(நா.தனுஜா)

இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஆராய்வதற்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் அவசர விவாதமொன்று அவசியமென வலியுறுத்தியுள்ள அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டொனாக், இவ்விடயத்தில் சர்வதேச நாணய நிதியம் தலையிடவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

MP says she will 'oppose all forms of racism' as anti-Semitism 'rears its  ugly head' in Labour party | Wimbledon Times

தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், ஜனாதிபதி பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

இதுஇவ்வாறிருக்க கடந்த திங்கட்கிழமை (09) அரசாங்க ஆதரவாளர்கள் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தவர்கள்மீது வன்முறைத்தாக்குதல்களை நடத்தியதை அடுத்து, நாடு முழுவதும் வன்முறைகள் பதிவானதும் அமைதியின்மை நிலையொன்றும் தோற்றம்பெற்றது.

 இவ்வாறானதொரு பின்னணியிலேயே பிரித்தானிய பாராளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினர் சியோபைன் மெக்டொனாக் அவரது பாராளுமன்ற உரையில் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

 இலங்கையில் மிகமோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஆராய்வதற்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் அவசர விவாதமொன்று அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

 இதன்போது கடந்த திங்கட்கிழமை(09) ராஜபக்ஷ நிர்வாகத்தின் ஆதரவாளர்களின் செயற்பாட்டால் 9 பேர் கொல்லப்பட்டதுடன் சுமார் 200 பேர் காயமடைந்திருக்கின்றார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 மேலும் தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடு அவசியம் என்று வலியுறுத்திய அவர், இலங்கையில் தமிழ்மக்களுக்கான நீதியை வழங்குவதை முன்னிறுத்தியதாக இத்தலையீடுகள் அமையவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.