( எம்.எப்.எம்.பஸீர்)

தொம்பே, மல்வானை - மாபிட்டிகம பகுதியில் 10 ஏக்கர் காணியை கொள்வனவு செய்து, அதில் அதி சொகுசு மாளிகை ஒன்றினை நிர்மாணித்ததன் ஊடாக  அரச பணத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி  முன்னாள்  நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் உறவினரான முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஸவின் கணவர் திருக்குமார் நடேசனுக்கும் எதிராக  தொடரப்பட்டுள்ள வழக்கை தொடர்வதா இல்லையா என்ற தீர்ப்பு  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும்  ஜூன் 3 ஆம் திகதி, அது குறித்த தீர்ப்பை வழங்குவதாக  கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர நேற்று ( 13 ) அறிவித்தார்.  

இனி மேல்  இவ்வழக்கில் சாட்சி நெறிப்படுத்தலை முன்னெடுக்கப் போவதில்லை என  சட்ட மா அதிபர் திணைக்களம் கம்பஹா மேல் நீதிமன்றுக்கு  கடந்த தவணையின் போது (கடந்த  மார்ச் 25 ஆம் திகதி) அறிவித்திருந்தது. 

கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி  நிமல் ரணவீர முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்,  வழக்குத் தொடுநர், முறைப்பாட்டாளர் சட்ட மா அதிபர் சார்பில் இவ்வழக்கை நெறிப்படுத்தும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஷனில்  குலரத்ன இதனை நீதிமன்றுக்கு அறிவித்திருந்தார்.

 ' கனம் நீதிபதி அவர்களே, வழக்குத் தொடுநர் தரப்பு அழைத்த முதலாவது சாட்சியாளர், தான்  வழக்குடன் தொடர்புடைய முறைப்பாட்டினை நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கவில்லை எனவும்  வழங்கிய வாக்கு மூலத்தில் காணப்படும் கையெழுத்தை ஏற்க முடியாது எனவும்  சாட்சியமளித்து தெரிவித்தார்.  

எனவே இந்த வழக்கில் இதற்கு மேல் சாட்சி நெறிப்படுத்த நான் எதிர்ப்பார்க்கவில்லை. ' என அவர் அப்போது தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து பிரதிவாதியான பசில் ராஜபக்ஷ சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான நவீன் மாரப்பன மற்றும் காமினி மாரப்பன ஆகியோரும் திருக்குமார் நடேசன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸும், முறைப்பாட்டாளர் தரப்பு வழக்கை முடிவுறுத்தியுள்ள நிலையில் தமது சேவை பெறுநர்களை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோரியிருந்தனர்.

இந் நிலையிலேயே, குறித்த கோரிக்கை தொடர்பிலான நீதிமன்றின் தீர்ப்பை நேற்று மே 13 ஆம் திகதி வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்த நிலையிலேயே, வழக்கு விசாரணைக்கு வந்தது.

நேற்று , இந்த வழக்கு  விசாரணைக்கு வந்த போது,  வழக்கின் பிரதிவாதிகளான பசில் ராஜபக்ஷ மற்றும்  திருக்குமார் நடேசன் ஆகியோர் மன்றில் ஆஜராகவில்லை.

நாட்டின் தற்போதைய சூழ் நிலையால் தனது சேவை பெறுநருக்கு மன்றில் ஆஜராக முடியவில்லை என பசில் ராஜபக்ஷ சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்தார்.

 தனது சேவை பெறுநர் மன்றில் ஆஜராகும் நோக்குடன் நாட்டுக்கு வந்ததாகவும் திடீர் சுகயீனம் காரணமாக அவராலும் மன்றில் ஆஜராக முடியாது போனதாக திருக் குமார் நடேசனின் சட்டத்தரணி குறிப்பிட்டார்.

 இந் நிலையில்,  முன் வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர நீதிமன்றின் தீர்மானத்தை ஜூன் 3 ஆம் திகதி அறிவிப்பதாகவும் அன்றைய தினம் இரு பிரதிவாதிகளும் மன்றில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

 நேற்று வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபருக்காக அரச சட்டவாதி கிரிஷாங்கா பெர்ணான்டோ மன்றில் ஆஜரானாரானமை குறிப்பிடத்தக்கது.