(என்.வீ.ஏ.)

தாய்லாந்தின் பாங்கொக்கில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு விழாவுக்கான  ஆடவர் தகுதிகாண் ஹொக்கி போட்டியில் பி குழுவில் இடம்பெறும் இலங்கை, செவ்வாய்க்கிழமை (10) பங்களாதேஷிடம்   1 - 3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சீனாவில்  கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக   இந்த வருடம் நடைபெறவிருந்த ஆசிய விளையாட்டு விழா பிற்போடப்பட்டுள்ளபோதிலும் ஏனைய நாடுகளில் ஆசிய தகுதிகாண் போட்டிகள் திட்டமிட்டவாறு நடத்தப்படுகின்றன.

பாங்கொக், குவீன்   சேர்க்கிட் ஞாபகார்த்த விளையாட்டரங்கில் நடைபெற்ற பி குழுவுக்கான தகுதிகாண் போட்டியின் முதல் கால் மணி ஆட்ட நேர பகுதியில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட போதிலும் எந்த அணியும் கோல் போடவில்லை.

இரண்டாவது கால் மணி ஆட்ட நேரத்தின்போது 5 நிமிட இடைவெளியில் பங்களாதேஷ் 2 கோல்களைப் போட்டு இடைவேளையின்போது 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது.

பங்களாதேஷ் சார்பாக அஷ்ரபுல் இஸ்லாம் (கள கோல் 18 நி.), கோர்ஷதுர் ரஹ்மான் (பெனல்டி கோல் 23 நி.) ஆகியோரே கோல்களைப் போட்டனர்.

இடைவேளை முடிந்து 3ஆவது கால் மணி நேர ஆட்டம் தொடர்ந்தபோது 44ஆவது நிமிடத்தில் விப்புல் பெர்னாண்டோ கள கோல் போட்டு இலங்கைக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.

எனினும் கடைசி கால் மணி நேர ஆட்டத்தின் 53ஆவது நிமிடத்தில் ரோமன் சர்க்கார் கள கோல் போட்டு பங்களாதேஷின் வெற்றியை உறுதிசெய்தார்.

சிங்கப்பூருக்கு எதிராக கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் 5 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றிருந்தது.

அப் போட்டியில் ஒரு கட்டத்தில் 0 - 2 என்ற கோல்கள் கணக்கில் பின்னிலையில் இருந்த இலங்கை, 24ஆவது நிமிடத்திலிருந்து அற்புதமாக விளையாடி 5 கோல்களைப் போட்டு வெற்றியீட்டியது.

இதில் 3 கோல்கள் 4 நிமிட இடைவெளியில் போடப்பட்டன.

சத்துரங்க சந்த்ரசேன (கள கோல் 24 நி.), புத்திக டயஸ் (கள கோல் 27 நி.), விப்புல பெர்னாண்டோ (பெனல்டி கோல் 28 நி., கள கோல்கள்   50 நி., 59 நி.) ஆகியோர் இலங்கை சார்பாக கோல் போட்டனர்.

இலங்கை தனது கடைசி லீக் போட்டியில் இந்தோனேசியாவை நாளை வியாழக்கிழமை (12) எதிர்த்தாடவுள்ளது.

அப் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றால் முதல் 4 இடங்களைத் தீர்மானிக்கும் இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெறும்.