( குமார் சுகுணா )

உலக வல்லரசு  நாடுகளுக்கே சவால் விட்டுக்கொண்டிருக்கின்ற வித்தியாசமான தலைமைத்துவத்தினை கொண்ட நாடு எதுவென்றால் அது வடகொரியாதான். 

சர்வாதிகார ஆட்சியாளரை கொண்ட நாடு என விமர்சிக்கப்படுகின்றது.

இந்த நாட்டின் ஜனாதிபதி மிக மிக வித்தியாசமான ஒரு நபர் . 

அந்த நாட்டில் ஆட்சி எப்படி நடக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா … ஜனநாயகம் நிலைத்து நிற்கிறதா என்பதெல்லாம் மிக பெரியளவிலான சந்தேகங்களை எழுப்புகின்றனவாகவே இருக்கின்றன.

அந்நாட்டு ஜனாதிபதி எப்போது பிறந்தார் என்ற தெளிவு இல்லை.

ஆண்டுகளை அவர் விரும்பியது போல மாற்றிக்கொண்டுள்ளார். 

தவறு செய்பவர்களுக்கு நாயை கடிக்கவிட்டு தண்டணை கொடுப்பார், ரயிலில் மட்டுமே பயணிப்பார் . விமானத்தை கண்டால் பயம். 

அதில் பயணிக்க மாட்டார் என்ற கதைகள் எல்லாம் உள்ள நிலையில் உலக நாடுகளை பயமுறுத்தும் வகையில் சர்வதேச சட்டங்களுக்கு மாறாக அடிக்கடி அணுஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி உலகை அச்சப்படவும் வைக்கின்றார்.

இந்நிலையில் உலக வல்லரசான அமெரிக்கா தொட்டு நமது நாடான இலங்கை வரை உலகம் முழுவதனையும் கடந்த 2019இன் இறுதியில் இருந்து வாட்டி வதைத்துக்கொண்டிருக்கின்ற கொரோனா தொற்று வடகொரியாவிற்குள் மட்டும் நுழையவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

ஆனாலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் அங்கு கண்டுப்பிடிக்க பட்டதுமே அவர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டத்தாகவும். 

கொரோனா காலத்தில் வடகொரியா எல்லைக்குள் அத்துமீறி நுழைபவர்கள் சுடப்படுவதாகவும் அப்போது செய்திகள் வெளியாகின. 

மேலும் அந்த நாடு இரும்பு சுவர்களினால் மூடப்பட்டது போல கொரோனா பேரழிவுகாலத்தில் இருந்ததாகவும். அந்நாட்டு ஜனாதிபதி கொரோனா தொற்றுக்கு அஞ்சி பதுங்கு குழியில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

2019 ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று பரவத்தொடங்கியதிலிருந்து, வடகொரியா நேற்றுமுன்தினம் வரை, தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லையென்று கூறிவந்தது.

 அதுமட்டுமல்லாமல் உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, வடகொரியாவின் 2020 ஆண்டு இறுதியில் நடத்தப்பட்ட 13,259 கொரோனா பரிசோதனை முடிவுகளும் அவ்வாறே இருந்தது. 

தற்போது, கொரோனா வைரஸும் உருமாற்றம் அடைந்து, டெல்டா ,ஒமிக்ரான் வகை என பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகளவில் பரவத்தொடங்கியுள்ளது. 

இந்த நிலையில், வடகொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லாதிருந்த நிலையில், தற்போது முதல்முறையாக புதிதாக  ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து வடகொரியா முழுவதும் ஊரடங்கை அமுல்படுத்த ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

இதனை, `நாட்டின் கடுமையான அவசரகால நிகழ்வு' என ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக, வடகொரியா உயரதிகாரிகள் அடங்கிய குழுவுடன் நடத்திய பொலிட்பீரோ கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், ``குறுகிய காலத்துக்குள் கொரோனா தொற்றின் வேரை அகற்றுவதே எங்களின் குறிக்கோள். 

மேலும், மக்களின் உயர் அரசியல் விழிப்புணர்வின் காரணமாக, நிச்சயமாக அவசரநிலையை சமாளித்து, தனிமைப்படுத்தலை நாங்கள் வெல்வோம். 

அதுமட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும், மாவட்டங்களிலும் உள்ள தங்கள் பகுதி மக்களை முழுமையாகத் தடுப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

2019 இல் இருந்து உலகையே ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸ் பல நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தின. 

ஆனால் 15 நாடுகளில் யாரையும் தாக்கவில்லை. வடகொரியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா  தாக்கம் இல்லை. 

அதிலும் குறிப்பாக இரும்புத்திரை நாடாக வர்ணிக்கப்படும் வடகொரியாவில் எந்த பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. 

வட கொரியாவில் யாருக்கும் கொரோனா  தொற்று ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை என உலக சுகாதார நிறுவனமும் கூறியது.. ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் சீனா தயாரித்த சினோவாக் தடுப்பூசிகள் வடகொரியாவுக்கு வழங்கப்பட்டன. 

ஆனால் சீனா தங்களுக்கு வழங்கிய சுமார் 30 இலட்சம் எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகளை வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுமாறு வடகொரியா கேட்டுக் கொண்டது. 

யாருக்குமே கொரோனா  இல்லாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா  தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என வடகொரியா  ஜனாதிபதி கிம் ஜாங் உன் அறிவித்தார்.

உலக சுகாதார அமைப்பின் தகவல்படி 2020 ஆம் ஆண்டின் இறுதியில் வட கொரியா 13,259 கோவிட் -19 சோதனைகளை நடத்தியது. ஆனால் யாருக்கும் கொரோனா  தொற்று இல்லை என முடிவு வந்தது.

வடகொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா  தொற்று உறுதி செய்யப்படவில்லை என கூறப்பட்டு வந்தது.

இந்த சூழலில் வட கொரியாவில் முதல் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதால் நாட்டில் "கடுமையான தேசிய அவசரநிலை" பிறப்பிக்கப்பட்டுள்ளது.