(எம்.மனோசித்ரா)

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கான நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச ஒத்துழைப்பு பேரவையொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , இது குறித்து அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட பன்னாட்டு தூதுவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடினார். 

அத்தோடு பிரித்தானிய உயர்ஸ்தானிகருடனும் இது தொடர்பில் தொலைபேசியில் பிரதமர் கலந்துரையாடியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பித்தார். 

இதன்போது  ஊழியர்கள் மத்தியில்  உரையாற்றிய பிரதமர்,  நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை உறுதி செய்வதே பிரதமர் என்ற ரீதியில் தனது ஒரே நோக்கம் என்று கூறினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் சீன தூதவர்  யி சியான்லியாங் ஆகிய இராஜதந்திரிகளுடன் தீர்க்கமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்தியா

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுடனான சந்திப்பின் போது, பொருளாதார மீட்சிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. 

இதன் போது இலங்கைக்கு தொடர்ந்தும் இந்தியா ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.

ஜப்பான்

இதே வேளை பிரதமருடனான சந்திப்பின் போது , இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக ஜப்பான் தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்கும் என ஜப்பான் தூதுவர் உறுதியளித்தார். அத்தோடு இலங்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக டோக்கி செல்லவுள்ளதாகவும் இதன் போது ஜப்பான் தூதுவர் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு உதவுவதற்காக ஏனைய வெளிநாடுகளின் உதவிகளைப் பெறுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இரு தூதுவர்களும் கலந்துரையாடினர்.

அமெரிக்கா

அமெரிக்காவின் திறைசேறி திணைக்கள குழுவொன்று இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அமெரிக்க தூதுவரிடம் கேட்டறிந்து கொண்டார். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் பாராளுமன்ற கண்காணிப்பு குழுவை பலப்படுத்தல் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டது.

சீனா

பிரதமரை சந்தித்த சீன தூதுவர் இலங்கைக் தொடர்ந்தும் உதவுவதற்காக சீனாவின் விருப்பத்தை உறுதிப்படுத்தினார். அத்தோடு இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள உதவிகள் தொடர்பில் மீளாய்வு செய்வதாகவும் குறிப்பிட்டார்.

பிரித்தானியா

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் அந்நாட்டுக்குச் செல்ல முன்னர் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவருடன் தொலைபேசியில் உரையாடினார், அவர் இலங்கையின் நிலைமைகள் குறித்து பிரித்தானிய அரசாங்கத்திற்கு விளக்கமளிப்பதாகக் கூறினார்.

முன்னாள் அமைச்சர்களுடனான சந்திப்பு

இதே வேளை முன்னாள் அமைச்சர்களான காஞ்சன விஜேசேகர மற்றும் சுசில் பிரேமஸயந்த உள்ளிட்டோருனும் எரிபொருள் மற்றும் வலுசக்தி தொடர்பில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இதன் போது எரிபொருள் நெருக்கடிக்கான தீர்வு மற்றும் மக்களின் சுமைகளை குறைத்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.