(என்.வீ.ஏ.)
பங்களாதேஷுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சகலதுறை வீரர் ஷக்கிப் அல் ஹசன் விளையாடமாட்டார் என அறிவிக்கப்படுகின்றது.

ஷக்கிப் அல் ஹசனின் கொவிட் - 19 பரிசோதனை அறிக்கை நேர்மறையாக இருந்ததன் காரணமாகவே முதலாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டி சட்டோகிராமில் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அஹ்மத் ஆகிய இருவரும் உபாதைகளிலிருந்து மீளாததால் அவர்களும் டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார்கள் என தெரிவிக்கப்பகின்றது.
இப்போது ஷக்கிப் அல் ஹசனும் அணியில் இடம் பெறாதது பங்களாதேஷுக்கு பெரிழப்பாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
பங்களாதேஷ் டெஸ்ட் குழாத்துடன் ஷக்கிப் அல் ஹசன் இன்று இணைவதாக இருந்தது.
ஆனால், நேற்று நடத்தப்பட்ட கொவிட் - 19 பரிசோதனை நேர்மறையாக இருந்ததால் அவர் முதலாவது டெஸ்டில் விளையாடமாட்டார் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஷக்கிப் அல் ஹசன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவருக்கு விரைவில் மீண்டும் கொவிட் - 19 பரிசோதன நடத்தப்படும் எனவும் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷக்கிப் அல் ஹசனுக்குப் பதிலாக யாரையும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை பெயரிடவில்லை. ஆனால், டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டபோது உபாதையிலிருந்த மெஹிதி ஹசன் மிராஸுக்கு பதிலாக மொசாடெக் ஹொசெய்னை தேர்வாளர்கள் தெரிவு செய்திருந்தனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடந்த டிசம்பர் மாதம் கடைசியாக விளையாடிய ஷக்கிப் அல் ஹசன் அதன் பின்னர் தவறவிடும் 5ஆவது டெஸ்ட் இதுவாகும்.
தனிப்பட்ட காரணங்களுக்காக நியூஸிலாந்துடனான டெஸ்ட் தொடரில் விளையாடாமல் இருந்த ஷக்கிப் அல் ஹசன், சுகவீனம் காரணமாக தென் ஆபிரிக்காவுடனான டெஸ்ட் தொடரிலும் விளையாடவில்லை.
ஒரு வருட தடைக்குப் பின்னர் அணிக்கு திரும்பிய ஷக்கிப் அல் ஹசன், 3 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே ஷக்கிப் அல் ஹசன் விளையாடியுள்ளார்.