்தியதாக அமைந்திருந்தது. 

இந்த பரிந்துரையானது உள்ளக ரீதியில் அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் சர்வதேச நாணய நிதியம் ஏனைய தொடர்புடைய கட்டமைப்புக்கள் , நட்பு நாடுகள்  ஆகியவற்றுடன் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான உதவிகளை பெற்றுக் கொள்வதை முன்னிறுத்தி நம்பத்தகுந்த கலந்துரையாடல்களை முன்னெடுக்கக் கூடியதுமான ஸ்திரமான அரசாங்கத்தை ஸ்தாபிப்பது உள்ளிட்ட ஏனைய பரிந்துரைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு இன்றியமையாததாகும். 

இவ்வாறானதொரு பின்னணியில் பாராளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுக்குமிடையில் இணக்கப்பாட்டை உறுவாக்குவதற்கான தனது இயலுமையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இயலுமானவரை விரைவில் காண்பிக்க வேண்டும் என்று நாம் கருதுவதுடன் , பொது மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு பொதுவான குறைந்த செய்திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய பிரதிநிதிகளை உள்ளடக்கிய அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான நாட்டத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றோம். 

அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தத்ததை அறிமுகப்படுத்துதல் மற்றும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமைiயை இல்லாதொழித்தல் என்பன உள்ளடங்கலாக எமது பரிந்துரைகளை குறிப்பிடப்பட்ட அதிமுக்கிய அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வதற்கான தெளிவானதொரு கால வரையறையை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஸ்திரமற்ற தன்மையும் பாரிய நெருக்கடிககளும் நிலவுகின்ற தற்போதைய சூழ்நிலையில் நாட்டு மக்களினதும் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீழுள்வதற்கு உதவுகின்ற உள்ளக மற்றும் வெளியக தரப்புக்களினதும் நம்பகத்தன்மையை வென்றெடுக்கக் கூடியவகையில் புதிய அரசாங்கம் வெளிப்படை தன்மையுடனும் தெளிவான இலக்குடனும் செய்ற்பட வேண்டியது இன்றியமையாததாகும் என்று அவ்அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.