(எம்.எம்.சில்வெஸ்டர்)

கடந்த 2 வருட காலமாக கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக நடத்தப்படாமல் இருந்த அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா எதிர்வரும் நவம்பர்  மாதத்தில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது. 

கல்விப் பணிப்பாளர் (சுகாதாரம், விளையாட்டு மற்றும் உடற்கல்வி) தயா பண்டார, பிரதிக் கல்விப் பணிப்பாளர் உபாலி அமரதுங்க, உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ருவன் பத்திரன, தில்ருக் ஜயவர்தன, பிரபாத் இந்திக்க ஆகியோரினால் இப்போட்டியை ஆரம்பித்து நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவிற்கான கல்வி வலய பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதிக்கு முன்னரும், மாகாணசபை போட்டிகள் செப்டெம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னரும் நடத்தி முடிக்கும்படி கல்வி அமைச்சின் விளையாட்டு மற்றும் உடற்கல்விப் பிரிவு அறிவித்துள்ளது.

கொவிட்  அச்சுறுத்தல் காரணமாக அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா கடந்த 2020, 2021 ஆம்  ஆகிய இரண்டு ஆண்டுகள் நடத்த முடியாமல் போனது. 

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளின் விளையாட்டுத் திறன் மற்றும் ஆற்றல்கள் வெளிக்கொண்டு வர முடியாமல் போனமை பெரும் துரதிஷ்டமானதாகும். 

மேலும், அவர்களுக்கு தேசிய மட்ட கிண்ணங்கள், சான்றிதழ்களை வென்றெடுக்கக்கூடிய வாய்ப்பற்றுப் போனது.  அத்துடன், பல்கலைக்கழக அனுமதிக்கான விளையாட்டு மூலம் கிடைக்கப் பெறும் புள்ளிகளும் அவர்களுக்கு கிடைக்கப் பெறாமல் போயிருந்தமை கவனிக்கத்தக மற்றுமொரு விடயமாகும்.