கலவரபூமியான கொழும்பும் அதன் இன்றைய நிலையும் ! அதிகாலை அலரிமாளிகையில் இருந்து வெளியேறிய மஹிந்த

10 May, 2022 | 09:07 AM
image

கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமாக மக்கள் எழுச்சிப் போராட்டம் நேற்று மே மாதம் 9 ஆம் திகதி காலை ஒரு மாதம் நிறைவடையும் வரை அமைதியாகவும் சாத்வீகமாகவும் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

Image

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில், நேற்றையதினம் அலரிமாளிகையில் மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாப்போம் என்ற தோரணையில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் பலர் ஒன்றுகூடி கூட்டமொன்றை ஏற்பாடு செய்ததுடன் ஆர்ப்பாட்டமொன்றையும் மேற்கொண்டனர்.

இதன் பின்னர் அலரிமாளிகைக்கு முன்னால் இடம்பெற்ற மைனா கோ கம என்ற அமைதியான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் தாக்கினர்.

அதையடுத்து அங்கிருந்து காலிமுகத்திடல் பகுதியில் இடம்பெற்ற கோட்டா கோ கம மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்திற்குள் புகுந்த மஹிந்தவின் ஆதரவாளர்கள் அங்கு வன்முறைகளை கட்டவிழ்த்து தாக்குதல்களை மேற்கொண்டதுடன் அங்கிருந்த கூடாரங்களையும் தீயிட்டு கொளுத்தினர்.

No description available.

இதன் பின்னர் அமைதியாக இடம்பெற்ற கோட்டா கோ கம போராட்டக் களம் கலவரபூமியாகியது.

இந்நிலையில் மைனா கோ கம மீது தாக்குதல் நடத்திய ஆளும்கட்சியின் குண்டர் குழு அங்கிருந்து இரு வழிகள் ஊடாக காலி முகத்திடல் நோக்கி நகர்ந்தது.

No description available.

காலி வீதி ஊடாகவும்,கோட்டா கோ கம வாகன தரப்பிடத்திற்கு பின்னால் உள்ள வீதி ஊடாகவும் ஆளும் தரப்பினர் அல்லது மஹிந்தவின் ஆதரவாளர்கள் காலி முகத்திடல் நோக்கி தாக்குதல் நடாத்த முடியுமா ஆயுதங்களுடன் முன்னேறினர்.

கைகளில் இரும்புகள்,பொல்லுகளுடன் ஆக்கிரோசமாக முன்னேறிய அந்த வன்முறை கும்பலை கட்டுப்படுத்தாது பொலிஸார் வேடிக்கை பார்த்தனர்.

No description available.

இந்நிலையில் காலி முகத்திடலை அண்மித்து கோட்டா கோ கம பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்து.

அமைதி போராட்ட களத்திற்குள் அவர்கள் அத்துமீறினர். கண்ணில் தென்பட்ட அமைதி ஆர்பாட்டகாரர்கள் மீதும்,அவர்களது தற்காலிக கூடாரங்கள் மீதும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடாத்தினர்.

No description available.

அமைதி போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த பல பெண்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்களை குழு,குழுவாக சேர்ந்து அவர்கள் முன்னெடுத்ததை அவதானிக்க முடிந்தது.

அப்பாவி இளைஞர்களை விட்டு வைக்காத ஆளும் தரப்பு ஆதரவு வன்முறை கும்பல் சில நிமிடங்களில் கோட்டா கோ கம வை யுத்தகளமாக மாற்றியது.

No description available.

ஆளும் கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல்களை சுதந்திரமாக முன்னெடுக்க பொலிஸார் இடமளித்திருந்த நிலையில் தாக்குதல்கள் எல்லை மீறிய பின்னர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை அழைத்து கோட்டா கோ கம பகுதியில் நீர்த்தாரை பிரயோகம்,மற்றும் கண்ணீர் புகைவீச்சு பிரயோகம் நடாத்தப்பட்டது.

No description available.

இதனையடுத்து அமைதி போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்களும் தம்மீதான தாக்குதல்களுக்கு பதில் நடவடிக்ககைளை அஹிம்சை வழியில் முன்னெடுத்திருந்த நிலையில் காயமடைந்த 229 பேர்  வரை வைத்தியசாலையில்  அனுமதிப்பட்டுள்ளனர்.

Image

No description available.

 தப்பியோடிய வன்முறை குண்டர் கும்பல்

அமைதி போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய பின்னர் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் கொழும்பிலிருந்து தாம் வந்த வாகனங்களில் தப்பியோடினர். இதன்போது ஆத்திரமடைந்த பொதுமக்கள் பல பகுதிகளில் அவர்களை வழிமறித்து அவர்கள் மீதும், அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்துகொடுத்தமைக்காக அவர்கள் பயணித்த பேரூந்துகள் மீதும் தாக்குதல்கள் நடத்தினர்.

No description available.

கொழும்பில் மாளிகாவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஞ்சிகாவத்தை பகுதியில் ஆளும் கட்சியின் ஆதரவாளர்களின் பேரூந்து ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், பிறிதொரு கெப் ரக வாகனத்தின் மீதும் தீ வைக்கப்பட்டது.

இதனைவிட தாக்குதலை தொடர்ந்து தப்பிச்சென்ற ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பயணித்த பேரூந்துகள் மீது கடவத்தை,மொறட்டுவை,பகுதிகளிலும் தாக்குதல் நடாத்தப்பட்டது.அத்துடன் கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லேக்-ஹவுஸ் சுற்றுவட்டத்தை அண்மித்தும் பேருந்து ஒன்றும்,பொது மக்களால் வழிமறிக்கப்பட்டு அதிலிருந்த ஆர்பாட்டகாரர்கள் அடித்து பேர வாவிக்குள் இறக்கப்பட்டனர்.

Image

No description available.

அத்துடன் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு சொந்தமானது என கருதப்படும் கெப் ரக வாகனம் ஒன்று பேர வாவிக்குள் பொதுமக்களால் சேதப்படுத்தப்பட்டு வீழ்த்தப்பட்டது.

இதனைவிட கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிரிகஸ்யாவ பகுதியில் பொலிஸ் பார்க் மைதானத்தை அண்மித்து ஆளும் கட்சியின் ஆதரவாளர்களை ஏற்றி வந்த சுமார் 3 பேரூந்துகள் பொதுமக்களால் அடித்து சேதப்படுத்தப்பட்டன.

நாடு முழுவதும் பதற்றம்

அமைதி ஆர்ப்பாட்டம் நடாத்தியவர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து நாடுமுழுதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஆளும் கட்சி ஆதரவாளர்களின் மூர்க்கத்தனமான நடவடிக்கையினை எதிர்த்தும், அமைதி ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் நாடெங்கும் மக்கள் வீதியில் இறங்கினர்.

சட்டத்தரணிகள் உடனடியாக களத்தில் இறங்கி கோட்டா கோ கம பகுதிக்கு சென்று அமைதி போராட்டகாரர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டதுடன் கொழும்பு புதுக்கடை நீதிவான் நீதிமன்றம் முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வைத்தியசாலையில் பதற்றம்

அமைதி ஆர்ப்பாட்டகாரர்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பதற்ற நிலை ஏற்பட்டது.

தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் வீதியில் இறங்கி கோட்டா கோ கம அமைதி போராட்டகாரர்களுக்கு ஆதரவாக குரலெழுப்பலாயினர். இதன்போது காயமடைந்து வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சிலரை வைத்தியசாலைக்குள் அனுமதிக்காது அவர்கள் போராட்டம் நடத்தியதையும் காண முடிகிறது.

கண்டி கோட்டா கோ கம

 இவ்வாறான நிலையில் நேற்று பிற்பகல் கண்டியில் அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம மீது ஆளும் தரப்பினரது ஆதரவாளர் குண்டர் குழுவினர் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். இதனால் கண்டியிலும் பெரும் பதற்றம் நிலவியது.

இதனைவிட குருநாகல், தம்புள்ளை ,காலி, நிட்டம்புவ, மொறட்டுவை, மீரிகம, கடுவலை, உள்ளிட்ட பல பகுதிகளிலும் பொது மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனையடுத்து பொலிஸ்மா அதிபர் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கினை அமுல்படுத்துவதாக அறிவித்து உதவிக்கு முப்படையினரையும் அழைத்தார்.

கோட்டா கோ கம விற்கு வந்த சஜித்,அனுர

அரசாங்க ஆதரவாளர்கள் கோட்டா கோ கம அமைதி போராட்டகாரர்கள் மீது தாக்குதலை நடாத்தியதையடுத்து அது தொடர்பில் ஆராய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ,எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் அங்கு சென்றனர்.

Image

இதன்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் மீது ஆளும் கட்சி ஆதரவாளர் குழுவினர் தாக்குதலை நடாத்தியதுடன் அவரையும்,அவருடன் சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவையும் பாதுகாப்பு தரப்பினர் காப்பாற்றி அழைத்து சென்றனர்.

கோட்டா கோ கம வந்த கர்தினால்

தாக்குதல்களை தொடர்ந்து கோட்டா கோ கமவிற்கு வருகை தந்த கர்தினால் ஆண்டகை அமைதியை பேணுமாறு கேட்டுக்கொண்டனர்.

No description available.

அலரி மாளிகை அருகே தொடர்ந்த பதற்றம் : வானை நோக்கி துப்பாக்கிச் சூடு : நள்ளிரவின் பின் தணிந்தது

 அலரி  மாளிகை அருகே அமைதி ஆர்ப்பாட்டம் முன்னெடுத்தவர்கள் மீது, அரசாங்க ஆதரவு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடாத்திய நிலையில், நேற்று (9) மாலை மீண்டும் பொது மக்கள் அப்பகுதியில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அலரி மாளிளிகைக்குள் நுழைய முற்பட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. 

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அலரி மாளிளிகைக்குள் நுழைய தொடர்ச்சியாக முற்பட்டதால் அங்கு பதற்ற நிலை தொடர்ந்தது.

இந் நிலையில் பொலிஸார் ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது கண்ணீர்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த் தாரை பிரயோகத்தை முன்னெடுத்துள்ளனர்.  

அதன் பின்னர் அலரி மாளிகையிலிருந்து வானை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடாத்தப்பட்டது.  எனினும் ஆர்ப்பாட்டக் காரர்கள் தொடர்ச்சியாக அங்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலையில்,  அலரி மாளிகையின் பாதுகாப்பில் இராணுவத்தின் விஷேட படையணியினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 அத்துடன் அலரி  மாளிகையின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ச்சியாக ட்ரோன் கமராக்கள் மூலம் பாதுகாப்பு தரப்பு ஆர்ப்பாட்டக் காரர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க நேற்று இரவு ஆரம்பித்தது.

அத்துடன் அலரி மாளிகையின் பின் பக்க நுழை வாயில் அருகே நேற்று இரவு திடீர் தீ ஒன்றினை அவதானிக்க முடிந்தது.  ஆர்ப்பாட்டக் காரர்களால் அந்த தீ வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பட்டும் நிலையில் அதனை அனைக்க பொலிசார் நடவடிக்கைஎடுத்திருந்தனர். 

இந்நிலையில் நள்ளிரவின் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்தனர்.

இதன் பின்னர் அங்கிருந்த மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடும் இராணுவ பாதுகாப்புடன் இன்று அதிகாலை அலரி மாளிகையை விட்டு வெளியேறியுள்ள நிலையில், சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்குள் சிக்கிய அமர கீர்த்தி எம்.பி. சுட்டுத் தற்கொலை ?

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு கூறி முன்னெடுக்கப்பட்ட ஆதரவு வன்முறைகளைத் தொடர்ந்து, வீடு திரும்பிக்கொண்டிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவயில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்  இடையே சிக்கி  உயிரிழந்துள்ளார். 

அவர்  அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்களிடையே சிக்கிக் கொண்டுள்ள நிலையில்,  தன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அறிய முடிகிறது.

கொழும்பில், அமைதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட பின்னர், பாராளுமன்ற உறுப்பினர்  அமரகீர்த்தி அத்துகோரள தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன்  பொலன்னறுவை நோக்கி வாகனத்தில் சென்றுள்ளார்.

 இதன்போது அவரது வாகனம் நிட்டம்புவையில்,  கொழும்பு - கண்டி வீதியை மறித்து பொது மக்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் இடையே சிக்கியுள்ளது. இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்ற உறுப்பினை தாக்க முயலவே,  பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தியதாக அறிய முடிகிறது.

 இதனால் இரு பொது மக்கள் துப்பாக்கிச் சூட்டு காயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

 இதனையடுத்து நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கிருந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் துப்பாக்கிச் சூட்டை அடுத்து ஆவேசமடைந்துள்ளனர்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினரும் அவரது சாரதியும்,  நிட்டம்புவ நகரின் நிஹால் பெஷன் ஆடையகத்தினுள் ஓடி ஒழிந்துள்ளனர். எவ்வாறாயினும் ஆர்ப்பாட்டக் காரர்கள் தொடர்ச்சியாக  விரட்டி சென்றுள்ள  நிலையில், அச்சமடைந்துள்ள  பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி தன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 

இதன்போது அதன் அருகே, பாராளுமன்ற உறுப்பினரின் சாரதியும் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. நேற்று மாலை குறித்த ஆடையகம் அருகே பாராளுமன்ற உறுப்பினரினதும் சாரதியினதும் சடலங்கள் காணப்பட்டன.

 எவ்வாறாயினும் இது தொடர்பில் பொலிஸார் எதனையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

 இது இவ்வாறிருக்க இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன்னெடுக்கப்ப்ட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த  மூவர் உள்ளிட்ட 6 பேர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக வத்துபிட்டிவல வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. 

ஆளும் தரப்பு பிரமுகர்களின் வீடுகள் மீதும் தாக்குதல்.

ஆர்ப்பாட்டகார்ர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்,உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் பலரின் மீது பொதுமக்கள் ஒன்று திரண்டு தாக்குதல்,நடாத்தினர். இந்நிலையில் நிலைமை மோசமடைந்து நாடெங்கும் பதற்ற சூழல் நிலவியது.

Image

Image

இந்நிலையில் ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசசபை, நகரசபை உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், தொழிற்சங்கத்தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்களின் வீடுகள்மீது நாட்டின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் ஒன்றுதிரண்டுசென்று தாக்குதல் நடாத்தியுள்ளனர். பலரது வீடுகளுக்கு அவர்கள் தீயிட்டுக்கொளுத்தியுள்ளதுடன் சொத்துக்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

Image

Image

 Image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

 

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் குருணாகல் மற்றும் கொழும்பு லில்லீ வீதியிலுள்ள வீடுகள்மீது நேற்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமைதிப்போராட்டம் மீது அரசாங்க ஆதரவாளர்கள் முன்னெடுத்த வன்முறைத்தாக்குதலைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் இவ்வாறு தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

 

இதற்கு மேலதிகமாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்குச் சொந்தமான மதுபானசாலையொன்றும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் குருணாகல் வில்கம பகுதியில் அமைந்துள்ள அலுவலகம் மீதும் பொதுமக்களால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

 

ரோஹித அபேகுணவர்தன

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் களுத்துறை இல்லம் பிரதேசவாசிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை அப்பகுதியில் ஒன்றுசேர்ந்த பிரதேச மக்கள் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு கோஷமெழுப்பியவாறு அவரது வீட்டை அடித்து உடைத்தனர்.

ரமேஷ் பத்திரண

முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் இல்லமும் பொதுமக்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது. அவரது இல்லத்தின்மீது தாக்குதல் நடத்திய பொதுமக்கள் வீட்டை தீயிட்டுக்கொளுத்தினர்.

நிமல் லன்சா

முன்னாள் அமைச்சர் நிமல் லன்சாவின் நீர்கொழும்பு இல்லம் அப்பகுதி மக்களால் தீயிட்டுக்கொளுத்தப்பட்டது.

அருந்திக பெர்னாண்டோ

முன்னாள் அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் வீடும் பொதுமக்களால் சேதப்படுத்தப்பட்டு, தீயிட்டுக்கொளுத்தப்பட்டது.

 

மொரட்டுவை மேயர்

மொரட்டுவை நகர மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் வீடும் பொதுமக்களால் தாக்கப்பட்டது. மொரட்டுவைப் பகுதியில் அமைந்துள்ள அவ்வீடு மீது தாக்குதல் நடத்திய அப்பகுதி மக்கள் அவ்வீட்டைத் தீயிட்டுக்கொளுத்தியுள்ளனர்.

மஹிந்த கஹந்தகம

'மைனா கோ கம' மற்றும் 'கோட்டா கோ கம' மீது ஆளுந்தரப்பு ஆதரவாளர்கள் நடாத்திய மூர்க்கத்தனமான தாக்குதல்களை வழிநடத்தியவராக நம்பப்படும் ஆளுங்கட்சியின் தொழிற்சங்கத்தலைவர்களில் ஒருவரான மஹிந்த கஹந்தகமவின் வீட்டின்மீதும் பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

கொழும்பு வொக்ஷ்ஹோல் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டின்மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

உதேனி அத்துகோரள

அமைதிப்போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்த ஆதரவாளர்களை அழைத்துவந்தவர்களில் ஒருவராகக் கருதப்படும் வளல்லாவிட்ட பிரதேசசபையின் தலைவர் உதேனி அத்துகோரளவின் வீடும் அப்பகுதி மக்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. வீட்டில் அவர் இருக்காதபோதும், வீட்டுக்குள் நுழைந்த பொதுமக்கள் அங்கிருந்த சொத்துக்கள் மற்றும் அவரது ஜீப் வண்டி ஒன்றினையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

 

சனத் நிஷாந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீடு பொதுமக்களால் அடித்து, தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. புத்தளத்தில் அமைந்துள்ள அவரது வீடு இதனால் முற்றாக சேதமடைந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த அமைதி ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களுடன் நேரடியாகத் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டியே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

அனுபா பஸ்குவால்

ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுபா பஸ்குவாலின் மத்துகம இல்லம் அப்பகுதி மக்களால் நேற்று மாலை அடித்து உடைக்கப்பட்டது.

 

அகில சாலிய எல்லாவெல

இரத்தினபுரி மாவட்ட பொதுஜன பெரமுனவின் அரசியல் தலைவரான அகில சாலிய எல்லாவெலவின் பலாங்கொடையில் அமைந்துள்ள வீடு அப்பகுதி மக்களால் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலாங்கொடை பகுதியில் பெரும் பதற்றநிலை நிலவியது.

 

அலி சப்ரி ரஹீம்

ஆளுங்கட்சிக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் புத்தளம் இல்லம் மீது அப்பகுதி மக்கள் நேற்று இரவு தாக்குதல் நடத்தினர். அரசாங்கத்திற்குத் தொடர்ச்சியாக அவர் ஆதரவு வழங்கிவரும் நிலையில், அரச ஆதரவாளர்கள் அமைதி ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இவ்வாறு அவரது வீடு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

 

திஸ்ஸ குட்டியாராச்சி

ஆளுந்தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் வீட்டின்மீதும் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. பண்டாரவளை பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டின்மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டது.

 

துஷார சஞ்சீவ

குருணாகல் நகர மேயர் துஷார சஞ்சீவவின் வீட்டின்மீதும் நேற்றைய தினம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் 'வலது கரமாகக்' கருதப்படும் குருணாகல் மேயரின் வீட்டுக்குள் நுழைந்த பிரதேசவாசிகள் வீட்டினை அடித்து உடைத்து, தீவைத்துக் கொளுத்தினர்.

அத்துடன் மேயர் துஷார சஞ்சீவவிற்கு சொந்தமான ஜீப் வண்டியொன்று கொழும்பிலிருந்து குருணாகலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது மீரிகம பகுதியில்வைத்து பொதுமக்களால் வழிமறிக்கப்பட்டது.

அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது தாக்குதல் நடாத்தப்பட்ட பின்னர் தப்பிச்செல்லும் வழியில் அந்த ஜீப் வண்டி இவ்வாறு மறிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. இதன்போது அவ்வண்டியில் மதுபான போத்தல்களும் கூரிய ஆயுதங்களும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மெதமுலனையில் அமைந்துள்ள டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபிக்கும் தீவைக்கப்பட்டது.

No description available.

Image

Image

இன்றைய கொழும்பின் நிலை

நாட்டில் தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில், அமைதியான சூழல் நிலைவி வருகின்றது.

Image

Image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21