எம்மில் பலரும் தங்களின் வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டதுடன், உணவு பழக்க வழக்கத்தையும் முற்றிலும் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

இதன் காரணமாக செரிமான மண்டலங்களில் புற்றுநோய் ஏற்படுவதற்கான பாதிப்பு அதிகரித்து வருகிறது.

 மக்களுக்கு இது தொடர்பான முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை. 

இந்நிலையில் கல்லீரல் அருகே உள்ள பித்த குழாயில் ஏற்படும் புற்று நோயை குணப்படுத்த நவீன சிகிச்சை அறிமுகமாகி, நல்லதொரு பலனை வழங்கி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

தொடர் வயிற்று வலி, அடிக்கடி வாந்தி, ரத்தவாந்தி, மலத்தில் ரத்தம் வெளியேறுதல், திடீரென உடல் எடை குறைவு, பசியின்மை, அதீத உடல் சோர்வு, மருந்துகளுக்கும், சிகிச்சைகளுக்கும் கட்டுப்படாத மஞ்சள் காமாலை பாதிப்பு போன்றவை செரிமான மண்டலங்களில் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அறிகுறிகளாக மருத்துவர்கள் எடுத்துரைக்கிறார்கள்.

 இத்தகைய அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

சிலருக்கு கல்லீரல் அழற்சி பாதிப்புகள் ஏற்பட்டிருக்கக்கூடும் அல்லது மஞ்சள் காமாலை நோய் பாதிப்பின் ஆரம்ப அறிகுறி இருக்கலாம்.

 இவர்களும் என்டோஅல்ட்ரா சோனோகிராபி என்ற  பரிசோதனையை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக தெரிந்து கொள்ள வேண்டும். 

இந்தப் பரிசோதனையின் முடிவில் சிலருக்கு கல்லீரல் அருகே உள்ள பித்தக் குழாயில் (Bile Duct) புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். 

இந்த பகுதியில் புற்றுநோய் பாதிப்பு இருந்தால், அதனை சத்திரசிகிச்சை செய்து அகற்றுவது கடினமானதாக இருக்கும்.

 இதன் காரணமாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ரேடியோ ஃபிரிகுவன்சி அப்ளேஷன் என்ற சிகிச்சையை பயன்படுத்தி புற்றுநோய் கட்டியின் வீரியத்தையும், அளவையும் குறைத்து, பாதிப்பைக் கட்டுப்படுத்த இயலும்.

 மேலும் சிலருக்கு என்டோஅல்ட்ரா சோனோகிராபி என்ற பரிசோதனை மூலம் புற்று நோய் பாதிப்பை துல்லியமாக அவதானித்து, அவ்விடத்தில் இத்தகைய ரேடியோ ஃபிரிகுவன்சி அப்ளேஷன் சிகிச்சையை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும்.

டொக்டர். சந்திரசேகர்

தொகுப்பு அனுஷா.