கே .குமணன் 

"கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்" என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மே 12 தொடக்கம் மே 18 வரை முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் வேலைத்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன் மூன்றாவது  நாளில்  வடக்கு கிழக்கு வலிந்து காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டிலும் பொது அமைப்புகழும் இணைந்து  முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கு செயற்பாடு இன்று (14) முல்லைத்தீவு ஒட்டுசுட்டான்   நகர்  பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. 

மே 12-மே 18 வரை தமிழினப்படுகொலை வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்  2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை யுத்தத்தில் தமிழ் மக்கள் உணவாக உட்கொண்ட உப்பு கஞ்சியை இந்த வாரத்தில் அனைத்து மக்களுக்கும் வழங்கி முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் கதையை கடத்துவதோடு இனப்படுகொலைக்கு நீதி கோரும் அங்கமாக இந்த கஞ்சி பரிமாறும் வேலைத்திட்டம் வடக்கு கிழக்கு மாகாணம் எங்கிலும் கடந்த 12 ஆம் திகதிமுதல் ஆரம்பித்து  வைக்கப்பட்டுள்ளது .

கஞ்சி ஆக்கும் செயற்பாட்டினை ஆரம்பிக்க குறித்த பகுதிக்கு ஏற்பாட்டாளர்கள் வருகை தந்த நிலையில் புலனாய்வாளர்கள் வருகை தந்து புகைப்படம் எடுத்து கண்காணிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியால் அடிக்கடி வெள்ளை வாகனம்  ஒன்றில் சென்று வந்த சிவில் உடைதரித்தோர் புகைப்படம் எடுக்கும் செயற்ப்பாட்டில் ஈடுபட்டிருந்ததனர்.

இவ்வாறு வெள்ளை வானில் வந்தவர்களுக்கு அருகில் இருந்த இராணுவ காவலரணில் கடமையிலிருந்த இராணுவத்தினர் எழுந்து மரியாதை செலுத்தியதையும் அவதானிக்க முடிந்தது.