(என்.வீ.ஏ.)

தாய்லாந்தின் பாங்கொக், குவீன் சேர்க்கிட் ஞாபகார்த்த விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு விழாவுக்கான ஆடவர் ஹொக்கி தகுதிகாண் சுற்றில் பி குழுவில் இடம்பெறும் இலங்கை 1 - 3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இந்தோனேசியாவிடம் தோல்வி அடைந்தது.

இதன் காரணமாக ஆசிய விளையாட்டு விழாவுக்கு தகுதிபெறுவதற்கான இலங்கையின் வாய்ப்பு நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்கிறது.

தகதிகாண் சுற்றில் இரண்டு குழுக்களில் பங்குபற்றிய 10 நாடுகளில் ஏ குழுவிலிருந்து ஓமான், தாய்லாந்து ஆகிய நாடுகளும் பி குழுவிலிருந்து பங்களாதேஷ், இந்தோனேசியா ஆகிய நாடுகளும் ஆசிய விளையாட்டு விழா ஆடவர் ஹொக்கி போட்டியில் விளையாட தகதிபெற்றன.

இந்த நாடுகள் தத்தமது குழுக்களில் முறையே முதல் இரண்டு இடங்களைப் பெற்றன.

இந் நிலையில் தகுதிகாண் சுற்றில் 5ஆம், 6ஆம் இடங்களைப் பெறும் நாடுகளும் ஆசிய விளையாட்டு விழா ஆடவர் ஹொக்கியில் விளையாட தகுதிபெறும்.

பாங்கொக்கில் நாளை சனிக்கிழமை (14) நடைபெறவுள்ள 5ஆம் இடத்திலிருந்து 8ஆம் இடம்வரை நிரல்படுத்தும் போட்டிக்கான அரை இறுதிகள் நடைபெறவுள்ளன.

ஓர் அரை இறுதியில் ஹொங் கொங்கை எதிர்த்தாடும் இலங்கை வெற்றிபெற்றால் ஆசிய விளையாட்டு விழாவில் பங்குபற்ற தகுதிபெறும். தோல்வி அடைந்தால் அந்த வாய்ப்பு அற்று போகும்.

இந்தோனேசியாவிடம் இலங்கை தோல்வி

பி குழுவுக்கான தீர்மானமிக்க போட்டியில் இந்தோனேசியாவை வியாழக்கிழமை (12) எதிர்த்தாடிய இலங்கை 1 - 3 என்ற கோல்கள் அடிப்படையில் தோல்வி அடைந்தது.

அப் போட்டியின் முதலாவது கால் மணி நேர ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் போட்டிருக்கவில்லை.

இரண்டாவது கால் மணி நேர ஆட்டத்தில் 19ஆவது நிமிடத்தில் பெனல்டி கோர்ணர் கோல் ஒன்றை குசல் வீரப்புலி போட்டு இலங்கையை முன்னிலையில் இட்டார்.

ஆனால், இந்தோனேசியா சார்பாக மறுநிமிடமே பெனல்டி கோர்ணர் கோல் போட்ட ரிவோ ப்ரிலாண்ட்ரோ, கோல் நிலையை 1 - 1 என சமப்படுத்தினார்.

இடைவேளையின்போது கோல் நிலை 1 - 1 என சமநிலையில் இருந்தது.

3ஆவது கால் மணி நேர ஆட்டத்தில் 41ஆவது நிமிடத்தில் அல்ஃபண்டி ப்ராஸ்டியோவும் 43ஆவது நிமிடத்தில் அப்துல்லா அல் அக்பரும் கள கோல்களைப் போட்டு இந்தோனேசியாவை வெற்றிபெறச் செய்தனர்.

4ஆவது கால் மணி நேர ஆட்டத்தில் எந்த அணியும் கோல் போடவில்லை.