மலையக அரசியலில் இ.தொ.காவின் அடுத்த நகர்வு என்ன ?

13 May, 2022 | 04:13 PM
image

தேசியன்

பிரதமராக ரணில் விக்கிரமசிங்க கோலோசிய நல்லாட்சி காலத்தை, மலையக மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். 1977 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மாறி மாறி வந்த அரசாங்கங்களுக்கு ஆதரவு தந்து, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவி, பிரதி அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுப்பதவிகளை தன் வசம் கொண்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது முதன் முறையாக எதிரணியில் இரண்டு எம்.பிக்களுடன் அமர்ந்த சந்தர்ப்பம் அது.

மலையகத்தின் அசைக்க முடியாத அரசியல் பிரமுகராக வலம் வந்த அமரர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் முத்து சிவலிங்கம் இருவர் மாத்திரமே 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்தவின் பக்கத்துக்கு ஆதரவு வழங்கி வெற்றி பெற்ற தமிழ் உறுப்பினர்களாவர்.

நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் முற்போக்குக்கூட்டணியாக இணைந்த பி.திகாம்பரத்தின் தொழிலாளர் தேசிய சங்கம், வே.இராதாகிருஷ்ணனின் மலையக மக்கள் முன்னணி மற்றும் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர்கள் நுவரெலியா ,கண்டி, பதுளை, கொழும்பு என வெற்றி வாகை சூடி ஆறு பேராக பாராளுமன்றம் சென்றனர். 

இதில் மனோ கணேசன் மற்றும் திகாம்பரத்துக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப்பதவிகளும் வே.இராதாகிருஷ்ணனுக்கு இராஜாங்க அமைச்சும் கிடைத்தன. ரணிலின் ஆசிர்வாதத்தால் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் நிலத்தில் காணி உறுதியுடன் தனி வீடமைப்புத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தியாவின் உதவிகளும் பெற்றுக்கொள்ளப்பட்டன. ஒரு அரசாங்கத்தின் ஊடாக ஒரு சமூகத்துக்கு இந்தளவுக்கு அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுக்க முடியுமா என ஆச்சரியம் முதன் முறையாக மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் அந்த சமூகத்துக்கும் ஏற்பட்டது மாத்திரமின்றி கடந்த கால மலையக பிரதிநிதித்துவங்கள் குறித்த விமர்சனங்களும் எழுந்திருந்தன. 

மலையக சமூகத்துக்கென விசேட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க மலையக அபிவிருத்தி அதிகார சபை உருவாக்கப்பட்டது. தோட்டப்புறங்களில் பிரதேச சபைகள் சேவையாற்ற தடையாக இருந்த பிரதேச சபை சட்டமூலம் நீக்கப்பட்டது. அரசாங்கத்தின் நிர்வாக கட்டமைப்புகள் தோட்ட மக்களை சென்றடைய வேண்டுமென நுவரெலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச செயலக அதிகரிப்புக்காக அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டு வர்த்தமானி அறிவித்தலும் பெறப்பட்டது.

இவ்வாறாக திருப்திகரமான அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருக்கும் போதே நான்கு வருடங்களை நல்லாட்சி கடந்த சில மாதங்களில் அரசியல் நெருக்கடிகளை ஜனாதிபதி மைத்ரிபால உருவாக்கி திடீரென மஹிந்தவை பிரதமராக்கினார்.

அதன் பிறகு நடந்தவற்றை நாடே அறியும். நல்லாட்சி அரசாங்கத்தின் பல பணிகள் பூர்த்தி செய்யப்படாமலேயே ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று கோட்டாபய ஜனாதிபதியானார்.

பின்னர் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் பொது ஜன பெரமுன மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றியீட்டியது. தேர்தலுக்கு முன்பதாக இ.தொ.கா பொதுச்செயலாளர் ஆறுமுகன் திடீர் மரணத்தைத் தழுவவே, அவரது மகன் ஜீவன் இளம் வயதில் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரானார். அவருக்கு தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் வீடமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சும் வழங்கப்பட்டது.

அவரோடு உறுப்பினரான ம.ராமேஷ்வரனும் பாராளுமன்ற உறுப்பினரானார். ஆனால் பொதுஜன பெரமுனவின் இரண்டரை வருட ஆட்சியில் மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் மலையக சமூகத்துக்கும் இராஜாங்க அமைச்சர் ஜீவனால் குறிப்பிடத்தக்கதாக எதுவுமே செய்ய முடியாது போனது. தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை, மலையக பல்கலைக்கழகம், நியமனங்கள் வழங்கப்படாது இழுத்தடிக்கப்பட்ட உதவி ஆசிரியர் விவகாரங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் , வீடமைப்பு என ஒரு விடயத்திலும் பொது ஜன பெரமுன அரசாங்கம் மலையக மக்களையும் ஜீவன் தொண்டமானையும் கண்டு கொள்ளவில்லை. இதன் தொடர்ச்சியாக பொருளாதார நெருக்கடி எழவே அரசாங்கத்தின் மீதான வெறுப்புணர்கள் மலையகத்திலும் எதிரொலித்தது.

வேறு வழியின்றி இ.தொ.கா அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் வாங்கிக்கொண்டது. சுயாதீனமாக இயங்கப்போகிறோம் என்று கூறி பிறிதொரு சந்தர்ப்பத்தில் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் நடுநிலை வகிப்போம் என்று கூறி கடும் விமர்சனத்துக்குள்ளானது இ.தொ.கா. பின்னர் இல்லை அரசாங்கத்துக்கு எதிராகவே வாக்களிப்போம் என்று சமாளித்தது. தற்போது ரணில் விக்ரமசிங்க பிரதமரானவுடன் முதன் முதலாக அவருக்கு வாழ்த்துச் செய்திகளை முகநூலில் பதிவேற்றிய மலையக பிரதிநிதி ஜீவன் தொண்டமான் தான்.

இ.தொ.கா அரசாங்கத்தின் பக்கம் தொடர்ந்தும் இருக்கின்றதா இல்லையா என்ற குழப்பம் பலருக்கு இன்னும் உள்ளது. ஆனால் புதிய தேசிய அரசாங்க அமைச்சரவையில் இ.தொ.கா அங்கம் வகிப்பதானது , அதன் ஆதரவாளர்களை எந்தளவுக்கு ஈர்க்கப்போகின்றது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி தாம், சஜித்து அணியின் கொள்கையுடன் இருப்பதாக அறிவித்து விட்டது.

 ஆகையால் அனைத்து கட்சிகள் மற்றும் சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவையில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைச்சர் நிச்சியமாக நியமிக்கப்படப்போகின்றார். அது நிச்சியமாக இ.தொ.காவையே போய் சேர உள்ளது. ஆனால் தமது நிலைப்பாடு பற்றி இன்னும் பிரதமர் ரணிலுடன் உரையாடவில்லையென இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.

பொது ஜன பெரமுன அரசாங்கத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பெறத் தவறியவற்றை மலையக மக்களுக்கு பிரதமர் ரணில் நிச்சயமாகப் பெற்றுக்கொடுக்கப்போவதில்லை. இப்போதிருக்கும் சூழ்நிலையில் அது சாத்தியமும் இல்லை. மேலும் நல்லாட்சி காலத்தில் தன்னுடன் அமைச்சர்களாக கடமையாற்றிய தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்கள் ரணில் நன்கறிவார். நல்லாட்சி காலத்தில் அவர் அமரர் ஆறுமுகனை கண்டு கொள்ளாமலிருந்ததற்குக் காரணம் அதிகாரம் இருந்த காலப்பகுதியில் அவர் தமது சமூகத்துக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதாகும்.

ரணில் விக்ரமசிங்க தன்னுடன் இருப்பவர்களிடமிருந்து கூடுதல் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் எதிர்ப்பார்க்கும் ஒருவர். ஆனால் தற்போதுள்ள இ.தொ. காவின் உறுப்பினர்கள் இருவரும் ரணிலின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு அரசியல் அனுபவம் பெற்றவர்கள் அல்லர். இவர்கள் பாராளுமன்றத்துக்கும் புதியவர்கள். 

ஆகவே அமைச்சுப்பதவியை பெற்றாலும் இ.தொ.காவானது பொது ஜன பெரமுன காலத்து அரசியலை ரணிலிடம் செய்ய முடியாது. இதை இ.தொ.கா உணர்ந்து கொள்ளல் அவசியம். அதே வேளை அமைச்சுப்பதவியை பொறுப்பேற்று விட்டு, உங்களுக்காகவே இவ்வாறு செய்தோம் என தமது பிரதேச மக்களிடம் சென்று சமாதானம் பேசும் வேலைகளை இ.தொ.கா செய்ய முடியாது. எனவே அமைச்சுப் பொறுப்பை ஏற்பதா அல்லது அரசாங்கத்துக்கு ஆதரவு தந்து கொண்டே பாராளுமன்றில் இயங்குவதா என்பது பற்றி இவர்கள் ஆலோசிக்க வேண்டும். அமைச்சுப்பதவியை எடுத்து அதிலுள்ள சலுகைகளை தாம் மட்டும் பெற்று . 

பின்பு ரணிலும் ஒன்றும் செய்யவில்லையென அவரை விமர்சிப்பதை விட, இப்போதே சில தீர்க்கமான முடிவுகளை இ.தொ.கா எடுக்க வேண்டும். ஏனென்றால் நுவரெலியா மாவட்டத்திலுள்ள மக்கள் பொது ஜன பெரமுன அரசாங்கத்திடம் மாத்திரம் வெறுப்பை கொண்டிருக்கவில்லை….மாறாக அந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்து இறுதியில் அவர்கள் ஒன்றுமே எமது மக்களுக்கு செய்யவில்லையென கைவிரித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடமும் வெறுப்பை கொண்டிருக்கின்றனர் என்பது முக்கிய விடயம்.

தற்போதைய சூழ்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.காவின் செல்வாக்கு பலமாக வீழ்ச்சியடைந்துள்ளது. தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் செல்வாக்கு அப்படியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனாவின் உத்தரவாதத்தை நாணய நிதியம் ஏற்குமா...

2023-01-26 11:08:36
news-image

கலிபோர்னிய படுகொலைகள் - அச்சத்தில் குடியேற்றவாசிகள்

2023-01-25 16:09:51
news-image

வேட்பாளர்கள் தெரிவு முறையாக இடம்பெற்றதா?

2023-01-23 12:59:05
news-image

அபிவிருத்தி அடைந்து வரும் சந்தைகளுக்கான பாதை

2023-01-23 11:56:08
news-image

பசி எப்படி இலங்கையில் மாணவர்கள் பாடசாலைக்கு...

2023-01-23 10:23:25
news-image

மாநகர சபையானது  திருமலை நகரசபை ‘ஒரு...

2023-01-22 16:51:40
news-image

இஸ்லாமிய மதகுருமார்களின் பிரபலம் தேடும் பயணத்திற்கு...

2023-01-22 16:50:47
news-image

பதவி விலகும் ஜெசிந்தா ஆர்டன் ‘சீரிய...

2023-01-22 16:14:50
news-image

இரண்டும் கெட்டான் மனநிலை

2023-01-22 16:14:03
news-image

இரத்தக்களரியை எதிர்நோக்கும் பெரு

2023-01-22 16:30:38
news-image

மாட்டுகின்ற முன்னாள் ஜனாதிபதிகள்

2023-01-22 16:04:46
news-image

தேர்தல் கால அமைச்சுப் பதவிகள்

2023-01-22 15:42:23