கொரோனாக் காலகட்டத்தில் குடும்ப உறுப்பினர்களின் நலன்கள் மீது கூடுதலாக அக்கறை செலுத்தியதன் காரணமாக பெண்மணிகள் பலரும் தங்களின் ஆரோக்கியத்தின் மீது முழுமையான கவனத்தைச் செலுத்தவில்லை.

இதன் காரணமாக ஆண்டுதோறும் வழக்கமாக அவர்கள் மேற்கொள்ளும் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனைகளை 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில் மார்பக புற்று நோயை குணப்படுத்த நவீன கதிரியக்க சிகிச்சை முழுமையான பலனை வழங்கி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

மார்பக புற்றுநோயை மெமோகிராம் எனும் மார்பு ஊடுகதிர் சாதனம் மூலம் துல்லியமாக அவதானிக்கப்படுகிறது.

தற்போது இத்தகைய பரிசோதனையில் முப்பரிமாண தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் பாதிப்பின் தன்மை துல்லியமாகவும், தொடக்க நிலையிலும் கண்டறியப்படுகிறது.

நோயின் நிலை மற்றும் தீவிரத்தன்மையைப் பொறுத்து சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. 

இப்போது மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் புற்றுநோய் செல்களை துல்லியமாக அவதானித்து கண்டறிந்து அழிப்பதற்காக ட்ருபீம் கதிரியக்க சிகிச்சை முறை அறிமுகமாகி முழுமையான நிவாரணத்தை வழங்கி வருகிறது.

ஆண்டுதோறும் உலக அளவில் ஆறு மில்லியனுக்கும் மேற்பட்ட பெண்மணிகள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக மார்பக புற்றுநோய் குறித்த முழுமையான விழிப்புணர்வை பெண்மணிகள் பெற்று, ஆண்டுதோறும் இதற்குரிய பரிசோதனைகளை முறையாகவும், தொடர்ச்சியாகவும் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

டொக்டர் பிரேம் குமார்

தொகுப்பு அனுஷா.