வேலைக்குச் செல்கிற பெரும்பாலான பெண்களை, அவர்களது கணவர்களும், கணவர் வீட்டாரும் விரோதியாகவே பார்ப்பது சகஜம்.

‘வேலைக்குப் போற திமிரு’, ‘சம்பாதிக்கிற கொழுப்பு’ என்கிற விமர்சனங்கள் சர்வசாதாரணமாக வரும். அவற்றை பெரிது படுத்த வேண்டாம்.

கணவர், அவரது பெற்றோர், கணவரது உடன்பிறப்புகள் என உங்களுக்கு நெருங்கிய வட்டத்துடன் நல்ல நட்பை வளர்த்துக்கொள்வதுதான் இதற்கு முதல் தீர்வு. 

வேலைக்குச் செல்கிற எல்லா பெண்களுக்கும், குழந்தைகளை யார் பொறுப்பில் விடுவது என்கிற கவலை பெரிதாக இருக்கும்.

பிள்ளைகளுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால், பெற்றோருக்கு அடுத்து, உடனடியாக தாத்தா- பாட்டிகளின் மனசுதான் பதறும்.

எனவே, அம்மா - அப்பா அல்லது மாமனார் - மாமியாரின் தயவைத் தக்க வைத்துக்கொள்ளும் டெக்னிக்கை கற்று வைத்திருப்பது நலம்.

சம்பளத்திலிருந்து ஒரு தொகையை அவர்களிடம் கொடுத்து, தேவையானதை வாங்கிக்கொள்ளச் சொல்லலாம். இன்னும் ஒருபடி மேலே போய், மொத்த சம்பளத்தையும் கூட அவர்களிடமே கொடுத்துவிட்டு, தேவைக்கேற்ப அவ்வப்போது பணம் வாங்கிக்கொள்ளலாம். அன்பாலும் பொறுப்பாலும் கட்டிப்போடுகிற இந்த டெக்னிக், உங்களுடைய பலவிதமான மன அழுத்தங்களை காணாமல் போகச் செய்யும்.

வேலை முடிந்து களைப்பாக வருவீர்கள்... அதுவரை குழந்தைகளை பார்த்துக்கொண்ட களைப்பில், சலிப்பில், விட்டால் போதும் என உங்களிடம் பிள்ளைகளை கொடுத்துவிட்டு, வெளியே போவார்கள், பெரியவர்கள்.

தேநீர் போட்டுக் கொடுக்கக்கூட ஆளிருக்காது. ‘என்ன சம்பாதிச்சு என்ன சுகத்தைக் கண்டோம்.... என்ன வாழ்க்கை’ என அலுப்பு வருவது இயற்கைதான். அதை கோபமாக வார்த்தைகளிலோ, செயல்களிலோ யாரிடமும் வெளிப்படுத்தாதீர்கள். ‘அம்மான்னாலே இப்படித்தான்.... எரிஞ்சு விழுவாங்க’ என்கிற எண்ணம் உங்கள்        பிள்ளைகளுக்குப் பதிந்துவிடும்.

நீங்கள் வேலைக்குப் போகத்தானே உங்கள் பிள்ளைகளை அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்... பெரியவர்கள் உதவியின்றி அது உங்களுக்கு சாத்தியமாகுமா என மாற்றி யோசித்துப் பாருங்கள். கோபத்தை ஓரங்கட்டி விட்டு, அவர்களுக்கும் ஒரு கப் தேநீர் கொடுத்து விட்டு, நீங்களும் காலை நீட்டிக்கொண்டு தேநீர் குடியுங்கள். அறக்க பறக்க அடுத்த வேலைகளைப் பார்க்க ஓடாமல், 10 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்யுங்கள்.