(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி ஒரு வாரத்தால் பிற்போடப்பட்டுள்ளது.

14 கழகங்கள் பங்குபற்றும் சம்பியன்ஸ் லீக் சுற்றுப் போட்டியை நேற்று வெள்ளிக்கிழமை (13) ஆரம்பிப்பதற்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் திட்டமிட்டிருந்தது.

எனினும் நாட்டில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுலில் இருப்பதால் சம்பியன்ஸ் லீக்கை பிற்போட நேரிட்டதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்தது.

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டி கடைசியாக 2019இல் நடத்தப்பட்டபோது டிபெண்டர்ஸ் எவ்சி சம்பியனானதுடன் கலம்போ எவ்சி இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தது.

கொரோனா தொற்று காரணமாக சம்பியன்ஸ் லீக் போட்டி 2020, 2021களில் நடத்தப்படாததுடன் 3 வருடங்களின் பின்னர் இவ் வருடம் நடத்தப்படவுள்ளது.

சுமார் 70 மில்லியன் ரூபா செலவில் நடத்தப்படும் இவ் வருட சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் பங்குபற்றும் 14 கழகங்களுக்கும் தலா 25 இலட்சம் ரூபா வழங்கப்படும். 

இதனை விட சம்பயினாகும் கழகத்தக்கு 10 இலட்சம் ரூபா பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 750,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்படும்.

கிறிஸ்டல் பெலஸ் (கம்பளை). ஜாவா லேன் (கொம்பனித் தெரு), மாத்தறை சிட்டி, மொரகஸ்முல்ல, நிகம்போ யூத், நியூ ஸ்டார் (மாளிகாவத்தை), பெலிக்கன்ஸ் (குருநாகல்), சோண்டர்ஸ் (ப்ரைஸ் பார்க்), செரண்டிப் (மாவனெல்லை), பொலிஸ், இலங்கை போக்குவரத்துச் சபை, சொலிட் (அநுராதபுரம்), சென். மேரிஸ் (யாழ்ப்பாணம்), சுப்பர் சன் (பேருவளை) ஆகிய 14 கழகங்கள் இம்முறை போட்டியிடுகின்றன.