(நெவில் அன்தனி)

இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த அண்டி மொறிசனும் உதவிப் பயிற்றுநராக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கீத் ஸ்டீவன்ஸும் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.

அடுத்த 3 வருடங்களுக்குள்   பலம்வாய்ந்த மற்றும் நவீன நுட்பங்களுடன் தேசிய அணியைக் கட்டியெழுப்புவதைக் குறிக்கோளாகக் கொண்டு கத்தார் அஸ்பயர் மன்றத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின் கீழ் புதிய பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

இந்த இரண்டு பயிற்றுநர்களுக்கும் அதி உயரிய கால்பந்தாட்ட விளையாட்டு பின்னணிகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தலைமைப் பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்கொட்லாந்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அண்டி மொறிசன் (51 வயது), ஐக்கிய ஐரோப்பிய தொழில்சார் பயிற்றுனருக்கான சான்றிதழைக் கொண்டவர். அத்துடன் ஆங்கிலேய பிறிமீயர் லீக் கால்பந்தாட்ட போட்டிகளில் மென்செஸ்டர் சிட்டி, கிறிஸ்டல் பெலஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடிவர். 

எல்லாவற்றுக்கும் மேலாக வேல்ஸ் தொழில்சார் கால்பந்தாட்டத்தில் கடந்த சில வருடங்களாக சம்பியன் அணிகளை உருவாக்கிய பயிற்றுநராவார்.

உதவி பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ள கீத் ஸ்டீவன்ஸ் (57 வயது), ஆங்கிலேய கால்பந்தாட்ட லீக்கில் (தொழில்சார்) 557 போட்டிகளில் விளையாடியவர். 

இங்கிலாந்தில் பிறந்து அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த இவர் ஆற்றல் மெம்பாட்டு பயிற்றுநராக  ஒவ்வொரு வீரரினதும் ஆற்றலை முன்னேற்றுவதற்கு அவர்களுடன் இணைந்து செயற்படவுள்ளார்.

இவர்கள் இருவரும் நாளை வெள்ளிக்கிழமை இலங்கையை வந்தடைவர் என ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, வெளிநாட்டு கோல்காப்பாளர் பயிற்றுநர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதுடன் அவர் விரைவில் இலங்கை அணியினருடன் இணைவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் 1995இல் நடைபெற்ற சார்க் தங்கக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் சம்பியனான இலங்கை அணியின் உதவிப் பயிற்றுநராக இருந்த பிரேஸில் நாட்டைச் சேர்ந்த மார் க்கஸ் ஃபெரெய்ரா, உடற்தகுதி பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சில மாதங்களுக்கு முன்னரே இலங்கை வந்துவிட்டார்.

உஸ்பெகிஸ்தானில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஏ.எவ்.சி. ஆசிய தகுதிகாண் கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ள தேசிய அணிக்கு    மொறிசன்,  ஸ்டீவன்ஸ்  மற்றும் மார்க்கஸ் ஆகிய மூவரும் பொறுப்பேற்று தீவிர பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.

இதேவேளை, கத்தார் அஸ்பயர் மன்றத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின்கீழ் அதிசிறந்த வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டு புலமைப்பரிசில் வழங்கப்பட்டு ஐக்கிய இராச்சியத்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் குறுகிய கால அடிப்படையில் விளையாட சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளது.

அத்துடன் இலங்கை வீரர்கள்   கத்தார் அஸ்பயர் பயிற்சியகத்தில் தொடர் பயிற்சிகளில் ஈடுபடுவர் எனவும் ஜஸ்வர் உமர் குறிப்பிட்டார்.