தமிழ் திரை உலகில் லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்திருக்கும் புதிய திரைப்படமான ' ஓ2 ' டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் ஜி. எஸ். விக்னேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'ஓ2'. இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். அவருடன் நடிகை லீனா, நடிகர்கள் ஆர் என் ஆர் மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாபர் இடுக்கி, இவர்களுடன் ரித்விக் என்ற குழந்தை நட்சத்திரமும் நடித்திருக்கிறார்கள். 

தமிழ் ஏ. அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். 

ரோட் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கிடையேயான எல்லையோர மலைப்பகுதியில் ஒரு தாய், தன் எட்டு வயது மகனுடன் பேருந்தில் பயணிக்கிறார்.‌ 

அந்த பிள்ளை நுரையீரல் பாதிப்புடன் இருப்பதால் எப்போதும் அவனுடன் ஓக்சிஜன் சிலிண்டர் இருக்கும். எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்து விபத்தில் சிக்குகிறது. 

பேருந்தில் இருக்கும் பயணிகள் ஓக்சிஜன் சிலிண்டர் மீது கண் வைக்க.. அவர்களிடமிருந்து தன் மகனை அந்தத்தாய் எப்படி காப்பாற்றுகிறாள்? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறோம்.

 தாய் கதாபாத்திரத்தில் நயன்தாராவும், அவரது மகனாக ரித்விக்கும் நடித்துள்ளனர்.

 இந்த திரைப்படம் விரைவில் டிஸ்னி ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகவிருக்கிறது.'' என்றார்.

இந்த படத்தின் டைட்டிலுகான மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. 

நயன்தாரா கதையின் நாயகியாக நடித்திருப்பதாலும், 'ஓ2' என வித்தியாசமாக தலைப்பு இருப்பதாலும் இணையவாசிகள் இதனை வழக்கத்தை விட கூடுதலாக கண்டு ரசித்து வருகிறார்கள்.