புதிய புத்தகத்தின் வாசனையை முகர்ந்து பார்த்திருக்கிறீர்களா? பிரியாணியின் வாசனையை ரசித்துள்ளீர்களா? வாசனைத் திரவியத்தின் நறுமணத்தில் கிறங்கியுள்ளீர்களா? இவற்றையெல்லாம் செய்யாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

வாசனை... அது ஓர் அலாதியான ரசனை. மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் கிடைத்த வரம் என்றே கூறலாம். புலன்களில் மூக்குக்கு உண்டான சிறப்பு, ஒரு வாசனையை வைத்து அது தேவையா இல்லையா என்பதை முடிவு செய்வது.

வாசனை என்றவுடன் நினைவுக்கு வருவது பெரும்பாலும் பூக்கள்தாம். பூக்கள் அதிக நறுமணத்தைக் கொண்டுள்ளதாலும் மென்மையானது என்பதாலும் அவை முதலில் நினைவுக்கு வரலாம்.

பூக்கள் மட்டுமின்றி ஒவ்வோர் இடங்களுக்கும் ஒவ்வொரு பொருள்களுக்கும் ஏன், ஒவ்வொரு உயிரினத்திற்கும் கூட ஒவ்வொரு வாசனை இருக்கிறது.

பேனா மையின் வாசனை, மழையின் வாசனை, இயற்கையின் வாசனை, கோவில்களின் வாசனை, பிறந்த குழந்தையின் வாசனை, உடலின் வாசனை என நறுமணங்கள் ஏராளம்.

அதேநேரத்தில் சாக்கடையின் நாற்றம், கழிவுநீரின் நாற்றம், இரத்தத்தின் நாற்றம் என்று  துர்நாற்றங்களும் இருக்கின்றன. நறுமணங்கள் முகம் மலர வைக்கின்றன.

நாற்றங்கள் முகம் சுழிக்க  வைக்கின்றன.

அதுபோல வாசனையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை. சிலருக்கு சில வாசனைகள் மிகவும் பிடிக்கும், சிலருக்கு அவை பிடிக்காது. உயிரினத்திற்கு உயிரினம், பிடித்த வாசனை, பிடிக்காத வாசனை என்று வேறுபடுகிறது.

நறுமணங்களில் உணவின் வாசனையையே ரசித்து ருசிப்பவர்கள் பலர். சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது பல அடி தூரத்திலேயே கட்டி இழுக்கும் அந்த உணவு. நமக்கு மிகவும் பிடித்த உணவு என்றால் அதன் வாசனையை முகர்ந்து பார்த்துவிட்டு, சாப்பிடாமல் போவது இயலாத காரியம்.

இதில் நறுமணம், துர்நாற்றம் இரண்டுமே நம் வாழ்வின் பல நிகழ்வுகளுடன் தொடர்புடையவை. வாழ்க்கையின் குறிப்பிட்ட தருணங்களுக்கு அவை அழைத்துச் செல்பவை.

ஒவ்வொரு பொருள்கள், இடங்களில் இருந்து வரும் வாசனைக்கும் மனிதனின் நினைவுகளுக்கும் இடையில் உள்ள தொடர்புகள் ஏராளம். இந்த வாசனைகள் நினைவுகளைத் தூண்டுபவை என்பதுதான் சமீபத்திய ஆராய்ச்சி. மனதின் அடி ஆழத்தில் இருக்கும்   நினைவுகளைத் தூண்டவல்ல சக்தி வாசனைக்கு உண்டு என்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.  வாசனைகள் மனிதனின் உணர்ச்சிகளுடன் தொடர்புடையவை என்றும் கூறப்படுகிறது.

மூக்கு, நாசித் துளைகள் இணைந்ததே நமது வாசனை அமைப்பு (ஆல்ஃபாக்டரி சிஸ்டம்) என்பது.

இவற்றுக்கும் மூளையின் ஹிப்போகாம்பஸ் பகுதிக்கும் தொடர்பு உள்ளது. வாசனைகளை முகர்ந்து பார்க்கும் ஆல்ஃபாக்டரி சிஸ்டம் பல்வேறு உறுப்புகளுடன் தொடர்புடையது. ஒரு  வாசனை மூக்கின் வழியே நுகரப்பட்டு மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறது. இதனால் வாசனைகள் மூலமாக நினைவுகள் தூண்டப்படுகின்றன. வாசனை காற்றின் மூலமாக மூக்கின் வழியே  நுகரப்பட்டு மூளைக்குத் தகவல்களை அனுப்பி நினைவுகளை மீட்டுத் தருகிறது.

ஹிப்போகாம்பஸ், மூளையின் நினைவாற்றல், இன்பம், வலி மற்றும் உந்துதல் போன்றவற்றுக்கு உதவுகிறது. மேலும், புதிய நினைவுகளை உருவாக்கும் திறனில் இது  முக்கியப் பங்கு வகிக்கிறது. வாசனைகளையும் நினைவுகளையும் சேமித்து வைத்துள்ள ஒரு தற்காலிக அமைப்பு என்று இதைக் கூறலாம்.

மனிதன் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் இது பொருந்தும். அதுபோல வாசனைகள் வெவ்வேறு உணர்ச்சிகளுடன் தொடர்புடையவை. சில வாசனைகள் கோபத்தைத் தணிக்கும்; சில வாசனைகள் கோபத்தைத் தூண்டும்.

இவ்வாறு  உணர்ச்சிகளை அதிகப்படுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் கூட வாசனைகள் காரணமாகின்றன.

நறுமணத்தை வைத்து சில சிகிச்சை முறைகள் கூட கையாளப்படுகின்றன.

வாசனை முகரப்பட்டவுடன் ஒரு சில மைக்ரோ வினாடிகளில் இந்த நினைவலைகள் எழும்புகின்றன. தனிப்பட்ட நினைவுகளை நினைவு கூர வேறு எந்த உணர்ச்சி குறிப்பையும் விட வாசனை ஒரு வலுவான தூண்டுதலாகச் செயல்படுகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் போக்கவும் நறுமணங்களை பயன்படுத்தலாம். நாம் என்ன நினைக்கிறோம் என்ன மனநிலையில் இருக்கிறோம் என்பதை சுற்றுச்சூழல் தானே தீர்மானிக்கிறது? நம்முடைய மனநிலைக்கும் வாசனைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

இயற்கையான இடங்களுக்குச் செல்லும்போது மனம் இன்பத்தில் அலைபாயும் அல்லவா? அது காட்சிகளால் மட்டுமல்ல. அந்த இயற்கையான சூழலில் உள்ளநறுமணங்கள் ஏற்படுத்தும் அதிசயமும்தான்.

கொரோனா தொற்றுநோயின் அறிகுறிகளில் ஒன்று வாசனை இழப்பு. கொரோனா நோயாளிகளில் 86% பேர் முகரும் திறனை இழக்கிறார்கள் என்றும் ஆறு மாதங்களுக்குள், அவர்களில் 95% பேர் தங்கள் முகரும் திறனைத் திரும்பப் பெறுகிறார்கள் என்பதும் கணக்கெடுப்பு. கரோனா நோயாளிகள் பலரும் மனதளவில் சோர்ந்து போக  இந்த  வாசனை இழப்பும் ஒரு காரணமாகிறது.

ஒவ்வொரு வாசனையும் எண்ணிலடங்கா நினைவுகளை நம் முன்னே கொட்டுகிறது. ஒரு வாசனையை நுகரும்போது உங்கள் மனதுக்கு பிடித்தமான ஒருவர் கூட நினைவுக்கு வரலாம். அவர்சார்ந்த நினைவலைகள் என அது தொடரும்.

வாசனையின் ரசனை ஓர் இனிமையான அனுபவம்.

நறுமணங்களை முகர்ந்து உங்கள் உடலையும் மனதையும் புத்துணர்வுடன் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வாசனையின் பின்புலத்தில் உள்ள உங்களின் நல்ல நினைவலைகளை அசைபோட்டு வாழ்க்கையின் இன்பத்தை உணருங்கள்.