இயக்குநர் எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஆர். ஆர். ஆர்' எனப்படும் 'ரணம் ரத்தம் ரௌத்திரம்' திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா மட்டுமல்லாமல் உலகமெங்கும் வெளியாகி இந்திய மதிப்பில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படம் 'ஆர் ஆர் ஆர்.' 'பாகுபலி' இயக்கிய இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, பொலிவுட் நடிகை ஆலியா பட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 

இந்த திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி உலகமெங்கும் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் வெளியானது.

தற்போது இந்த திரைப்படம் மே மாதம் 20ஆம் திகதியன்று ஜீ5 எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 மே மாதம் 20ஆம் திகதி இப்படத்தில் நடித்த நடிகர் ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாள் என்பதாலும், இப்படம் வெளியாகி 50 நாள் கடந்து விட்டதாலும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

 பட மாளிகை பார்வையாளர்களைப் போல் தற்போது டிஜிட்டல் தளத்தில் பார்வையிடும் இணைய தலைமுறை ரசிகர்களும் உருவாகி வருகிறார்கள். அவர்களின் வரவேற்பை 'ஆர் ஆர் ஆர்' பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.