வரலாற்றுக்கு வெள்ளைபூசும் முகநூல் பிரசார தந்திரங்கள்

Published By: Digital Desk 5

09 May, 2022 | 11:19 PM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை

ஒரு தேர்தல் பிரசார மேடை. அதில் அரசியல் குடும்ப வாரிசு. அலைமோதும் கூட்டத்திற்கு நடுவே மேடையைச் சுற்றி வளையம் போல செந்நிற சட்டை அணிந்த தொண்டர்களின் அணிவகுப்பு. 

எல்லாமும் முகநூலில் நேரடியாக ஒளிபரப்பாகின்றன. ஒளிபரப்பு ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களால் பகிரப்படுகிறது.

இந்த ஒளிபரப்பை என் தாயும் பார்த்துக் கொண்டிருப்பார் என்று வாரிசு சொல்கிறார்.

 கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. அந்தத் தேசத்தில் மாத்திரமன்றி, உலகம் முழுவதும் புகழ் பெற்ற தாய். எதற்காக? ஊழலுக்காக! 

கறைபடிந்த குடும்பத்தின் மீது வைத்திருந்த கண்மூடித்தனமான விசுவாசத்தாலும் மறந்திருக்கக் கூடும். சரியாக 36வருடங்களுக்கு முன்னர், மக்கள் புரட்சியால் ஆட்சி கவிழ்க்கப்பட்ட சர்வாதிகாரி பேர்டினன்ட் மார்க்கோஸ்.

 மக்கள் பட்டினியில் வாடியபோது, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த இமெல்டா மார்க்கோஸ்.

ஏறத்தாழ இரு தசாப்த காலம் ஆட்சி செய்து கஜானாவை காலியாக்கி, வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற குடும்பம். 

அந்தக் குடும்பத்தின் ஒரே வாரிசு ‘பொங்பொங்’ என்ற செல்லப் பெயருடன் மீண்டும் பிலிப்பைன்ஸின் அரசியல் களத்தில் பிரவேசித்துள்ளார்.

 திங்கட்கிழமை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதம வேட்பாளர். 

வரலாற்றை அறிந்தவர்கள், வாரிசைத் துரத்தி அடித்திருப்பார்கள். ஆனால், பிலிப்பைன்ஸின் துரதிஷ்டமோ என்னவோ, அவர் 56சதவீத வாக்குகளை வெல்லுவார் எனக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

எப்படி சாத்தியப்பட்டது?

1965இல் ஜனாதிபதியாக பதவியேற்ற பேர்டினன்ட் மார்க்கோஸ், புதியதொரு பிலிப்பைன்ஸை கட்டியெழுப்புதல் என்ற உறுதிமொழியுடன் தான் ஆட்சிபீடம் ஏறினார்.

 பின்னர், கம்யூனிஸ புரட்சியை அடக்கும் போர்வையில் இராணுவ சட்டத்தை பிரகடனம் செய்தார். 

மனித உரிமைகள் மீறப்பட்டன. அரசியல் பகையாளிகளை சிறையில் அடைத்தார். எதிர்ப்புக் குரல் அடக்கப்பட்டது. 

பொதுச் சொத்துக்களைக் கபளீகரம் செய்தார். பிலிப்பைன்ஸின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தது.

 மனைவியின் ஆடம்பர வாழ்க்கையை அனுமதித்தார். அரச கஜானா காலியானது. 

‘ஆசியாவின் துயரம்’ என்று வர்ணிக்கும் அளவிற்கு பிலிப்பைன்ஸின் பொருளாதாரம் வீழ்ந்தது. 

மக்கள் பசியாலும், பட்டினியாலும் வாடினார்கள். இந்த நிலை பெரும்புரட்சிக்கு வித்திட்டது.

 மூன்று நாட்கள் நீடித்த புரட்சி. பொது வேலைநிறுத்தம். புரட்சியாளர்கள் அரச மாளிகையை முற்றுகையிட்டார்கள். 

ஏழைச் சிறார்கள் பட்டினியால் வாடுகையில், இமெல்டா மார்க்கோஸ் பாதணிகளுக்காக கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டதைக் கண்டார்கள். 

புரட்சியின் முடிவில் பேர்டினன்ட் மார்க்கோஸ் பதவி விலகினார். அவர்கள் குடும்பமாக ஹவாய் தீவிற்கு தப்பிச் சென்றார்கள்.

1989இல் பேர்டினன்ட் மார்க்கோஸின் மறைவை அடுத்து, தாயும் தனயனும் தாய்நாட்டுக்கு திரும்பியதற்கு காரணங்கள் இருந்தன. 

தமது வாரிசு அரசாள வேண்டுமென மார்க்கோஸ் குடும்பம் கொண்டிருந்த தீவிரமான ஆசை பிரதான காரணம். 

தமது மகன் அரசியல்வாதியாக வேண்டும் என்றே சிறுவயது முதல் செதுக்கி செதுக்கி வளர்த்திருந்தார், பேர்டினன்ட் மார்க்கோஸ். 

எல்லா அரச குடும்பத்து வாரிசுகளையும் போல, ‘பொங்பொங்’ விளையாட்டுப் பிள்ளையாகவே இருந்தார். பெரிதாக படிப்பும் ஏறவில்லை.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மெய்யியல், அரசியல், பொருளாதாரத் துறை சார் பட்டப்படிப்பு. 

அது அரசியல்வாதியாக வாழ்க்கையைத் தொடர சிறப்பான தகுதியென தந்தை நினைத்திருக்கலாம். மகனால் பரீட்சைகளில் சித்தி பெற முடியவில்லை. 

மார்க்கோஸ் குடும்பத்தை பிலிப்பைன்ஸ் மக்கள் அடியோடு வெறுத்தார்கள் என்றால், பொங்பொங்கின் அரசியல் மீள்பிரவேசம் எவ்வாறு நிகழ்ந்தது என்ற கேள்வி எழலாம்.  

இதற்குக் காரணம், இந்தக் குடும்பத்தின் ஊழலால் நன்மை பெற்ற சக்திகளின் அபரிமிதமான விசுவாசம் தான்.

பிலிப்பைன்ஸின் வடபகுதியில் உள்ள இலோகொஸ் நோர்ட்டே என்பது மார்க்கோஸ் குடும்பத்தின் கோட்டை.

 இங்கு விசுவாசிகள் அதிகம். பேர்டினன்ட் மார்க்கோஸ் 1972இல் இராணுவ சட்டத்தைப் பிரடகனம் செய்தார்.

 தொடர்ந்து 14வருடங்கள் பிலிப்பைன்ஸ் முழுவதும் இராணுவ சட்டத்தின் அராஜகத்தால் அல்லற்பட்ட வேளையில், வடபகுதி மக்கள் மாத்திரம் அமைதியாக வாழ்ந்தார்கள். 

இந்த மக்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இந்தப் பகுதிக்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு, வீதிகளும், பாலங்களும் கட்டிக்கொடுக்கப்பட்டன. 

மார்க்கோஸ் குடும்பம் ஊழல் புரிந்தது, கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டதென்றால், வடமாநிலத்தில் உள்ள மக்கள் இன்னமும் நம்பமாட்டார்கள். 

1991இல் இலோகொஸ் நோர்ட்டேயிற்குத் திரும்பிய தாயும், தனயனும், மிகவும் சூசகமான முறையில் அரசியல் தந்திரோபாயத்தைக் கட்டியெழுப்பினார்கள்.

 அதன் விளைவாகவே இன்று பொங்பொங் தேசிய அரசியல் நீரோட்டத்திற்குள் பிரவேசித்து ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் முன்னிலையில் நிற்கிறார்.

தமது தந்திரோபாயத்தில் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களை பிரசார களமாகவும், கடந்த காலத் தவறுகளுக்கு வெள்ளை பூசும் கருவியாகவும் மார்க்கோஸ் குடும்பம் பயன்படுத்துவதற்கு முக்கியமான காரணம் இருந்தது.

இது பிலிப்பைன்ஸ் மக்களின் வாழ்க்கையில் முகநூல் செலுத்தும் செல்வாக்கு. இந்நாட்டில் நூறு சதவீதமான மக்கள் பேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்கள். 

ஒவ்வொருவரும் சராசரியாக நான்கு மணித்தியாலங்கள் வரை முகநூலில் உலா வருகிறார்கள். 

இணையம் என்றால் முகநூல் என்றளவிற்கு இந்த சமூக ஊடகம் பொதுமக்களின் - குறிப்பாக இளந்தலைமுறையின் - வாழ்க்கையில் ஊடுருவி இருக்கிறது.

பொங்பொங்கை எடுத்துக் கொண்டால், சமூக வலைதளங்களில் அவரைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டுகிறது.

 இந்த சமூக ஊடகத்தை வைத்து சரியாக வித்தை காட்டும் கலை பொங்பொங்கின் ஊடகப் பிரிவிற்குத் தெரிந்திருக்கிறது.

பேர்டினன்ட் மார்க்கோஸ் என்னென்ன கெடுதல்களையெல்லாம் செய்தாரோ அதையெல்லாம் மறைத்து, அவர் செய்த கொஞ்சநஞ்ச நன்மைகளை எல்லாம் தொகுத்து மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடிந்திருக்கிறது.

உதாரணமாக, கடந்தாண்டு செப்ரெம்பர் மாதம் 11ஆம் திகதி மார்க்கோஸின் 104ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, பொங்பொங் தரப்பு முகநூலில் வெளியிட்ட எட்டு நிமிட காணொளியில் நம்பிக்கையூட்டும் பின்னணி இசையுடன், படோபடமான வார்த்தைகளுடன், மார்க்கோஸின் காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட பாலங்கள், வைத்தியசாலைகள், மின்விநியோக நிலையங்கள், அணுவாலை போன்றவை காண்பிக்கப்படுகின்றன.

 இதனை 47 இலட்சம் பேர் வரை பார்வையிடுகிறார்கள்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் மார்க்கோஸின் கொடுங்கோல் ஆட்சியில் துயரங்களை அனுபவித்திராதவர்கள். 

காணொளியில் காண்பிக்கப்பட்ட அணுவாலை வெறும் கட்டடத்திற்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்ட கண்துடைப்பு என்பதை அறியாதவர்கள்.

முகநூல், யூ-டியூப், டிக்-டொக் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் சித்தரிக்கப்படும் 'பொருளாதார ரீதியான பொற்காலத்தின்' மெய்யான யதார்த்தம், கொடுங்கோன்மையின் இருண்ட பக்கங்கள் என்பதை பிரசாரங்களுக்கு அப்பால் புரிந்து கொள்ள வேண்டிய அரசியல் பிரக்ஞை அவர்களுக்கு இல்லாதிருக்கலாம். 

இது இளந்தலைமுறையின் தவறு என்பதை விடவும் இளைஞர் யுவதிகளின் பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு, தமது பிரசார வியூகத்திற்குள் இரையாக்கும் அரசியல்வாதிகளின் குள்ளநரித் தந்திரம் என்பதே உண்மை.

தமது குடும்பத்தின் கறைபடிந்த வரலாற்றை மறைத்து, அதனை பிலிப்பைன்ஸ் மக்களின் ஆபத்பாந்தவனாக சித்தரிப்பதற்கு பொங்பொங்கின் தரப்பு சர்ச்சைக்குரிய கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா என்ற நிறுவனத்தின் உதவியையும் நாடியிருப்பதாகத் தெரிகிறது.

அமெரிக்காவோ, இலங்கையோ, சமகாலத்தில் சகல நாடுகளிலும் மக்களது பிரதான ஜனநாயகக் கடமையான வாக்களிப்பின் மீது சமூக ஊடகங்கள் செலுத்தும் தாக்கம் தீவிரம் பெற்று வருவதை நாம் நேரில் காண்கிறோம்.

இந்த விடயத்தில் பிலிப்பைன்ஸின் ஜனாதிபதித் தேர்தல் முக்கியமானது. ஒரு தேசத்தின் கறைபடிந்த வரலாறு பற்றிய மெய்களை மறைத்து, சமூக ஊடகங்கள் வாயிலாக பொய்மையைக் கட்டியெழுப்பு வாக்காளரின் சிந்தனையை மாற்றி, ஜனநாயகத்திற்கே சவால் விடுக்க முடியுமா என்பதைத் தீர்மானிக்கக் கூடிய தேர்தலாக அமைந்திருப்பது இதற்குக் காரணம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்