பேராயர் மல்கம் ரஞ்சித் பாப்பரசர் சந்திப்பும்,தமிழ் ஆயர்களின் கோரிக்கைகளும்

Published By: Digital Desk 3

07 May, 2022 | 04:27 PM
image

 ம.ரூபன்

2019 உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புக்கு நீதியான விசாரணை முன்னெடுக்கப்படவில்லை என அரசு மீது குற்றம் சுமத்தும் பேராயர் மல்கம் ரஞ்சித் சர்வதேச விசாரணையை நாடி பரிசுத்த பாப்பரசரையும்,ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட்டையும் சந்தித்துள்ளார்.

இந்த ஆட்சி ஏற்படுவதற்கும் ஆதரவளித்தவர்.போர்க்குற்ற சர்வதேச விசாரணையை தமிழ் மக்கள் கோருவதையும் எதிர்த்தவர்.இன்று சர்வதேச விசாரணையை கோரி சென்றுள்ளார்.

2009 இறுதிப்போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக 2011 ஏப்ரல் 26 ஐ.நா. அறிக்கையில் குற்றம் சாட்டியதை கத்தோலிக்க ஆயர் பேரவையின்  தலைவரான கருதினால் மல்கம் ரஞ்சித்  நாட்டின் உளவுத்துறையை அவமதிக்கும் செயலாகும் என விமர்சித்தார். அதே ஆண்டு நவம்பர் 11 மொரட்டுவை அன்னை திரேசா மடத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்படுவதாக அம்மடத்தை சுற்றிவளைத்து அருட்சகோதரி எலினாவை கைது செய்தனர்.

உளவுத்துறைக்கு கிடைத்த தகவலால் இந்நடவடிக்கை என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கூறியது.இச்சபை ஜனாதிபதியின் கீழ் இயங்கியது.

இறுதிப்போர் 2011 ஐ.நா.தீர்மானத்தை மேற்கு நாடுகள் உள்விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டி நிராகரித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி எம்.பியாக இருந்தபோது பிரேமதாச ஆட்சிக்கால மனித உரிமை மீறல்களின் ஆதாரங்களை ஜெனிவாவுக்கு எடுத்துச்செல்ல 1990 செப். 11 கட்டுநாயக்கா விமான நிலையம் வந்தபோது ASP குடாகெட்டி அவரிடம் இருந்த 533 காணாமல்போனோர் ஆவணங்கள் புகைப் படங்களை பலவந்தமாக கைப்பற்றினார்.

ஒரு எம்.பியை சபாநாயகரின் அனுமதியின்றி பொலிசார் விசாரணை செய்வது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறுவதாக வாசுதேவ நாணயக்காராவும், ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயும் சபையில் கூறினார்கள்.

மகிந்த ராஜபக்ஷ பேசுகையில் உதவி வழங்கும் நாடுகள் மனித உரிமைகள் மீறப்படாது என்ற நிபந்தனைகளை இலங்கைக்கு விதிக்கவேண்டும். மீறினால் உதவிகளை நிறுத்தவேண்டும்.இப்பிரச்சினையை ஜெனிவா மட்டுமல்ல உலக நாடுக ளுக்கும் கொண்டு செல்வோம்.காணாமல் போனவர்களின் தாய்மாருடன் நிற்போம் என்றார்.

யுத்தம் ஆரம்பம் முதல் முடியும் வரை வடக்கு,கிழக்கில் படையினரின் மனித உரிமை மீறல்களை பாப்பரசருக்கும் ஆட்சியாளர்களுக்கும் தமிழ் ஆயர்கள் முறையிட்டு நீதி விசாரணையை கோரினார்கள். இறுதி யுத்தத்தில் தமிழின அழிப்பு என கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் பகிரங்கமாக துணிந்து கூறியவர் மன்னார் ஆயர் இரா.ஜோசப்.கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டிலும் தமிழ் மக்களின் அவலங்களையும்,சுயநிர்ணய உரிமையையும் குறிப்பிட்டார்.

வன்னியில்  146,679 பேருக்கு என்ன நடந்தது என்று அரசிடம் கேட்டு இனப்படுகொலை என்றார். ஜாதிக ஹெல உறுமய போன்ற பௌத்த அமைப்புகள் நாட்டை காட்டிக்கொடுத்தார் கைது செய்யும்படி கோசமிட்டனர். மன்னார் ஆயர் இரகசிய பொலிஸ், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்   விசாரணை செய்யப்பட்டார்.

1985 இல்  இலங்கை தமிழர்களை இலங்கை  படையினரிடம் இருந்து பாதுகாக்குமாறு தமிழக கத்தோலிக்க ஆயர்கள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி யை கோரியபோது கொழும்பு பேராயர் நிக்கலஸ் மார்க்கஸ் எதிர்த்து அறிக்கை விடுத்தார். யாழ்.ஆயர்.வ.தியோகுப்பிள்ளை ஒரு நிகழ்வில் எமது பிரச்சினையில் ஐ.நா.தலையிடவேண்டும் எனக்கூறியதையும் பேராயர் நிக்கலஸ் விமர்சித்தார். இவரது பூர்வீகம் தமிழ். நீர்கொழும்பு முன்னக்கரை பிறப்பிடம்.

வடக்கில் ஒரு காலம் கிறிஸ்தவ கல்லூரிகளில் சிங்கள மாணவர்கள் கல்வி கற்றனர். உதாரணம்- (யாழ்.சென்.பற்றிக்ஸ்)மெனிக் திவெல (ஜனாதிபதி ஜே.ஆரின்.செயலர்) அமைச்சர் ஈ.எல்.பி ஹுருல்ல,நீதியரசர் ஜெய பத்திரன.(சென்.ஜோண்ஸ்)அமைச்சர் மைத்திரிபால சேனாநாயக்கா,(ஹாட்லி) அமைச்சர் கே.பி.இரட்னாயக்கா. இப்படி பலர்  1970 களில் மட்டக்குளி புனித அன்ட்ரூ தேவாலயத்தில் தமிழ் மொழி திருப்பலிக்கு சிலர் எதிர்த்ததால் சில காலம் ஆலயம் மூடப்பட்டது.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திலும் இப்பிரச்சினை ஒரு தடவை ஏற்பட்டது.சிலாபம் பிரதேசத்தில் நாற்பது தமிழ் கத்தோலிக்க பாடசாலைகள் சிங்கள பாடசாலைகளாக மாற அன்றைய சிலாபம் ஆயர் எட்மன் பீரிஸ் செயற்பட்டார். சிலாபம்,நீர்கொழும்பு பிரதேசங்களில் பூர்வீகமாகக்கொண்ட தமிழ் கத்தோலிக்கர்கள் இன்று சிங்களவர்களாக மாறியுள்ளனர்.

கொழும்பு  உட்பட தெற்கில், மலையகத்தில் தமிழ் மொழியில் திருப்பலிகள் நடைபெறுகின்றன. இரு மொழிகளின் திருப்பலிகள்,வழிபாடுகளுக்கு இரு சமூகத்தினரும் சமூகமளிக்கின்றனர்.சில சிங்கள குருமார் தமிழிலும்,தமிழ் குருமார் சிங்களத்திலும் திருப்பலிகள்,வழிபாடுகளை நடாத்துகின்றனர்.

யுத்த காலத்திலும் தற்போதும் இரு இனங்களிடம் ஒற்றுமை ஐக்கியம் தொடர்கிறது.மறைந்த கண்டி ஆயர் போல் பெரேரா யாழ்.சென்.பற்றிக்ஸ் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இனக்கலவரங்களால் கண்டி- அம்பிட்டிய தேசிய குருமடத்தில் தமிழ் குருமாணவர்கள் கற்கமுடியாத சூழல்களை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் தமிழ் குரு மாணவர்களுக்கு ஒரு பெரிய குருமடத்தை ஆரம்பிக்க யாழ்.ஆயர்.வ.தியோகுப்பிள்ளை பாப்பரசரிடம் அனுமதி கோரி முயற்சி எடுத்தபோது தெற்கு ஆயர்கள் எதிர்த்தனர்.எனினும் யாழ்.கொழும்புத்துறை குருமடத்தை ஆரம்பிக்க வத்திக்கான் அனுமதி வழங்கியதுடன் இன்று சிறப்பாக இயங்குகிறது.

வடக்கில் முதன்  முதலாக 1985 ஜனவரி 5  இரவு வங்காலை புனித அன்னம்மாள் ஆலயத்தில் அருட்தந்தை மேரி பஸ்ரியன் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு சடலமும் வெள்ளை வானில் எடுத்துச்செல்லப்பட்டதை  மக்கள் நேரில் கண்டனர். படையினரின் மனித உரிமை மீறல்களை மேலிடத்துக்கு அறிவிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினரான அவரின் படுகொலை உண்மைத்தகவல்களை ஜே.ஆர் அரசு மூடிமறைத்து பொய்ப்பிரசாரம் செய்தது.

"வண.மேரி பஸ்ரியன் கடல் மார்க்கமாக தமிழகத்துக்கு தப்பி ஓடிவிட்டார்.இரவு 11 மணிக்கு படையினர் ஆலயத்தை சுற்றி வளைத்து மோதலில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஐவரை படையினர் பிடித்தனர்"என தேசிய பாதுகாப்பு அமைச்சர்  அத்துலத் முதலி கூறினார்.கொழும்பு பேராயர் நிக்கலஸ் மார்க்கஸ் பெர்னாண்டோவும் வண.மேரி பஸ்ரியன்  இந்தியாவில் நலமாக இருப்பதாக அரசுக்கு சார்பாக பாப்பரசருக்கு அறிவித்திருந்தார்.

தென் பகுதியில் பல கத்தோலிக்க குருமார் இதனை மூடிமறைப்பதற்கு அரசுக்கு ஒத்துழைத்தனர். அருட்தந்தை ஒஸ்வல்ட் கோமிஸ் தீவிரமாக செயற்ப ட்டார் என (The Continuing Harasment of Bishop Rayappu Joseph) என்ற நூலில் பிறைன் செனிவிரட்னா எழுதியுள்ளார். இந்த நூல் பாப்பரசர் உட்பட பலருக்கு அனுப்பப்பட்டது.2002 ஜூலை 6 ஒஸ்வல்ட் கோமிஸ் கொழும்பு பேராயரானார்.

"ஆயுதங்களும்,வெடிபொருட்களும் ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்டன. ஆலயத்தை பயங்கரவாதிகள் தளமாக பயன்படுத்தினார்கள்" என இலங்கை வானொலிச் செய்தியில் கூறப்பட்டதுடன் அரச சார்பு ஆங்கில பத்திரிகையில் ( PITCHED BATTLE AT CHURCH SITE) என்ற தலைப்பு செய்தி.

மன்னார் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் இதனை மறுத்து ஜனவரி 6 அதிகாலை வண மேரி பஸ்ரியன் கொல்லப்பட்டதாக கூறினார். தள்ளாடி இராணுவ முகாம் பொறுப்பதிகாரிக்கு ஆயர் தொலைபேசியில் முறையிட்டபோது,வங்காலை ஆலயத்தில் 8 பேரின் சடலங்கள் மீட்பு,பங்குத்தந்தை தப்பியோடி விட்டார் என அவ்வதிகாரி ஆயருக்கு பதிலளித்தார்.

வெளிநாடுகளின் தூதரகங்களுக்கும் தவறான தகவல்களை அரசு அனுப்பியது. பிரிட்டனில் உள்ள இலங்கை உயர் ஸதானிகர் சந்திரா மொன்றவெல தனது அறிக்கையில் வங்காலை சம்பவம் தமிழ் நீதிபதி விசாரணை நடத்தினார். வண்.மேரி பஸ்ரியன் கைதாகாது தலைமறைவானார். அவரை படையினர் கொன்றதற்கான சாட்சிகள் இல்லை எனக்குறிப்பிட்டிருந்தார். இதனையும் மன்னார் ஆயர் மறுத்தார்.

ஜனவரி 9 மன்னார் ஆயர் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கு அனுப்பிய கடிதத்தில் மெதடிஸ்த திருச்சபை குரு வண.ஜோர்ஜ் ஜெயராஜசிங்கம் படுகொலைக்கு பின்னர் ஒரு மாதத்தில் இரண்டாவது கிறிஸ்தவ குருவை படையினர் படுகொலை செய்துள்ளனர்.

இச்சம்பவங்கள் பொதுமக்கள்,குருக்கள் மத்தியில் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.எனது குருக்களுக்கும்,எனக்கும் இவை நிகழலாம் என அஞ்சுகிறோம்.இதற்கு உயர் மட்ட நீதியான விசாரணை நடாத்தப்படவேண்டும் எனக்கோரியிருந்தார்.

இக்கொலையை நேரில் கண்டவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஜனவரி 12,13 அளித்த வாக்குமூலம் விசாரணையை அரசு வெளியிடாதது கவலை அளிப்பதாகவும் நீதி விசாரணை நடாத்தப்படவேண்டும் என்றும் கத்தோலிக்க ஆயர் மன்றம் தெரிவித்தது.லண்டன் (Amnesty International ) அறிக்கையில்-ஆலய பின்புறமாக நுழைந்த படையினர் யன்னல் ஊடாக அவரை சுட்டுக்கொன்றனர். சடலத்தை படிக்கட்டில் வைத்து புகைப்படம் எடுத்தனர்.சீருடையில் படையினர் சடலத்தை வெள்ளைவானில் எடுத்துச்சென்றனர்.

யாழ்.ஆயர்.வ.தியோகுப்பிள்ளை இலங்கை அரசு இதற்கு உடன் விசாரணை மேற்கொள்ளவும், சிறுபான்மையினரின் பாதுகாப்பு மனித உரிமையை  பேணவும் நடவடிக்கை எடுக்கக்கோரி  பாப்பரசருக்கு தந்தி அனுப்பவும் அரசு தடைசெய்தது. ஜனவரி 21 ஆயர் யாழ்.அஞ்சல் அலுவலகத்தில் ஒப்படைத்த இத்தந்தியை இத்தாலிக்கு அனுப்பமுடியாதுள்ளதாக (The Telegram has not been transmitted) ஜனவரி 24 யாழ்.அஞ்சல் அதிபர் எழுத்துமூலம் யாழ்.ஆயருக்கு தெரிவித்தார்.

1986 ஜூன் 20 வசாவிளான்-தோலகட்டி ஆச்சிரமத்தில் தோட்டத்தில் வேலைசெய்துகொண்டிருந்த அருட் சகோதரர் இம்மனுவேல் வென்சஸ்லஸ் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பலாலி படை முகாம் அருகில் இயங்கிய இவ்வாச்சிரமத்தில் விவசாயம்,கால் நடை பண்ணை நீண்டகாலமாக கத்தோலிக்க துறவிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.படை அதிகாரிகளே இங்கு வந்துள்ளனர்

1986 ஜூலை 8 பரந்தன் பங்குக்குருவான ஒல்லாந்தை சேர்ந்த அருட் தந்தை எம்.ஒம்லோ அடிகளார் ஜீப்பை ஓட்டி வரும்போது குமரபுரம் பகுதியில் ஹெலிக்கப்படர் வட்டமிட்டு சுட்டதில் அருகில் இருந்த இளைஞன் படுகாயமடைந்தார்.

2006 ஏப்ரல் 20 மகிந்த ஆட்சியில் அல்லைப்பிட்டி கடற்படை சோதனை நிலையம் அருகில் அருட்தந்தை ஜிம்பிறவுண் காணாமல்போனார்.2009 மே 18  வன்னியில் படையினரிடம் மக்களோடு சரண்டைந்த அருட் தந்தை பிரான்சிஸ் யோசப் காணாமல் போனார்.1990 ஆகஸ்ட் 15 மட்டக்களப்பில் அமெரிக்க அருட்.தந்தை இயூஜின் ஜே.ஹேபேரட் காணாமல்போ னார்.

1993 நவம்பர் 13 யாழ்.சென்.ஜேம்ஸ் ஆலயம் மீது விமானத்தாக்குதல்.10 பேர் பலி.ஆலயம் முற்றாக சேதம்.1995 ஜூலை 9 நவாலி புனித பீட்டர் ஆலயத்தின் மீது மீது விமானக்குண்டு வீச்சு.அங்கு தஞ்சமடைந்திருந்த 147 பேர் பலி. 150 பேர் படுகாயம்.( ICRC- ஜெனிவா அறிக்கை).மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அரசு அறிவித்து தாக்குதல்.புலிகளின் ஆயுதக்கிடங்கு வெடித்தது என விமானப்படை கூறியது.

1999 நவம்பர் 20 மடுமாதா ஆலயம்மீது படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சில் 35 பேர் பலி.60 பேர் காயம்.13 சிறார்கள். இப்பகுதியை UNHCR அகதிகள் தங்கும்  அமைதி பகுதியாக  பிரகடனப்படுத்தியிருந்தது. 2006 ஜூன் 17 மன்னார்-பேசாலை தேவாலயத்தின் மீது நீல சேர்ட், அரைக்காற்சட்டை அணிந்தவர்கள் தாக்குதல். இங்கு நூற்றுக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்திருந்தனர்.6 பேர் பலி,47 பேர் காயம்.இவற்றுக்கு நீதி விசாரணை இல்லை.

தென் பகுதி சிங்கள ஆயர்கள் தமிழர்களை கண்டுகொள்வதில்லை.யுத்தம் முடிந்தும் மக்களின் காணிகள் விடுவிப்பு,மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு,அரசியல் கைதிகள் விடுதலை போன்ற பல பிரச்சினைகள் குறித்து இவர்கள் குரல் எழுப்பியதில்லை.இதனால் வடக்கு கிழக்கு தமிழ் ஆயர்கள் தனியாக ஆயர் மன்றத்தை ஏற்படுத்தி செயற்படுகின்றனர். எதிர்காலத்தில் வத்திக்கானால் அங்கீகரிக்கப்பட்டு தமிழ் பேராயரும் உயர் மறைமாவட்டமும் (Archdiocese) உருவாகும் என எதிர்பார்க்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகில் முதல் முறையாக சூரியனை மிக...

2023-12-11 18:05:44
news-image

இலங்கையில் தொடரும் பொலிஸாரின் மனித உரிமை...

2023-12-11 17:19:03
news-image

மக்ஹெய்சர் விளையாட்டரங்கு சமூக சீர்கேடுகளின் அரங்கமா? 

2023-12-11 14:40:57
news-image

மன்னார் மாவட்டத்தின் நிலையான அபிவிருத்தியும் தலைமன்னார்...

2023-12-11 14:32:10
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கோரமுகம்

2023-12-11 13:46:00
news-image

காசா டயறி - "சான்டா, இம்முறை...

2023-12-11 11:39:34
news-image

படைக்குள் உருவாகும் குழப்பம்

2023-12-10 22:59:03
news-image

பிரித்தானியாவின் பதில் என்ன?

2023-12-10 23:00:23
news-image

கடைசி மூச்சை இழுத்து கொண்­டி­ருக்­கி­றது இஸ்ரேல்

2023-12-10 23:17:37
news-image

ஒல்­லாந்தில் இஸ்­லா­மிய வெறுப்­பா­ளரின் தேர்தல் வெற்றி...

2023-12-11 10:44:32
news-image

அதிர்வுகளை ஏற்படுத்தப்போகும் தலைமைத்துவ போட்டி

2023-12-10 23:19:47
news-image

ஹென்றி கீசிங்கரும் வரலாற்றில் அவரின் வகிபாகமும்

2023-12-10 23:07:09