ரு நாள் தந்தையொருவர் தன் மகனை ஒரு பெரிய கூடாரத்திற்குள் அழைத்துச் சென்றார். அங்கு பெரிய கண்ணாடித் தொட்டியொன்று வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கண்ணாடித் தொட்டி முழுவதும் அழுக்குத் தண்ணீர்.

அந்த தந்தை தன் மகனை தொட்டிக்கு அருகில் அழைத்துச் சென்று, "இதன் வழியாக உத்துப்பார். உனக்கு ஏதாவது தெரியுதா?" என்றார். மகனும் உற்றுப் பார்த்தான் எதுவும் தெரியவில்லை.

தந்தை மகனைப் பார்த்து, “இந்தத் தொட்டியின் மறுபக்கத்தில் நான் உனக்காக ஒரு வாசகம் எழுதி வைத்துள்ளேன். தொட்டி முழுவதும் அழுக்கு தண்ணீர் என்பதால் அவ் வாசகம் உன் கண்களுக்கு தெரியவில்லை.

நான் இன்று உனக்கு வைக்கும் சோதனை என்னவென்றால், சரியாக ஒரு மணிநேரத்துக்குள் தொட்டிக்கு அந்தப் பக்கத்திலுள்ள வாசகத்தை எனக்கு வாசித்து சொல்ல வேண்டும். ஆனால், அதற்கு மூன்று நிபந்தனைகள் உண்டு.

ஒன்று, இந்தத் தொட்டியினுள் இருக்கும் நீரை எக்காரணம் கொண்டும் வெளியேற்றக் கூடாது. இரண்டு, இந்தக் கூடாரத்தை விட்டு எங்கேயும் வெளியே போகக்கூடாது. மூன்று, யாரையும் துணைக்கு அழைக்கக்கூடாது” என்றார்.

என்ன செய்வதென்று மகன் சிந்தித்தான். முதலில் அந்தக் கூடாரத்திற்குள்ளே ஏதாவது பொருள் கிடைக்குமா என்று தேடிப் பார்க்கையில் நீளமான இரும்புக்கம்பி ஒன்று கிடைத்தது. சிந்தித்துக் கொண்டே மறுபடியும் கூடாரத்திற்குள் தேடிப் பார்த்தான். ஒரு மூலையில் ஒரு கற்குவியல் இருப்பதைப் பார்த்தான்.

அந்தக் கற்குவியலைச் சுற்றிப் பார்க்கையில், வண்ண வண்ண கற்கள் கிடந்தன. ஒவ்வொரு கல்லாய் எடுத்துப் பார்க்கும்போதுதான் அவன் கையில் வெள்ளை நிறத்தில் படிகாரம் கிடைத்தது.

படிகாரத்தை அழுக்கு நீருக்குள் போட்டு கலக்கிவிட்டால் அந்த அழுக்கெல்லாம் படிந்துவிடும் என்பது அவனுக்கு நினைவில் வர, அந்தப் படிகாரத்தை தூள் தூளாக்கினான்.

அந்தத் தூளைக் கொண்டுபோய் அந்த அழுக்கு நீருக்குள் போட்டு, ஏற்கனவே அவனுக்குக் கிடைத்த இரும்புக்கம்பியால் அதை நன்றாக கலக்கிவிட்டான். சிறிது நேரத்திற்குள் அதற்குள் இருந்த அழுக்கெல்லாம் படிந்து தண்ணீர் முதல் இருந்ததை விட இப்போது கொஞ்சம் தெளிவாக இருந்தது. அந்தப் பக்கம் எழுதியிருந்த வாசகம் ஓரளவுக்கு தெளிவாகத் தெரிந்தது.

அவன் அவ்வாசகத்தை வாசித்துவிட்டு, தன் தந்தையிடமும் சென்று அவ் வாசகத்தைக் கூறினான்.

‘குழம்பிய மனதோடு எந்தவொரு முடிவையும் எடுக்காதே’ என்று கூறி முடித்ததும், அந்த சோதனையில் அவன் வெற்றி பெற்றதாகக் கூறி, அவனை வாழ்த்தியனுப்பினார்.

நமது வாழ்க்கையில் நாம் எடுக்கும் முடிவு முக்கியமானது. குறிப்பாக, பிரச்சினை வரும்போது எடுக்கும் முடிவுகள், எதிர்காலத்தைப் பற்றிய முடிவுகளை எடுக்கும்போது எமது மனம் தெளிவாக இருந்தால்தான் முடிவுகள் சரியாக இருக்கும்.

பல நேரங்களில் தெளிவான மனநிலையிலிருந்து எடுக்க வேண்டிய முடிவுகளை குழம்பிய மனநிலையிலிருந்து எடுக்கிறோம். ஒருவேளை இந்தத் தவறை நாம் செய்துவிட்டால், அடுத்து என்ன செய்யவேண்டும் தெரியுமா? சிந்தனை, நிதானம், நேரம் என்கிற படிகாரங்களை பயன்படுத்தி மனதை தெளிய வைத்துவிட்டு, அதன் பிறகு முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

அப்போதுதான் நாம் எடுக்கும் முடிவுகள் நமது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.

-பிருந்தா மகேந்திரன்