( எம்.எப்.எம்.பஸீர்)

பொய்யான  தகவல்களை முன்வைத்து முறையற்ற விதத்தில் இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை, அதனை உடன் வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள  இரு வழக்குகளின்  தீர்ப்பு  மூன்றாவது தடவையாக நேற்று ( 13) மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.  

எதிர்வரும் மே  27 ஆம் திகதிவரை இவ்வாறு குறித்த தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

 இந்த வழக்குகள் நேற்று ( 13) கொழும்பு  பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போதே  தீர்ப்புக்கான திகதி இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டது.

பொய்யான தகவல்களை முன்வைத்து முறையற்ற விதத்தில் இராஜதந்திர கடவுச்சீட்டினை பெற்றுக்கொண்டதன் ஊடாக குடிவரவு மற்றும் குடியகழ்வு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் புரிந்துள்ளதாக குற்றஞ்சுமத்தி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சஷி வீரவன்சவிற்கு எதிரான இந்த வழக்குகள் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்டது. 

இவ்வழக்கு தொடர்பில்  சி.ஐ.டி. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் உள்ள  இலக்கம் 74, ஜே. மங்கள மாவத்தை, ஹோகந்தர எனும் முகவரியில் வசிக்கும் விமலின் மனைவியான ரணசிங்க ரந்துனு  முதியன்சலாகே  ஷிர்ஷா உதயந்தி எனும் பெயரை உடைய ஷஷி வீரவங்க நேற்று வழக்கு தொடர்பில் மன்றில் ஆஜராகியிருந்தார்.

இலக்கம் 233/16, ரத்நாயக்க மாவத்தை தெற்கு தலங்கம , பத்தரமுல்லை  பிரதேசத்தை சேர்ந்த சமிந்த பெரேரா என்பவர் இந்த விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி.யினருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முறையிட்டிருந்தார்.

 அது முதல் சுமார் 7 ஆண்டுகள் இந்த  விடயத்தின் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்றன.

கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதிக்கும் 2015 பெப்ரவரி மாத்ம் 26 ஆம் திகதிக்கும்  இடைப்பட்ட காலத்தில் , கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற அதிகார எல்லைக்கு உட்பட்ட கொழும்பில் வைத்து  குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதிவாதி ( ஷஷி வீரவங்ச) டி. 3642817  எனும் இலக்கத்தை உடைய முறையற்ற கடவுச் சீட்டினை எந்த சட்ட ரீதியிலான அடிப்படைகளும் இன்றி உடன் வைத்திருந்தமை ஊடாக  1993 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கம், 1998 ஆம் ஆண்டின் 42 ஆம்  இலக்கம் மற்றும் 2006 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ( திருத்தம்) சட்டங்கள் ஊடாக திருத்தப்பட்ட 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 45 (1) ஆம் அத்தியாயத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக  வழக்குகள் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.