(நா.தனுஜா)

புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவது குறித்து பாராளுமன்றத்தில் எதிரணியைச்சேர்ந்த பிரதான தமிழ்க்கட்சிகள் வெவ்வேறு நிலைப்பாடுகளை அறிவித்துள்ளன. 

அதன்படி ரணில் விக்ரமசிங்கவிற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும், அவரை முழுமையாக எதிர்ப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் அவர் தலைமையிலான அரசாங்கம் செய்கின்ற சிறந்த விடயங்களை ஆதரிக்கத்தயாராக இருப்பதாகத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் தெரிவித்துள்ளன.

நாடு கடந்த பல மாதங்களாகப் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்வதன் ஊடாகவே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணமுடியுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவந்தனர். 

இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் எதிரணியிலுள்ள மூன்று பிரதான தமிழ்க்கட்சிகளான இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்பன பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குமா? என்று அக்கட்சிகளின் பிரதிநிதிகளிடம் வினவியபோது, அவர்கள் மேற்குறிப்பிட்டவாறு தமது நிலைப்பாடுகளைத் தெரிவித்தனர்.

அதன்படி இவ்விடயத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய அதன் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பின்வருமாறு குறிப்பிட்டார்:

பொதுவாக அரசாங்கம் செய்யக்கூடிய சிறந்த விடயங்களுக்கு ஆதரவு வழங்குவதும், தவறான விடயங்களை எதிர்ப்பதுமே கூட்டமைப்பின் வழமையாக இருந்துவருகின்றது. அவ்வாறிருக்கையில் தற்போது நாட்டின் பொருளாதார நிலைவரத்தைக் கருத்திற்கொண்டு நோக்குகையில் அரசாங்கமொன்று இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. 

அதுமாத்திரமன்றி ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனவே இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாமாக வலிந்துசென்று அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளமாட்டோம். அதேவேளை அரசாங்கம் செய்கின்ற சரியான விடயங்களை நாங்கள் ஆதரிப்போம் என்று தெரிவித்தார்.

 அதேவேளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட இந்த அரசாங்கத்தைக் கடுமையாக எதிர்ப்போமே தவிர ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டோம் என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஓர் இனப்படுகொலையாளி என்றும், அவரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவேண்டும் என்றும் நாம் நீண்டகாலமாகக் கூறிவந்திருக்கின்றோம். 

தற்போது சிங்கள மக்களே அவரை நிராகரிக்கின்ற நிலையொன்று தோற்றம்பெற்றுள்ளது. அவ்வாறிருக்கையில் ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்பதென்பது அந்த அரசாங்கத்திற்கு சுவாசம் கொடுப்பதாகவும், ராஜபக்ஷாக்களைப் பாதுகாப்பதுமாகவே அமைகின்றது. எனவே நாம் பாராளுமன்றத்தில் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பை வெளியிடுவோம் என்று கூறினார்.

எனினும் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கக்கூடிய இயலுமைகொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தற்போதைய சூழ்நிலையில் அரசியல் பிரச்சினையை மேலும் நீடித்துக்கொண்டு சென்றால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் என்று சுட்டிக்காட்டினார்.

'பாராளுமன்றத்தில் தொடர்ந்து அங்கம்வகித்து வந்திருப்பதுடன், ஏற்கனவே 5 முறை பிரதமராகவும் பதவி வகித்திருக்கின்ற ரணில் விக்ரமசிங்கவிற்குத் தற்போதைய நெருக்கடியைக் கையாளக்கூடிய இயலுமை இருக்கின்றது.

 அவர் பிரதமராகப் பதவியேற்றவுடன் மேற்குலக நாடுகள் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருப்பதுடன், டொலரின் பெறுமதியும் குறிப்பிடத்தக்களவால் குறைவடைந்திருப்பதாக அறியமுடிகிறது. எனவே இந்த நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்காக குறுகிய காலத்திற்கு அவருக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம்' என்றார். 

இருப்பினும் கடந்த தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு, தேசியபட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு தேர்வான ஒருவரைப் பிரதமராக நியமிப்பது மக்கள் ஆணைக்கு முரணான செயல் என்று முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் வினவியபோது அவர் பின்வருமாறு பதிலளித்தார்.

இதற்கும் மக்கள் ஆணைக்கும் எவ்வித தொடர்புமில்லை. மக்கள் ஆணையின் பிரகாரம் ஒருவரைப் பிரதமராக்கவேண்டுமானால் க.பொ.த சாதாரணதரப்பரீட்சையில் சித்தியடையாத ஒருவரைத்தான் தெரிவுசெய்யவேண்டும். சிலவேளைகளில் மக்களின் ஆணை தவறானதாகவும் இருக்கலாம் என்று தெரிவித்தார்.