'அசுரன்' பட புகழ் நடிகை மஞ்சுவாரியர் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்டிமீட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் மணிரத்னம் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் 'சென்டிமீட்டர்'. இந்த திரைப்படத்தில் மஞ்சுவாரியர் கதையின் நாயகியாக நடிக்கிறார். 

அவருடன் நடிகர் காளிதாஸ் ஜெயராம், யோகி பாபு, ஷைலி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய், ராம் சுரேந்தர், கோபி சுந்தர் என மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்து இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் மற்றும் ஷிவாஸ் பிலிம்ஸ் சார்பில் கோகுலம் கோபாலன் மற்றும் சந்தோஷ் சிவன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் மணிரத்தினம் வெளியிட்டிருக்கிறார். இதற்காக பிரத்யேக காணொளி ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார். ஃபர்ஸ்ட் லுக்கில் யோகிபாபுவின் இசைக்கலைஞர் தோற்றமும், மஞ்சு வாரியாரின் நடன மங்கை தோற்றமும், இவர்கள் இருவரையும் ஆட்டுவிக்கும் கதாபாத்திரத்தில் காளிதாஸ் ஜெயராமின் தோற்றமும் ரசிகர்களைக் கவர்ந்திருப்பதால், ஃபர்ஸ்ட் லுக்கிற்கு எதிர்பார்ப்பை விட கூடுதலாக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதனிடையே நடிகை மஞ்சு வாரியர் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.