ன்று பலருடைய பிரச்சினைகளுக்கும் புலம்பலுக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று கோபத்தை கட்டுப்படுத்த முடியாமை ஆகும். கோபத்தை கட்டுப்படுத்த தெரியாமல் எத்தனையோ பேரின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகியிருக்கிறது என்பது வருந்தத்தக்க உண்மை.

கோபம் ஒரு உளவியல் நோய். பொதுவாக மனிதர்கள் தாங்கள் நினைத்தபடியே எல்லாம் நடக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாக இருப்பதே கோபத்துக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

நமக்குப் பிடித்தமானவர்கள் நாம் சொல்வதை கேட்க வேண்டும் என்றே நாம் ஒவ்வொருவரும் நினைக்கிறோம். அது நடக்கவில்லை என்றால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இது உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பாரிய மாற்றத்தை தோற்றுவிக்கக்கூடியது. இதன் காரணமாகவே எமக்கு கோபம் வருகிறது. கோபம் வந்தவுடன் நாம் என்ன செய்கின்றோம், என்ன வார்த்தைகளை கொட்டுகின்றோம் என்பது எமக்கே தெரிவதில்லை. இதனால் பல விடயங்களை இழக்க நேரிடுகிறது. இன்னும் சிலருக்கு தாம் செய்த பிழைகளை ஏற்றுக்கொள்ளும் மனம் துளியளவும் கிடையாது. இதுவும் கோபத்துக்கு முக்கிய காரணம்.

நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். பல சந்தர்ப்பங்களில் நாம் நினைத்தபடி எம்மாலேயே நடந்துகொள்ள முடிவதில்லை. அப்படியிருக்கையில், பிறர் நாம் சொன்னதை அப்படியே கேட்க வேண்டும் என நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது புரியாத காரணத்தினாலேயே கோபத்தால் பல தவறான முடிவுகளை எடுத்துவிடுகின்றோம். பின்பு யோசித்தால், சரிசெய்யவே முடியாத அளவு விளைவுகளை கோபம் ஏற்படுத்திவிடுகிறது.

போர்க்களத்தில் ஆயிரம் வீரர்களை வெல்பவனை விட கோபம் வரும்போது தன்னை தானே அடக்கிக்கொள்பவனே சிறந்த வீரன். கோபத்தை அடக்குவது மிக வலிமையான செயல்.

கோபத்துக்கு முக்கிய காரணம் ஈகோ. நான், எனது கருத்து, எனது மதிப்பு, எனது உரிமை என சிந்திப்பதே இந்த ஈகோ. கோபம் உண்டாவதால் உடல் நிலையில் உடனே பாதிப்புகள் நேரும். உடல் இறுகும், நரம்புகள் புடைக்கும், இதயத்துடிப்பு அதிகமாகும், மூச்சு விடும் வேகம் அதிகரிக்கும். இதனால் உடலில் சர்க்கரையின் அளவு வெகுவாக அதிகரிக்கும்.

இந்த கோபத்துக்கு காரணம் என்ன?

சில மணிநேரம் கழித்து சிந்தித்துப் பார்த்தால், பெரிய நஷ்டமோ கஷ்டமோ தராத சில அற்ப விடயங்களுக்காகவே வீணாக கோபப்பட்டிருப்போம்.

கோபத்தை தடுக்க முடியவில்லை என்றால் கோபத்தின் தன்மையை கட்டுப்படுத்துங்கள். பல நேரங்களில் நாம் நம்மை சுற்றி கோட்டை கட்டிக்கொண்டு மூடிய மனதுடன் முடிவெடுத்துவிடுகிறோம். எதிரில் இருப்பவர் எத்தகைய எண்ணங்களுக்கும் மாற்றுக் கருத்து கொண்டிருக்கலாம் என்பதை மறந்துவிடுகிறோம்.

வயதானவர்களுக்கு இட்லி, தோசை பிடிக்கும் என்றால் இளைஞர்களுக்கு பீட்ஸாவும் பர்கரும் பிடிக்கும். உங்களுக்கு கர்நாடக சங்கீதம் பிடிக்கும் என்றால் இன்னொருவருக்கு பொப் இசை பிடிக்கும். எல்லாவற்றுக்கும் காரணம் ஒவ்வொருவருக்கும் இடையே விருப்பு - வெறுப்பு மாறுபடுவதுதான்.

உங்களுக்குள்ளது போன்று ‘நான்’, ‘எனது’, ‘எனக்கு பிடித்தது’ என்ற கருத்துக்கள் எதிரில் இருப்பவருக்கும் உண்டு. ‘நான் பெரியவன்’, ‘நான் எடுக்கும் முடிவு சரியானது’ என்கிற நினைப்பே பல நேரங்களில் நம்மை கோபப்பட வைக்கிறது.

அதிகமான கோபத்தை மனதில் அடக்கி வைத்திருப்பவர்களுக்குத்தான் அதன் பாதிப்புகள் அதிகம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டுமாயின், உள்நோக்கி உங்கள் கோபத்தை பாருங்கள்....

கோபத்தை அடக்க இன்னும் சிறந்த வழி, கோபம் வரும்போது ஒரு கண்ணாடி முன் நின்று உங்கள் முகம் மற்றும் உடல் போகின்ற போக்கை பாருங்கள். உடனே சிரிப்பு வந்துவிடும்.

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்... கோபம் என்பது மூளையில் ஏற்படும் சிறிய குழப்பம். அவ்வளவுதான். கோபம் உள்ளவர்களை ஆராய்ந்து பாருங்கள். அவர்களில் பலர் தன்னம்பிக்கை அற்றவர்கள்.

குடும்பத்தில், நிர்வாகத்தில் தங்களின் மதிப்பு, மரியாதை போய்விடுமோ என்ற பயம் உள்ளவர்கள்தான் அதிகம் கோபப்படுவார்கள், உரத்த குரலில் கோபத்தில் பேசுவார்கள்... ஆனால், அவர்கள் நிச்சயம் மனதளவில் கோழைகளே.

கோபத்தை பற்றி திருவள்ளுவர் குறிப்பிடுகையில், கோபத்தை விட மனிதனுக்கு கெடுதல் செய்யக்கூடியது உலகில் எதுவும் கிடையாது என்கிறார்.

கோபத்தை இல்லாதொழிக்க சிறந்த வழி ஒவ்வொரு நாளும் 'இன்று நான் கோபப்படக் கூடாது' என்று உறுதியாக இருங்கள். நீங்கள் கோபம் கொண்ட நாட்களை ஒரு குறிப்பேட்டில் பதியுங்கள். நீங்கள் தனியாக இருக்கும்போது அதனை எடுத்து படித்துப் பாருங்கள். உங்கள் மனம் தானாக மாற ஆரம்பிக்கும்.

ஓர் உண்மையை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த உலகில் உங்களை போன்று நீங்கள் மட்டும்தான். வேண்டுமானால், உங்கள் நிழல் உங்களை போன்று இருக்கலாம். ஆகையால், எதிரில் இருப்பவரை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் எண்ணங்களை எதிரில் இருப்பவர் சரியாக புரிந்துகொள்ளும் வகையில் சொல்லுங்கள். அவர் புரிந்துகொண்டால் தான் நீங்கள் சரியாக சொன்னதாக அர்த்தம்.

கோபம் மன அழுத்தத்துக்கு காரணமாகிறது. எனவே, கோபத்தை கட்டுப்படுத்த முயற்சியுங்கள். இல்லாவிடில், நாம் வாழ்வில் எதை அதிகம் விரும்புகின்றோமோ, அதையே கோபத்தால் இழக்க நேரிடும். ஆரோக்கியமானதும் மகிழ்ச்சியானதுமான வாழ்க்கைக்கு கோபத்தை தவிர்த்திடுங்கள்.

- எஸ். வினோஜா