எஸ்.ஜே.பிரசாத்

ஆங்­கி­லே­ய­ருக்கு  எதி­ரான  கிளர்ச்­சி­யா­ளர்­க­ளையும் குற்­ற­வா­ளி­க­ளையும் தடுத்து நிறுத்த சிறை அமைப்பை அவர்கள் தொடங்­கினர்.  1844 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க சட்­டத்தின் மூலம் சிறைச்­சா­லை­களை நிறுவ நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. 

அதன்­படி வெலிக்­கடை சிறைச்­சாலை 1871 இல் நிறு­வப்­பட்­டது, மஹர சிறைச்­சாலை 1875 இல் மற்றும் போகம்­பறை சிறைச்­சாலை 1876 இல் நிறு­வப்­பட்­டது.

பிரான்ஸின் பாஸ்டில் சிறைச்­சா­லையின் கட்­டி­டக்­க­லையைப் போலவே, போகம்­பறை சிறைச்­சா­லையும் அப்­போ­தைய சிறைச்­சா­லை­களின் இன்ஸ்­பெக்டர் ஜெனரல் மற்றும் இன்ஸ்­பெக்டர் ஜெனரல் ஒவ் பொலிஸ் ஆகி­யோரின் மேற்­பார்­வையில் வடி­வ­மைக்­கப்­பட்டு ஆய்வு செய்­யப்­பட்­டது.

போகம்­பறை சிறைச்­சாலை கட்டிடமே ஆசி­யா­வி­லேயே மிக நீள­மான கட்­டிடம், எங்கும் காணப்­ப­டாத இந்தக் கட்­ட­மா­னது ஒரே அடித்­த­ளத்தில் கட்­டப்­பட்­டுள்­ளது. 

இது 556 அடி நீளமும், 244 அடி அக­லமும், 102 அடி உய­ரமும் கொண்­டது. 

சிறைச்­சா­லையின் அனைத்து கத­வு­க­ளையும் ஒரே சாவியால் திறக்க முடியும். 

இது "மாஸ்டர் கீ" என்று அழைக்­கப்­ப­டு­கி­றது. 

ஒவ்­வொரு ரகமான கைதி­க­ளுக்கும், அதாவது ஆயுள் தண்­டனை கைதி­க­ளுக்கும், சிவில் குற்­றங்­களில் தண்­டனை பெற்ற கைதி­க­ளுக்கும், சாதா­ரண குற்­றங்­களில் தண்­டனை பெற்­ற­வர்­க­ளுக்கும் தனித்­தனி அறைகள் இருந்­துள்­ளன.  மேற்குப் பகு­தியில் உள்ள மருத்­து­வ­மனை கட்­டிடம் கடு­மை­யான குற்­ற­வா­ளிகள் மற்றும் மரண தண்­டனை கைதி­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

மேற்படி சிறைச்­சாலை 3 தளங்கள் மற்றும் 328 அறை­களைக் கொண்­டுள்­ளது. ஆரம்­பத்தில் அர­சியல் கைதி­க­ளுக்கு ஒரு தனி பிரிவு, மத நட­வ­டிக்­கை­க­ளுக்­கான இடம், தச்சு வேலைக்­கான ஒரு கட்­டிடம் மற்றும் முடி வெட்­டு­வ­தற்கு ஒரு முடி­தி­ருத்தும் கடை ஆகி­ய­வையும் இருந்­துள்­ளன.

அப்­போ­தைய பொதுப்­ப­ணித்­துறை மற்றும் 92 கைதி­களின் உத­வி­யுடன் 408 கைதிகள் தங்கும் வகையில் இந்த சிறைச்சாலை கட்­டப்­பட்­டது. 

இங்கு முதல் ஜெயி­ல­ராக வெலிங்டன் செயற்­பட்டார்.

இது நாட்டின் இரண்­டா­வது பாது­காப்­பான சிறைச்­சா­லை­யாகும். இந்த சிறைச்­சாலை கட்­டப்­பட்ட பிறகு, அதில் மரண தண்­டனை அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. 

இங்கு ஒரே நேரத்தில் மூன்று பேருக்கான  தூக்கு தண்டனைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் தூக்கு மரங்­கள் இருந்துள்ளன. இங்கு கடை­சி­யாக 1975ஆம் ஆண்டு ஒருவர் தூக்­கி­லி­டப்­பட்டார். மொத்தம் 524 கைதிகள் தூக்­கி­லி­டப்­பட்­டுள்­ளனர். 

போகம்­பறை சிறைச்­சா­லையில் சிறை வைக்­கப்­பட்­டி­ருந்தவர்களுள்  குறிப்­பி­டத்­தக்­க­வர்­கள் சர­தியல், மரு­சிரா எனப்­படும் சிறி­பால, மற்றும் கொல்வின் ஆர். டி சில்வா, பிலிப் குண­வர்­தன மற்றும் வில்­லியம் டி சில்வா ஆகி­யோராவர்.  கண்­டியின் மையத்தில் கட்­டப்­பட்ட போகம்­பறை சிறைச்­சாலை 12 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் மூன்று மாடி­களில் கட்­டப்­பட்­டது. 

சிறைச்­சா­லையின் முன்­புறம் நுழை­வா­யிலில் உள்ள ஜெயி­லர்­களின் குடி­யி­ருப்பும் திறந்­த­வெ­ளியும், மதில் சுவர் கொண்ட பிர­தான கட்­டி­டத்தில் ஐந்­தரை ஏக்­கரும், மீத­முள்ள இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த சிறைக் குடி­யி­ருப்­பு­களும் இதில் அடங்கும்.

தற்­போது குற்­ற­வா­ளி­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டாலும், 1976 ஆம் ஆண்டு அதன் அமு­லாக்கம் நிறுத்­தப்­பட்­டது.  அப்­போது வெலிக்­கடை மற்றும் போகம்­பறை சிறைச்­சா­லையில் தூக்கு மேடைகள்  இருந்­தன.

ஆனால் இன்று வெலிக்­கடை சிறைச்­சா­லையில் மட்­டுதான் தூக்கு மேடை உள்­ளது. போகம்­பறை சிறைச்­சாலை தும்­ப­றைக்கு மாற்­றப்­பட்­டதன் மூலம் அங்கு இருந்த தூக்கு மேடையும் அகற்­றப்­பட்­டது.

போகம்பறை சிறைச்சாலையின் ஓய்வுபெற்ற சிறைச்சாலை ஆணையாளரான  சேனக்க ஸ்டெம்பு ஓய்வுபெற்று பின்னர் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருந்தார். 

அதிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ஒரு தூக்கு தண்டனை எப்படி நிறைவேற்றப்படு கின்றது என்பது இங்கே விவரிக்கப்படுகின்றது.

நீதி­மன்ற உத்­த­ரவைப் பெற்ற கைதி, வராந்தாவில்  பகல் பொழுதைக் கழிக்க வேண்டும் என்று உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டிருந்தது. தீர்ப்பு நாளில் கைதியை சிறையிலிருந்து அழைத்துச் செல்ல இரண்டு ஜெயி­லர்கள் செல்ல வேண்டும்.  இந்த கைதி  அழைத்து வரப்­பட்டு, பரி­சோ­தனை செய்­யப்­பட்டு பதிவு செய்­யப்­ப­டு­வார்.  

மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட கைதிக்கு ஒரு தலை­யணை, ஒரு மெத்தை உறை, ஒரு தட்டு, ஒரு போர்வை வழங்­கப்­ப­டு­கி­றது. 

  காலை­யிலும் மாலை­யிலும் அரை மணி நேரம் உடற்­ப­யிற்சி செய்ய வெளியே அழைத்துச் செல்­லப்­ப­டு­வார். 

அவ­ருக்கான  முடிவை எதிர்த்து மேல்­மு­றை­யீடு செய்­யவும் அவ­ருக்கு உரிமை உண்டு. 

சில நேரங்­களில் அவர்கள் மேல்­மு­றை­யீடு செய்­கி­றார்கள், ஆனால் சிலர் அதே முடிவைப் பெறு­கி­றார்கள். 

அந்த கைதியை அன்­றைய தினம் தூக்­கி­லி­டப்­போ­வ­தாக அப்­போ­தைய கவர்னர் ஜெனரல் தான் அறி­விப்பார்..

அது குறித்து சம்பந்தப்பட்ட கைதிக்கு பதி­னான்கு நாட்­க­ளுக்கு முன்­னரே அறி­விக்க வேண்டும். அதுதான் சற்று கடி­ன­மான விடயம். 

இந்த அறி­விப்பை கைதிக்கு கொடுத்த பிறகு அவ­ருக்கு பிடித்த உணவு மற்றும் பானத்தை அவர் கேட்டு பெற்­றுக்­கெ­ாள்ள­ளலாம்.   அவை சிறைச்­சா­லையால் வழங்­கப்­ப­டு­ம். 

அந்த நேரத்தில் மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட கைதி  ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒரு சிகரெட் கொடுக்­கப்­பட்­ட­தா­கவும் சொல்­லப்­ப­டு­கின்றது. 

கைதியின் இரத்த வாரி­சு­கள் அவரைப் பார்க்க முடியும். அதா­வது அம்மா, அப்பா, மனைவி, குழந்­தைகள். 

 மரண தண்டனை நிறைவேற்றப் படுவதற்கு முன் உற­வி­னர்கள் அவரைப் பார்க்க அனு­ம­திக்­கப்­ப­டுவர். 

மரண தண்­டனை கைதி­க­ளுக்கு சிறப்பு பாது­காப்பு அளிக்­கப்­ப­டு­கி­றது. இரவு நேரங்­க­ளிலும் அதி­கா­ரிகள் அவர்­களை சென்று பார்வையிடுவார்களாம். 

ஒரு ஜெயிலர் வந்து கைதியின் எடை­யை கணக்கிட்டு, அவ­ரது எடைக்கு ஏற்­ற­வாறு மணலை அளப்­பார்.  பின்னர் தூக்கு மேடை செயல்­ப­டுத்­தப்­பட தயா­ரா­குமாம். அதே போல ஒரு தச்சன் வந்து தூக்­கி­லி­டப்­ப­டு­ப­வரின் உய­ரத்தை அளந்து சவப்­பெட்­டியை தயார் செய்­வாராம். 

மனிதன் உயி­ருடன் இருக்­கும்­போதே  சவப்பெட்டி தயா­ரிக்­கப்­ப­டு­கி­றது.  சமீ­ப­கா­ல­மாக பல்­வேறு நாடு­களில் இருந்து இதற்கான கயி­றுகள் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­வ­தாக கூறப்­படுகிறது. 

கைதி தூக்­கி­லி­டப்­படும் நேரம் காலை எட்டு மணி , ஆனால் சிறைச்சாலை அதை 8 மணி 5 நிமி­டமாக நீ­டித்­தது. 

அந்த நபரை தூக்­கி­லிடக் கூடாது என்ற உத்­த­ரவு எந்த நேரத்­திலும் வரலாம் என்­ப­தற்­காக அனை­வரும் காத்­தி­ருப்­பார்­களாம். 

ஆனால் அத்­த­கைய செய்தி வரா­த­போது, சரியாக 8:05 மணிக்கு தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­கி­றது.

“அந்த நேரத்தில் கைதியின் விருப்­பப்­ப­டியும் அவர் நம்பும் மதத்­தின்­ப­டியும் ஒரு மதத் தலை­வரை அழைத்து வரலாம். 

கைதியின் கை, கால்கள் கட்­டப்­படும். தலை­யணை உறை­போன்ற ஒரு துணியால் தலை மூடப்­படும். அன்­றைய நாள் மர­ணத்­திற்கு அர்ப்­ப­ணிக்­கப்­பட்ட நபர்  சிறை­யி­லி­ருந்து தூக்கு மேடைக்கு கொண்டு வரப்படுவார். 

நடந்தே வரும் அந்தக் கைதியின் கால்கள் தூக்கு மேடையை நெருங்கியதும் பின்னர் நாம் பல திரைப்படங்களில்  பார்ப்பதுபோல தண்டனை நிறைவேற்றப்படும்... கைதியின் இறுதி மூச்சு அங்கே உள்ளிழுத்து வெளியிடப்படும்.

தூக்குக்கயிற்றிலிருந்து உடலை இறக்கி  கீழ் மேசையில் உடலை வைத்த பின், மருத்துவர் பரிசோதித்து கைதி இறந்துவிட்டதை உறுதி செய்வார். பின்னர் அவரது உடல் முதல் நாள்  நாள் தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, அவரது உடல் சிறையிலிருந்து வாகனத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது. 

உடல் பின்னர் அருகில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்படும். மரண தண்டனை இப்படித்தான் செயல்படுகிறது.