(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்தக்கட்ட அரசியல் தீர்மானம் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்.பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் பலவீனமடைவதற்கு அரசாங்கத்தின் ஒரு தரப்பினரது முறையற்ற செயற்பாடுகள் பிரதான காரணியாக அமைந்தது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

அரசாங்கத்தை அடியோடு வீழ்த்த விமலுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது - சாகர  காரியவசம் | Virakesari.lk

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் ஏற்பட்ட வெறுப்பு,கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் பலவீனமடைவ்ற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகித்த 11பங்காளி கட்சிகள் மூலகாரணியாக அமைந்துள்ளன.

அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு அரச செயற்பாடுகளை விமர்சித்து மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்தார்கள்.

காலி முகத்திடல் அமைதிவழி போராட்டகளத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இச்சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகிறதை அவதானிக்க முடிகிறது.

அரசியல் ஸ்தீரமற்ற தன்மை தீவிரமடைந்துள்ளது. பொருளாதார மீட்சிக்கு நாட்டில் ஸ்தீரமான அரசியல் கட்டமைப்பு காணப்பட வேண்டும்.நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு ஜனாதிபதி முன்னெடுக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள கூடியதாக அமையும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்தக்கட்ட அரசியல் குறித்து இவ்வாரகாலத்திற்குள் உறுதியான தீர்மானம் எடுக்கப்படும்.நாட்டு மக்களும் தவறான முறையில் வழிநடத்தப்பட்டுள்ளார்கள்.வெகுவிரைவில் அனைத்து உண்மைகளையும் பகிரங்கப்படுத்துவோம் என்றார்.