தென்காசி மாவட்டம்  அய்யாபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவி ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 

திருவிழாவில் ஐந்து நாட்களும் அம்மன் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது, மிகவும் பழமை வாய்ந்த இத்திருக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் ஐந்து நாட்கள் கொடை விழா வெகு விமர்சையாக நடைபெறும்.

இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 6ஆம் தேதி அன்று கோலாகலமாக துவங்கியது, அன்று முதல் தினமும் தேவி ஸ்ரீ முப்புடாதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டு வந்தது. 

விழாவின் முக்கிய நாளான ஐந்தாம் நாள் விரதமிருந்து காப்பு கட்டிய பக்தர்கள் குற்றாலத்திலிருந்து புனித நீரான தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேவி ஸ்ரீ முப்புடாதி அம்மன் எழுந்தருளி  அய்யாபுரத்தில் உள்ள பல்வேறு தெருக்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி  நடைபெற்றது. 

அம்மன் வீதி உலாவில் அய்யாபுரம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். 

சப்பர வீதி உலா முன்பாக கரகாட்டம், செண்டை மேளம் முழங்க வீதி உலா கோலாகலமாக  நடைபெற்றது.   விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

இந்த ஐந்து (மே-06,07,08,09&10) நாள் திருவிழா ஏற்பாடுகளை காவல் துறையின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு அய்யாபுரம் ஊர் நாட்டாண்மைகளும் பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர். 

மூன்று நாள் கொடையாக தேவி ஸ்ரீ மாரி அம்மனுக்கு புரட்டாசி மாதத்திலும், இரண்டு நாள் கொடையாக ஸ்ரீ வைரவர்க்கு தை மாதத்திலும் விமர்சையாக  நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகேயன் நடராஜன்