வெற்றி யாருக்கு?

By Digital Desk 5

09 May, 2022 | 11:07 PM
image

சுவிசிலிருந்து சண் தவராஜா

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதி ஜனாதிபதி ஆகியோரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளன.

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான 17ஆவது ஜனாதிபதி, 16ஆவது பிரதி ஜனாதிபதி ஆகியோர் இந்தத் தேர்தலில் நேரடியாகத் தெரிவு செய்யப்பட உள்ளனர். 

அந்த நாட்டுத் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் தற்போதைய ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடெர்ட் இரண்டாவது தடவை தேர்தலில் போட்டியிட முடியாது.

பிரதித் தலைவருக்கு இரண்டாவது தடவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு உள்ள போதிலும், தற்போதைய பிரதி ஜனாதிபதியான லெனி ரொப்ரெடோ அப்பதவிக்காகப் போட்டியிடாமல் நேரடியாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் 10 வேட்பாளர்களும், பிரதி ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் 9 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

இவர்களுள் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் முன்னாள் சர்வாதிகாரியான பேர்டினன்ட் மார்க்கோசின் ஒரேயொரு மகனான பொங்பொங் மார்க்கோஸ் முன்னிலை வகிக்கின்றார். 

64 வயது நிரம்பிய இவர் முன்னாள் செனட் சபை உறுப்பினர் ஆவார். சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்புகளின் பிரகாரம் இவர் ஏறத்தாழ 56 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இரண்டாவது நிலையில் தற்போதைய பிரதி ஜனாதிபதி லெனி ரொப்ரெடோ உள்ளார். 57 வயதான இவர் ஒரு மனித உரிமைகள் சட்டத்தரணியும் ஆவார்.

24 சதவீத வாக்குகளை இவர் பெற்றுள்ளார். 

அதேவேளை, பிரதி ஜனாதிபதிக்கான தேர்தலில் தற்போதைய அதிபரான ரொட்ரிகோ டியுடெர்ட்டேயின் மகளும், டாவோ நகர மேயருமான சாரா டியுடெர்ட் முன்னணியில உள்ளார்.

கருத்துக் கணிப்பில் இவர் 55 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார். இவர் பொங்பொங்| மார்க்கோஸடன் இணைந்து போட்டியிடுகின்றார்.

கருத்துக் கணிப்புகளின் பிரகாரம் மக்கள் வாக்களித்தால் இவர்கள் இருவருமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நம்பப்படுகின்றது.

எனினும், கருத்துக் கணிப்புகளை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள லெனி ரொப்ரெடோ தரப்பு, தாம் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் பெருமளவான மக்கள் கலந்து கொள்வதைக் கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும், தமது அணிக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து வருகின்றது.

இது ஒரு வகையில் உண்மையே. சுயேட்சை வேட்பாளராகக் களத்தில் உள்ள ரொப்ரெடோ ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் பெருமளவான இளையோரை அவதானிக்க முடிகின்றது.

ஆனால், அவர்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதியானவர்கள் தானா, அவ்வாறு தகுதி பெற்றிருந்தாலும் தேர்தல் நாளன்று வாக்குச் சாவடிகளுக்கு வந்து தங்கள் வாக்குகளை அளிப்பார்களா என்ற கேள்வி உள்ளது.

67.5 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட பிலிப்பைன்ஸில் ஏறத்தாழ அரைவாசிப் பேர் 18 முதல் 30 வயதானவர்களாக உள்ளனர்.

இவர்களுள் பெரும்பாலும் முதல் தடவையாக வாக்களிப்போரின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது.

ஆனால், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 30 சதவீதம் இளையோரே வாக்களித்ததாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், மார்க்கோஸையும் இளையோர் தீவிரமாக ஆதரித்து வருகின்றனர். சமூக ஊடகங்களைக் கையாளுவதில் வல்லவரான மார்க்கோசின் முகநூலை 5.8 மில்லியன் பேர் தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலையான ஆட்சியை வழங்குவதே தனது இலக்கு என அறிவித்துள்ள மார்க்கோஸ், தற்போதைய அரசுத் தலைவரான டுற்றர்டேயின் கொள்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

எனினும், இவரது தந்தையாரான சர்வாதிகாரி மார்க்கோசின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற கொடுமைகளை எதிர்த் தரப்பு வேட்பாளர்கள் சுட்டிக்காட்டி இவருக்கு எதிராகப் பரப்புரை செய்து வருகின்றனர்.

இரண்டாவது இடத்தில் உள்ள ரொப்ரெடோ தான் இளஞ் சிவப்புப் புரட்சி ஒன்றைச் செய்யவுள்ளதாக அறிவித்து உள்ளார்.

டுற்றர்டேயின் ஆட்சியில் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள ஜனநாயகத்தை மீட்டெடுத்தல், பெண்களின் உரிமைகளைப் பேணுதல், வன்முறைக் கலாசாரத்துக்கு முடிவு கட்டுதல் போன்றவை அவரின் கொள்கைகளாக உள்ளன.

அவரின் கொள்கைகள் பெண்களையும், இளையோரையும் பெரிதும் ஈர்த்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

எனினும், பிலிப்பைன்ஸின் தற்போதைய ஜனாதிபதியான டியுடெர்ட்டேயின் செல்வாக்கு தற்போதும் அபரிமிதமாகவே உள்ளது. அவர் யாரை ஆதரித்து நிற்கின்றாரோ அவரே தேர்தலில் வெற்றிபெறும் நிலை உள்ளது.

அவர் தற்போதுவரை எவரையும் வெளிப்படையாக ஆதரித்து நிற்காவிட்டாலும், அவரது மகள் போட்டியிடும் நிலையில் அவரது ஆதரவு மகள் சார்ந்த அணிக்கே இருக்கும் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. 

இந்தத் தேர்தலில் சுவாரஷ்யமான மற்றொரு விடயம் என்னவெனில் 2016இல் நடைபெற்ற பிரதி ஜனாதிபதி தேர்தலில் தற்போது ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடும் மார்க்கோஸம் ரொப்ரெடோயும் நேரடியாக மோதிக் கொண்டனர்.

மிகவும் நெருக்கமாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் ரொப்ரெடோ குறைந்த சதவீதமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். 

தற்போது அதே இருவரும் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இருந்தாலும் இருவருக்கும் இடையிலான செல்வாக்கில் பாரிய வித்தியாசம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோன கொள்ளை நோய் காரணமாகச் சீரழிந்து போயுள்ள பொருளாதார நிலைமை, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக டியுடெர்ட் அரசாங்கம் மேற்கொண்ட வன்முறைகள், ஏனைய சமூகச் சீர்கேடுகள் என்பவை இந்தத் தேர்தலின் பேசுபொருளாக இருந்தாலும், அவற்றை விடவும் மிக முக்கியமான ஒரு விடயமும் இந்தத் தேர்தலில் உள்ளது. 

தற்போதைய ஜனாதிபதியான டியுடெர்ட் தனது ஆறு வருட பதவிக் காலத்தில் அமெரிக்காவுடனும், சீனாவுடனும் உறவுகளைப் பேணி வந்துள்ளார்.

மார்க்கோஸ் வெற்றி பெற்றால் சீனாவுடனான உறவு தற்போது உள்ளதைப் போன்று தொடரும் என அறிவித்து உள்ளார்.

ஆனால், ரொப்ரெடோ வெற்றிபெறும் இடத்து சீனாவுடனான உறவில் விரிசல் உருவாகும் வாய்ப்பு உள்ளது. 

தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையிலும், சீனாவுக்குப் போட்டியாக அமெரிக்க தலைமையிலான மேற்குலகம் இந்தப் பிராந்தியத்தில் படை நகர்வுகளை மேற்கொண்டு வரும் நிலையிலும் தற்போதைய தேர்தல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

இது ஒரு நாட்டின் ஜனாதிபதியைத்; தேர்ந்தெடுக்கும் தேர்தலே ஆயினும், அந்தத் தேர்தல் முடிவுகள் பிராந்திய அரசியலில் பெரிதும் செல்வாக்குச் செலுத்தும் வாய்ப்பு உள்ளதை மறுப்பதற்கில்லை.

நாளை நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் 19 வேட்பாளர்களும் இரண்டாம் உலகப் போரின் பின்னான காலகட்டத்தில் பிறந்தவர்களாக உள்ளனர்.

யுத்தகால நேரடி அனுபவங்கள் அற்றவர்களாக அவர்கள் உள்ள போதிலும், யுத்தமொன்றின் கொடுமையை நிச்சயம் உணர்ந்தவர்களாக இருப்பார்கள் என நம்பலாம்.

தேர்தலில் வெற்றிபெற்று, எதிர்வரும் ஜுன் 30இல் பதவியேற்கவுள்ள 17ஆவது ஜனாதிபதியின் கரங்களிலேயே நாட்டினதும், பிராந்தியத்தினதும் வளமான எதிர்காலம் தங்கியுள்ளது என்பதே உண்மை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்