(இராஜதுரை ஹஷான்)

அலரிமாளிகையில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்திற்கு வாடகை அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்ட தனியார் பேருந்துகளில் சுமார் 40 பேருந்துகள் மீள் புதுப்பிக்க முடியாத அளவிற்கு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், பேருந்துகளின் உதிரிபாகங்களும் திருடப்பட்டுள்ளன. 

அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளுக்கு இனி தனியார் பேருந்துகளை வழங்க போவதில்லை என அகில இலங்கை தனியார் பேருந்து  உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடி தீவிரமைந்துள்ள பின்னணியில் சமூக கட்டமைப்பில் அமைதியற்ற நிலைமையும் தீவிரமைந்துள்ளது. 

அலரிமாளிகையில் கடந்த திங்கட்கிழமை(9) இடம்பெற்ற அரசியல் கூட்டத்தை தொடர்ந்து காலி முகத்திடல் அமைதி வழி போராட்டகாரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கும், அதனை தொடர்ந்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்புக்கூற வேண்டும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி கூட்டம் என்று குறிப்பிட்டே சுமார் 60 தனியார் பேருந்துகள் வாடகை அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள் பெற்றுக்கொண்டனர் 60 பேருந்துகளில் 08 பேருந்துகள் மாத்திரம் ஆதரவாளர்களின் சொந்த பேருந்துகளாகும் ஏனைய பேருந்துகள் தனியார் பேருந்து உரிமையாளர்களுடையது.

காலி முகத்திடல் போராட்டத்தை தொடர்ந்து தனியார் பேருந்துகளில் மீது தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு அவை தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

சுமார் 40 பேருந்துகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதுடன்,அவற்றின் உதிரிபாகங்களும் திருடப்பட்டுள்ளன.சேதப்படுத்தப்பட்ட பேருந்துகளின் பாகங்களும் திருடுபோயுள்ளன.

தீக்கிரையாக்கப்பட்டுள்ள பேருந்துகளுக்கு காப்புறுதிகளும் வழங்க முடியாது என காப்புறுதி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஆகவே இப்பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தனியார் பேருந்துகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளுக்கு இனி எக்காரணிகளுக்காகவும் தனியார் பேருந்துகளை வழங்க போவதில்லை என கொள்கை ரீதியில் தீர்மானம் மேற்கொண்டுள்ளோம்.

பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடதம் வலியுறுத்தவுள்ளோம் என்றார்.