(நா.தனுஜா)
கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், அமைதியான முறையில் இடம்பெற்ற போராட்டத்தில் குறித்தவொரு குழுவினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக இலங்கையின் அரசியலமைப்பும் குற்றவியல் சட்டமும் மீறப்பட்டுள்ளது.
எனவே இச்சம்பவம் சார்ந்த உள்ளக, சர்வதேச நிலைவரங்களைக் கருத்திற்கொண்டு, இவ்விடயத்திற்கு முன்னுரிமை விரைவானதும் முழுமையானதுமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னம் பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை அலரி மாளிகையில் ஒன்றுதிரண்ட குழுவினர், அலரி மாளிகைக்கு முன்பாக காலி வீதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த 'மைனா கோ கம' கூடாரங்களை இடித்து, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களையும் கடுமையாகத் தாக்கினர்.
அதனைத்தொடர்ந்து காலி வீதியின் ஊடாக காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த 'கோட்டா கோ கம' விற்குச் சென்று அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த கூடாரங்களை எரித்து, போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தினர். அதனையடுத்து நாடளாவிய ரீதியில் வன்முறைகள் வெடித்து அமைதியற்ற நிலையொன்று தோற்றம்பெற்றது.
அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்துவந்தவர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கள் குறித்து உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இவ்வாறானதொரு பின்னணியில் இவ்வன்முறைச்சம்பவம் தொடர்பில் உரியவாறு விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு நேற்றைய தினம் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னம் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
அரசியலமைப்பின் 14(1)(ஏ), (பி), (சி) ஆகிய சரத்துக்களின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளான கருத்துக்களை வெளிப்படுத்தல் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் ஆகியவற்றுக்கான சுதந்திரத்திற்கு அமைவாகவே கடந்த சில வாரங்களாக நாட்டுமக்கள் செயற்பட்டுவருகின்றார்கள்.
எனவே அரசியலமைப்பின் 4(டி) இன் பிரகாரம் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதும் முன்னேற்றமடையச்செய்வதும் அரசாங்கத்தின் அனைத்து அங்கங்களினதும் கடமையாகும்.
எனினும் நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், அமைதியான முறையில் இடம்பெற்ற போராட்டத்தில் பெருமளவானோர் அடங்கிய குழுவினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக இலங்கையின் அரசியலமைப்பும் குற்றவியல் சட்டமும் மீறப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு புறம்பாக ஏற்படுத்தப்பட்ட இந்த இடையூறானது அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை அனுபவித்தவர்கள்மீது தாக்குதல் நடத்தி, உடலியல் ரீதியில் அவர்களைக் காயமடையச்செய்யும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் தீவிரத்தன்மையைக் கருத்திக்கொண்டு, மக்களின் அரசியலமைப்பு உரிமை மீது நிகழ்த்தப்பட்ட சட்டவிரோத தலையீடு குறித்து விரிவானதும் முழுமையானதுமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு உங்களுக்கு அறிவுறுத்துகின்றேன். கொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் மிகத்தீவிரமான மட்டத்தில் வன்முறைகள் வெடிப்பதற்கும், நாடளாவிய ரீதியில் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதற்கும் தூண்டுகோலாக அமைந்துள்ளன.
எனவே திங்கட்கிழமை இடம்பெற்ற சம்பவங்களைத் தொடர்பில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்துகின்றேன்.
இந்தச் சம்பவம் சார்ந்த உள்ளக, சர்வதேச நிலைவரங்களைக் கருத்திற்கொண்டு, இவ்விடயத்திற்கு முன்னுரிமை வழங்கி விசாரணைகளை முடிவுறுத்துங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM