Published by T. Saranya on 2022-05-13 12:26:20
எதிர்வரும் வைகாசி 02ம் நாள் திங்கட் கிழமை (16.05.2022)அன்று வைகாசி விசாகம் விரத தினமாகும்.
வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர விரத தினம் பல் வேறு புனிதங்கள் கொண்டது.
தைப்பூசம்,மாசிமகம்,பங்குனி உத்தரம்,சித்திரா பௌர்ணமி,போன்று வைகாசி விசாகமும் தெய்வீக சிறப்பு மிக்க தினமாகும். கலியுகவரதனாகிய தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் அவதரித்தது இத்தினத்திலேயாகும்.
கொடுமைகளை தாங்க முடியாத அமரர்கள் ஈசனைவேண்டிய போது,சத்யோஜாதம், வாமதேவம், அஹோரம், தற்புருஷம், ஈசானம், அதோமுகம் என தனது நெற்றிக்கண்ணில் தோன்றிய ஆறு முகங்களை தீப்பொறிகளாகக் கொண்டு தோற்றுவிக்கப்படதே கந்தனின் அவதாரம்.
ஆறு தீப்பொறிகளும் சரவணபவப் பொய்கையிலே ஆறு தாமரை மலர்களை ஆலிங்கனம் செய்ய ஞானம்,ஐஷ்வர்யம்,அழகு, வீரியம்,வைராக்கியம்,புகழ் என ஆறு குணங்கள் கொண்ட ஆறு குழந்தைகள் தோன்றின.இவ்வாறு குழந்தைகளும் திருக்கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டனர்.
ஒரு சமயம் பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒன்றாக அணைக்கும் போது பன்னிரு விழிகளுடனும், பன்னிரு கரங்களுடனும்,ஆறு முகப் பெருமான் அவதரித்தார்.அன்றைய சிறப்பு தினமே "வைகாசி விசாகம் "ஆகும்.
ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பே விசாக நட்சத்திரம். வைகாசி விசாக விரதத்தை முழுமையாக கடைபிடித்தால் ஷஷ்டி விரதம் இருந்த பலனை அடையலாம் என முருக புராணம் கூறுகின்றது.
காக்கும் கடவுளான விஷ்ணு,அழிக்கும் கடவுளான ஈசன்,படைக்கும் கடவுளான நான்முகன் ஆகிய மும்மூர்த்திகளும் பிரணவப் பொருளான முருகனுக்குள் அடக்கம்.
முருகு என்றால் அழகு,இளமை என பொருள்.விசாக நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன் என்ற பெயரும் முருகனுக்குண்டு. தமிழகத்தில் அறுபடை வீடுகளிலும் ஏனைய ஆலயங்களிலும்"வைகாசி விசாக திருநாள் "வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்படுவது வழக்கம்.
இலங்கையில் முருகன் ஆலயங்களிலும்,மற்ற ஆலயங்களிலும் இவ்விழா புனிதமாக போற்றப்படுவது சிறப்பு. ஷஷ்டி என்றால் ஆறு என அர்த்தம். ஆறாம் எண்ணிற்கு தனிச்சிறப்பு இருப்பதாக பாம்பன் சுவாமிகள் 6666 முருகப்பெருமான் சிறப்பு பாடல்களை பாடியுள்ளார்.
விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரம் அவதரித்ததும் இவ்வைகாசி விசாகத்தன்றே. திருமழப்பாடி என்ற ஊரில் சிவன் திருநடனம் ஆடியதும் இத்தினத்திலே.தர்மத்திற்கு அதிபதியான எமதர்மராஜன் அவதரித்ததும் ஓர் வைகாசி விசாகத்தன்றே.பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் ஈசனிடம் "பாசுபதம்"என்ற அதிசக்தி வாய்ந்த அஸ்திரம் பெற்ற நாளும் இத்தினமே.
சோழப் பேரரசான ராஜ ராஜ சோழனின் சரித்திரத்தை நாடகமாக தஞ்சை தரணியில் அரங்கேற்றம் செய்வதும் இவ்வைகாசி விசாக நந்நாளிலே என, தஞ்சை பெரியக் கோவில் கல் வெட்டில் இருப்பதாக தொல்பொருள் ஆய்வு கூறுகின்றது. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பிறந்த தினமும் வைகாசி விசாகமே. வடலூரில் ராமலிங்க வள்ளலார் சுவாமிகள் "சத்யஞான சபை"யை தோற்றுவித்ததும் இப்புனித நாளிலேயாகும்.சித்தார்த்தர் ஆகிய கௌதம புத்தர் அவதரித்ததும்,ஞானம் பெற்றதும் ஓர் வைகாசி விசாக நந்நாளிலேயாகும். இத்தினத்தில் பௌத்த மதத்தை பின்பற்றும் மக்கள் புனித நந்நாளாக அனுஷ்டிப்பர் .
தமிழ்க் கடவுளான ஸ்ரீ முருகப்பெருமானின் பூரண அனுக்கிரஹம் வாய்ந்த இச்சிறப்பு நந்நாளில் விரதம் மேற்கொண்டு வரும் பட்சத்தில் இப்பிறவிப் பயனை அடையலாம் என ஸ்ரீ முருக புராணமும்,நக்கீரர் பெருமான் ஆற்றிய திருமுருகாற்றுப்படையும் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. இவ்வகிலம் உய்ய இப்புனித நந்நாளில் ஸ்ரீ முருகப்பெருமானை பூரண நல்லெண்ணத்துடன் வேண்டிப் பிரார்த்திப்போமாக.
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை