குற்றச்சாட்டுகள் மட்டும் போதுமா?

Published By: Digital Desk 5

09 May, 2022 | 11:08 PM
image

சத்ரியன்

“ஆட்சிக்கு வரும் வரையில், எதிர்த்தரப்பின் மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும், ஆட்சிக்கு வந்த பின்னர், அவர்களை மறைமுகமாக காப்பாற்றுவதும், மேல்மட்ட அரசியல்வாதிகள் மத்தியில், ஒரு கனவான் ஒப்பந்தம்” 

ஒரு அரசாங்கம் வீழ்ச்சியை நோக்கிய திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்ற போது அல்லது, வீழ்ச்சியை சந்தித்த நிலையில், ஆட்சியாளர்களை நோக்கி ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது வழக்கம்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தான், கடந்த செவ்வாயன்று நாட்டில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களின் பட்டியலை வெளியிடப் போவதாக ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசநாயக்க அறிவித்திருந்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நூற்றுக்கும் அதிகமான ஆவணக் கோப்புகள் கொண்டு வரப்பட்டு, கடந்த காலங்களில் அரசாங்க நிதியை, மோசடி செய்தவர்கள், ஊழல் செய்தவர்கள் என்று குற்றச்சாட்டுகளை அவிழ்த்துப் போட்டார் அவர்.

ஊழல் மோசடிகள் அவிழ்த்து விடப்படவுள்ளன என்றதும், முதலில், எதிர்பார்ப்புக்குரியவர்களாக இருந்தது ராஜபக்ஷ குடும்பத்தினர் தான்.

எதிர்பார்க்கப்பட்டது போலவே, ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த பலர் தொடர்பான குற்றச்சாட்டுகளை மாத்திரமன்றி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தயாசிறி ஜயசேகர உள்ளிட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆவணங்களையும் அவர் அம்பலப்படுத்தினார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் பலர் அதனை மறுத்துள்ளனர். சிலர், அனுர குமாரவுக்கு எதிராக நீதிமன்றம் செல்லப் போவதாகவும் கூறியுள்ளனர். இலங்கைக்கு இவ்வாறான குற்றச்சாட்டுகளும், அதற்கு பதிலளிக்கப்படும் இவ்வாறான முறையும் புதிது அல்ல. 

2014 ஜனாதிபதி தேர்தலின் போதும், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னரும், ஏராளமான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

ராஜபக்ஷ குடும்பத்திடம் உள்ள சொத்துக்களை விற்றால், நாட்டின் கடனை அடைத்து விடலாம் என இன்று பெருமளவு மக்கள் நம்புகின்ற அளவுக்கு அந்தக் குற்றச்சாட்டுகள் அமைந்திருந்தன.

உள்நாட்டுச் சொத்துக்கள், வெளிநாட்டுச் சொத்துக்கள் என்று பட்டியலிடப்பட்டவை ஏராளம். அவ்வாறு கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் சொத்துக்கள், அல்லது முதலீடுகள் இதுவரை சட்டபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு காரணமான டொலர் நெருக்கடி ஏற்பட்டமை குறித்து ஐ.நா. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐ.நா. செயலகத்தில் கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.

அந்தக் கடிதத்தின் நோக்கம், இலங்கையில் இருந்து களவாடப்பட்டு வெளிநாடுகளின் பதுக்கப்பட்டுள்ள சொத்துக்களை இனங்கண்டு மீட்பதற்கு உதவ வேண்டும் என்பது தான்.

இது சரியான வழிமுறை தான். வெளிநாடுகளில் ராஜபக்ஷவினர் அல்லது வேறு தரப்பினர் சொத்துக்களை குவித்துள்ளனர், முதலீடுகளை செய்துள்ளனர் என்று வாய்வழி குற்றச்சாட்டுகளை சுமத்துவது முக்கியமல்ல.

அந்தக் குற்றச்சாட்டுகளை தீர விசாரித்து, உண்மையைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தண்டிப்பது தான் முறை. ஆனால், இலங்கையின் அரசியல் கலாசாரம், தண்டனை விலக்கு முறையைக் கொண்டது.

தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மாத்திரம் இந்த தண்டனை விலக்கு முறை பொருத்தமானதெனக் கருதி விடக்கூடாது.

பொருளாதாரக் குற்றங்களை இழைத்தவர்களும், ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர்களும், கூட அவ்வாறான நிலையைத் தான் அனுபவிக்கிறார்கள்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தி, ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம், எதனை சாதித்தது,?

ராஜபக்ஷவினருக்கும், அவர்களின் அரசாங்கத்தில் இருந்தவர்களுக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை விசாரித்து, தண்டனை வழக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதனை அவர்கள் தங்களின் ஆட்சிக்காலத்துக்குள் செய்து முடிக்கவில்லை.

மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், அத்தனை குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் கைவிடப்படும், என்பது நல்லாட்சி அரசாங்கத்துக்கு தெரியும்.

அவ்வாறு தெரிந்திருந்தும், துரிதமான விசாரணை நடத்தப்பட்டவில்லை. கடைசியில், ராஜபக்ஷவினர் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒவ்வொரு வழக்காக தள்ளுபடி செய்யப்பட்டது அல்லது குற்றச்சாட்டுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கடைசியில், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்பது போன்ற தோற்றப்பாடு உருவானது. அதற்கு பொறுப்பு நல்லாட்சி அரசாங்கம் தான்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு மிகவும் பிரபலமானது. பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவும், அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார். இப்போது அனுரகுமார திசநாயக்க வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகளில், மைத்திரிபால சிறிசேனவுக்கும் பங்கு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.

இந்த குற்றச்சாட்டை முன்னிறுத்தியே பிரதானமாக ஆட்சிக்கு வந்தது தற்போதைய அரசாங்கம். ஆனால், ரணில் விக்ரமசிங்கவையோ, மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்களையோ தற்போதைய அரசாங்கம் தண்டிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆட்சிக்கு வரும் வரையில், எதிர்த்தரப்பின் மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும், ஆட்சிக்கு வந்த பின்னர், அவர்களை மறைமுகமாக காப்பாற்றுவதும், மேல்மட்ட அரசியல்வாதிகள் மத்தியில், ஒரு கனவான் ஒப்பந்தம் போலவே காணப்படுகிறது.

மஹிந்தவை ரணில் காப்பாற்றுவார், ரணிலை மஹிந்த காப்பாற்றுவார். இருவரும் ஒருவரை ஒருவரை பகிரங்கமாக தாக்கிக் கொள்வார்கள், உள்ளுக்குள் உறவாடுவார்கள்.

ஒருவரின் காலை வாரினால் மற்றவரும் சேர்ந்தே விழ வேண்டியிருக்கும் என்பதால், இரண்டு பேருமே, காலை வாரிக் கொள்ளாமல் காப்பாற்றிக் கொள்வார்கள்.

இது தான் இலங்கையின் மோசமான அரசியல் கலாசாரம். 

ராஜபக்ஷவினரோ, ரணில் விக்ரமசிங்கவோ, சஜித் பிரேமதாசவோ, அல்லது குற்றம்சாட்டப்பட்ட எவரோ- வெறும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தவறு செய்தனர் என்ற முடிவுக்கு வரமுடியாது.

அதனை முறையாக விசாரித்து தவறை நிரூபித்து தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறான நிலையை உருவாக்கும் அரசியல் கலாசாரம் இலங்கையில் உருவாகவில்லை.

ஊழல் மோசடி இல்லாத அரசாங்கத்தை அமைக்கப் போவதாக வாக்குறுதி கொடுத்த கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் மீது இப்போது பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

குறிப்பாக, இறக்குமதி வரிக் குறைப்பில் பெரும் மோசடி இடம்பெற்றதாக கூறப்படுகிறது. பல்வேறு திட்டங்களில் மோசடிகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இலங்கையின் வரலாற்றில் இடம்பெற்ற மோசமான தோல்விகளுக்கு இந்த அரசாங்கமே காரணம் என்று அடையாளப்படுத்தப்படுகிறது.

அனுரகுமார திசநாயக்க அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தி விட்டதாக பெருமை கொள்ள முடியாது.

ஏனென்றால், இதே அனுரகுமார திசநாயக்க அங்கம் வகித்த ஜே.வி.பி. தான், ராஜபக்ஷவினர் அரசியலில் தழைத்துச் செழிக்கவும் ஆதரவு அளித்தது.

2005 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சுனாமி நிவாரண மோசடி தொடர்பான ஒரு வழக்கு இடம்பெற்றது.

அந்த வழக்கில் அவர் தண்டனை பெற்றிருந்தால், ராஜபக்ஷவினர் தங்களின் சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பியிருக்கவே முடியாது. 

இலங்கையின் வரலாறு வேறு விதமாக எழுதப்பட்டிருக்கும்.

அந்த நிலையை மாற்றியமைத்தவர் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா. அவர் மஹிந்த ராஜபக்ஷவை அந்த வழக்கில் இருந்து விடுவித்தார்.

2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் அதே சரத் என் சில்வா, மஹிந்த ராஜபக்ஷவை விடுதலை செய்து தாம் தவறு செய்து விட்டதாக, அரசியல் மேடைகளில் கூறியதை மறந்து விட முடியாது.

2005 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவையே வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று சந்திரிகா குமாரதுங்கவுக்கு அழுத்தம் கொடுத்து, ஆட்சிக்கு கொண்டு வந்ததும் ஜே.வி.பி. தான்.

ஒருவரை அரசியல் ரீதியாக முன்னிறுத்தும் போதும், ஆதரிக்கும் போதும், ஜே.வி.பி. உள்ளிட்ட எல்லாத் தரப்பினரும், அரசியல் நலன்களை மட்டும் எடை போடுகின்றனர். 

அதன் ஒட்டு மொத்த விளைவுகளையும் தான் நாடு அனுபவிக்கிறது.

இப்போது கூட, யார் யார் எவ்வளவு ஊழல்களைச் செய்தனர் என்ற குற்றச்சாட்டுகளோ, ஆதாரங்களோ அவசியமில்லை. 

அவற்றை முறையாக விசாரித்து, குற்றவாளிகளைத் தண்டிக்கும் கலாசாரத்தை உருவாக்குவது தான், முக்கியமானது.

அதனை நோக்கி இலங்கை பயணிக்காத வரையில், போர்க்குற்றவாளிகளும் சரி, பொருளாதாரக் குற்றவாளிகளும் சரி, தப்பித்துக் கொண்டேயிருப்பார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right