(என்.வீ.ஏ.)
மும்பை வான்கடே விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (12) நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்ட சென்னை சுப்பர் கிங்ஸை 5 விக்கெட்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது.
ஐபிஎல் 2022 அத்தியாயத்தின் இந்த 59ஆவது போட்டி, தற்காலிகமாக ஏற்பட்ட மின் கொளாறு காரணமாக சென்னை சுப்பர் கிங்ஸுக்கு துரதிர்ஷ்டவசமான போட்டியாக அமைந்தது.
இதன் காரணமாக தீர்மானங்களை மீளாய்வு செய்யும் கட்டமைப்பு (DRS) முதல் 2 ஓவர்களுக்கு இயங்காமல் போனது.
இந் நிலையில் டெனியல் சாம்ஸ் வீசிய முதலாவது ஓவரில் சென்னை சுப்பர் கிங்ஸின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டெவன் கொன்வே எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்ததாக கள மத்தியஸ்தர் சிரா ரவிகாந்த்ரெட்டி தீர்ப்பு வழங்கினார்.
டி.ஆர்.எஸ். முறை தற்காலிகமாக செயலிழிந்திருந்ததால் கொன்வேயினால் மீளாய்வு கோரமுடியாமல் போனது.
அடுத்த ஓவரில் ஜஸ்ப்ரிட் பும்ராவின் பந்துவீச்சில் ரொபின் உத்தப்பா எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்ததாக கள மத்தியஸ்தர் கிறிஸ் கஃபானி தீர்ப்பு வழங்கினார். DRS இயங்காததால் உத்தப்பாவாலும் மீளாய்வுக்கு செல்ல முடியவில்லை.
ஆனால், சலன அசைவுகளில் கொன்வெயின் padஇல் பட்ட பந்து விக்கெட்டுக்கு இடப்புறமாக அப்பால செல்வது தெளிவாக தெரிந்தது.
உத்தப்பாவின் padஇல் பட்ட பந்து விக்கெட்டில் படுமா இல்லையா என்பது தெளிவாக இருக்கவில்லை. அப் பந்து ஓவ் ஸ்டம்பில் பட்டும் படாமலும் செல்லக்கூடியதாக இருந்தது.
இந்த இரண்டு ஆட்டமிழப்புகளும் சென்னை சுப்பர் கிங்ஸ் இந்த வருட ஐபிஎல் அத்தியாயத்திலிருந்து வெளியேறுவதற்கு பிரதான காரணமாக அமைந்தன.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் 16 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 97 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
முதல் 2 ஓவர்களில் கொன்வே (0), மொயீன் அலி (0), ரொபின் உத்தப்பா (1) ஆகியோரின் விக்கெட்களை இழந்த சென்னை சுப்பர் கிங்ஸ், பவர் ப்ளே முடிவில் 5 விக்கெட்களை இழந்து 32 ஓட்ங்களைப் பெற்றிருந்தது.
ருத்துராஜ் கய்க்வாட் (7), அம்பாட்டி ராயுடு (10) ஆகிய இருவரே பவ்ர் ப்ளேக்குள் ஆட்டமிழந்த மற்றைய இருவராவர்.
8ஆவது ஓவரில் ஷிவம் டுபே 10 ஓட்டங்களுடன் 6ஆவதாக ஆட்டமிழக்க மொத்த எண்ணிக்கை 39 ஓட்டங்களாக இருந்தது.
இந்நிலையில் தனி ஒருவராக போராடிய அணித் தலைவர் எம்.எஸ். தோனி, 7ஆவது விக்கெட்டில் ட்வேன் ப்ராவோவுடன் 39 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
அதுவே சென்னை சுப்பர் கிங்ஸ் இன்னிங்ஸில் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.
ப்ராவோ 12 ஓட்டங்களைப் பெற்றதுடன் அடுத்துவந்த சிம்ரஜீத் சிங் (2), மஹீஷ் தீக்ஷன (0), முக்கேஷ் சௌதரி (4) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர்.
தோனி 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
மும்பை இண்டியன்ஸ் பந்துவீச்சில் டெனியல் சாம்ஸ் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குமார் கார்த்திகேயா 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரைலி மெரெடித் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 14.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 103 ஒட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஆரம்ப வீரர்களான இஷான் கிஷான் (6), அணித் தலைவர் ரோஹித் ஷர்மா (18) ஆகிய இருவரும் மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.
டெனியல் சாம்ஸ் (1), ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (0) ஆகிய இருவரும ஆடுகளம் நுழைந்த சொற்பநேரத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
திலக் வர்மா, ஹ்ரிதிக் ஷொக்கின் (18) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து மும்பை இண்டியன்ஸுக்கு நம்பிக்கை ஊட்டினர்.
திலக் வர்மா (34 ஆ.இ.), டிம் டேவிட் (16 ஆ.இ.) ஆகய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி மும்பை இண்டியன்ஸின் வெற்றியை உறுதிசெய்தனர்.
பந்துவீச்சில் முக்கேஷ் சௌதரி 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM