(என்.வீ.ஏ.)

ராஜஸ்தான் றோயல்ஸுக்கு எதிராக மும்பை டி.வை. பட்டில் விளையாட்டரங்கில் புதன்கிழமை (11) நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் ப்ளே ஓவ் சுற்றுக்கான போட்டித்தன்மை 5 அணிகளுக்கு இடையில் அதிகரித்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக ப்ளே ஓவ் சுற்றில் விளையாட தகுதிபெற்றுவிட்ட நிலையில் லக்னோ   சுப்பர் ஜயன்ட்ஸ் (16), ராஜஸ்தான் றோயல்ஸ் (14), றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் (14),  டெல்ஹி  கெப்பிட்டல்ஸ் (12), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (10) ஆகிய அணிகளுக்கு இடையில் 2அம், 3ஆம், 4ஆம் இடங்களுக்கான போட்டி நிலவுகின்றது.

மிச்செல் மார்ஷ், டேவிட் வோர்னர் ஆகியோருக்கு இடையில் 2ஆவது விக்கெட்டில் பகிரப்பட்ட 144 ஓட்டங்கள் டெல்ஹி கெப்பிட்டல்ஸின் வெற்றியை இலகுபடுத்தின.

ராஜஸ்தான்  றோயல்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 161 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 18.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

முதலாவது ஓவரில் ஓட்டம் எதுவும் இன்றி ஸ்ரீகர் பாரத்தின் விக்கெட்டை டெல்ஹி கெப்பிட்டல்ஸ் இழந்தபோதிலும் அவுஸ்திரேலியர்களான மார்ஷ், வோர்னர் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்து அணியின் வெற்றியை சுலபப்படுத்தினர்.

மிச்செல்  மார்ஷ்  7 சிக்ஸ்கள், 5 பவுண்டறிகளுடன் 89 ஓட்டங்களைக் குவித்ததுடன் டேவிட் வோர்னர் 52 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் ரிஷப் பன்ட் 13 ஒட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர்களான ஜொஸ் பட்லர் (7), யஷஸ்வி ஜய்ஸ்வால் (1() ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டமிழந்தனர். 

ஆனால், ரவிச்சந்திரன் அஷ்வின் 38 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 50 ஓட்டங்களையும் தேவ்தத் படிக்கல் 30 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 48  ஓட்டங்களையும்  பெற்று அணியைப் பலப்படுத்தினர்.

அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

மத்திய வரிசையில் ரஸி வென் டேர் டுசென் மாத்திரமே ஓரளவு திறமையை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் சேத்தன் சக்காரியா 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிச்செல் மார்ஷ் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அன்ரிச் நொக்யா 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.