எப்போதும் பெண்கள் பெண்களுக்காக மட்டுமே குரல் கொடுப்பதாக சிலர், குறிப்பாக ஆண்கள் குறைபட்டுக்கொள்கின்றனர். அதில் பாதியளவே உண்மை இருக்கிறது.

உலகில் அதிகமான குற்றங்கள் பெண்களையும் சிறுவர்களையும் குறிவைத்தே இடம்பெறுகின்றன என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

அதனால்தான் பெண்களுக்கு எதிரான அநீதிகளை பெண்களே சுட்டிக்காட்டி கேள்வி கேட்க வேண்டிய கட்டாய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு எதிர்க்குரல் எழுப்புபவர்களில் எண்ணற்ற ஆண்களும் அடங்குகின்றனர். அவர்கள் பெண்களிடத்தில் பிரயோகிக்கப்படும் பாலியல் அத்துமீறல்கள், குடும்ப வன்முறைகள், கொலைகள், ஏமாற்றுச் செயல்கள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் போன்றவற்றை கண்டித்து கருத்துகளை வெளியிடுகின்றனர்.

பெண்களின் வேண்டுகோள்களிலும் கோரிக்கைகளிலும் போராட்ட சிந்தனைகளிலும் உள்ள நியாயங்களை ஆண்களில் பெரும்பாலானோர் புரிந்துகொண்டுள்ளனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

அதேபோல் ஆண்கள் மீது கையாளப்படும் குற்றச் செயல்களை ஆண் - பெண் பேதமின்றி சகலரும் எதிர்த்து முறையிடுகின்றோம்.

எனினும், சில சந்தர்ப்பங்களில் ஆண் - பெண் இரு தரப்பினருக்குள் அடிக்கடி ஏற்படும் எதிரெதிர் தகராறுகள், பிரச்சினைகளில் பாலின பேதம் பார்க்கப்படாமல் குறித்த அந்த ஒரு பிரச்சினையை பற்றி மட்டுமே பேசுகின்ற தன்மையும் நம்மிடையே உண்டு.

ஆனாலும், எல்லோரும் அப்படி நடந்துகொள்வதில்லையே!

‘நானொரு ஆண் என்றும் பார்க்காமல்  என்னையே எதிர்த்து கை நீட்டிப் பேசுறியா?’ என்று சபையில் ஒருவர் பொருமினால், அங்கே பெண்களும் தம் பக்க நியாயத்தை பேசவே தலைப்படுவர். அத்தோடு அங்கே ஆணாதிக்கத்தை தூற்றவும் முற்படுவதையும் நாம் பார்க்கிறோம்.

ஓரிடத்தில் ஒரு பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிடும்போது, அந்த பிரச்சினைக்கு மூல காரணம் என்ன என்பதை பற்றி மட்டுமே சிந்தித்து, அதற்கு தீர்வு காண்பதை பற்றி யோசிக்க வேண்டும்.

அவ்வாறன்றி பேசவேண்டிய விடயத்தை விட்டுவிட்டு ‘நீ அப்படி... நான் இப்படி...’, ‘இது ஆம்பளைங்க புத்தி...’, ‘இந்த பொம்பளைங்கள பத்தி தெரியாதா’ என்றெல்லாம் வீணே அலட்டுவது, வெறும் வேடிக்கையான பேச்சாகவே இருக்கும்.

ஒன்றுகூடலின்போது முக்கிய தீர்மானமொன்றை எடுக்கவேண்டிய தருணத்தில், தீவிரமான கலந்துரையாடலுக்கு மத்தியில் சிலர் விடயத்துக்கு கொஞ்சமும் பொருந்தாத கருத்துக்களை பற்றி கதையாடுவது பலரை முகம் சுளிக்க வைக்கக்கூடும்.

சரி, பெண்களுக்காக மட்டுமே ஏன் பெண்கள் பேசுகிறார்கள் என்ற கேள்விக்கு மீண்டும் வருவோம்.

அண்மையில் சில யுவதிகளை பேருந்துப் பயணத்தின்போது அவதானிக்க முடிந்தது.

பொது போக்குவரத்து வாகனத்துக்குள் அந்த யுவதிகள் ஒருவருக்கொருவர் சத்தமாக பேசி, சிரித்து, கிண்டல் செய்துகொண்டு வந்தனர்.

அப்போது நடத்துநர் அருகில் வந்து கட்டணக் காசை பெற நின்றபோது அவரிடமும் ஏதேதோ சொல்லி சிரித்துக்கொண்டனர்.

அடுத்து, தெருவில் நிற்பவர்களை பார்த்து, கேலியாக விமர்சித்தனர். தரிப்பிடத்தில் இறங்கும் சில ஆண்களையும் விட்டு வைக்காமல் கிண்டல் செய்தனர்.

அப்போது அந்த பெண்கள் நடந்துகொண்ட விதம் நிச்சயமாக சக பயணிகளுக்கு அறுவறுப்பை உண்டாக்கியிருக்கக்கூடும்.

அதில் ஒரு நடுத்தர வயதுப் பெண் இப்படி சொன்னார்:

“எப்படிப் பேசிக்கிறாங்க பாருங்க..... பொம்பள பிள்ளைகள இப்படியா வளர்க்கிறது? இதுவே பசங்க இந்த மாதிரி கேலி பண்ணா சும்மா இருப்பாங்களா? சும்மா இருக்கிற ஆம்பள பிள்ளைகள சீண்டிப் பார்க்கிற வேலதானே இது...”

அவருக்குள் இருந்த கோபமும் அந்த யுவதிகள் பற்றிய எண்ணமும் இயல்பாக தோன்றிய ஒன்றே. அங்கே அவர் ஒருசில பெண்களின் போக்கை தவறு என ஏற்கக்கூடிய ஒருவராகவே இருந்தார்.

ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு எப்போதும் பரிந்து பேசுவதில்லை என்பதற்கு உதாரணம் இந்த ஒருவர் மட்டுமல்ல........

பெண் என்கிற ஒரே ஒரு காரணத்தால் எந்த ஒரு பெண்ணும் சக பெண்களின் அநீதியை, குற்றத்தை, தவறை, கொடுமையை, பாவச் செயல்களை, முறையற்ற வாழ்க்கையை, வழி தவறிய நடத்தையை  பொறுத்துக்கொள்வதில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்!

-மா. உஷாநந்தினி