(நா.தனுஜா)

அவசரகாலச்சட்டப்பிரகடனத்திற்குப் பாராளுமன்றத்தில் அனுமதி பெற்றுக்கொள்வதைத் தவிர்க்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்டுவருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இதுகுறித்து ஆராய்வதற்கு இவ்வாரமே பாராளுமன்றம் கூடவேண்டும் என்று தாம் வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Sumanthiran wants US as mediator here – The Island

 அதுமாத்திரமன்றி நாளைய தினம் நடைபெறவுள்ள கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கான திகதி தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதுகுறித்து வீரகேசரியிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது:

ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச்சட்டம் அதே மாதம் 5 ஆம் திகதி நீக்கப்பட்டது. 

ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவிருந்த நிலையில், பாராளுமன்றத்தில் அவசரகாலச்சட்ட யோசனையைச் சமர்ப்பிப்பதைத் தவிர்க்கும் வகையிலேயே அவர் 5 ஆம் திகதி அதனை நீக்கியிருந்தார்.

 அதேபோன்று தற்போது மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை (6) ஜனாதிபதியினால் அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 

அரசியலமைப்பின்படி அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு 10 நாட்களுக்குள் பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதி பெறப்படவேண்டும்.

 அவ்வாறு அனுமதி பெறப்படாத பட்சத்தில், 10 நாட்களில் அந்த அவசரகாலச்சட்டம் தானாகவே இரத்தாகிவிடும். எதிர்வரும் 17 ஆம் திகதியே பாராளுமன்றம் கூடவுள்ளதால், 16 ஆம் திகதி வரையான 10 நாட்களுக்கு அவசரகாலச்சட்டத்தின் மூலமான அதிகாரத்தைத் தன்னகத்தே வைத்திருப்பதற்கு ஜனாதிபதி திட்டமிடுகின்றார்.

 நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி பொதுப்பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களிலும் பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூறவேண்டியவராக இருக்கின்றார்.

அவ்வாறிருக்கையில் அவசரகாலச்சட்டத்தைப் பிறப்பித்ததன் பின்னர், அதற்கு பாராளுமன்றத்தில் அனுமதி பெற்றுக்கொள்வதைத் தவிர்ப்பதென்பது குற்றம் என்பதுடன் அரசியலமைப்பின் 42 ஆவது சரத்தை மீறும் செயலாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் இன்றைய தினம் (நேற்று) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் நாம் இவ்வாரமே பாராளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பில் யோசனையொன்றை முன்வைத்திருந்தோம்.

 அதேவேளை ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை பாராளுமன்ற ஒழுங்குப்புத்தகத்தில் சேர்த்துக்கொள்வதற்கு சபாநாயகர் இணக்கம் தெரிவித்திருக்கின்றார். 

எனவே அப்பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கான திகதி நாளைய தினம் நடைபெறவுள்ள கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்தார்.