(எம்.மனோசித்ரா)

நாட்டின் 25 மாவட்டங்களிலும் உள்ள 80 000 ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்குவதற்காக 200 000 யூரோக்களை அதாவது சுமார் 74 மில்லியன் ரூபாவை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ,

நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக மருந்துகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அத்தோடு ஆயிரக்கணக்கான குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறனும் குறைவடைந்துள்ளது. மின்வெட்டு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாத காரணத்தால் சிறுவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.

முதலுதவி, மருத்துவப் பொருட்கள் மற்றும் மாணவர்களின் கல்வி உள்ளிட்ட பல் நோக்குடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.  

கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் இந்த நெருக்கடியால் பாதிக்கப்படக்கூடியவர்கள் என அதிக தேவையுடைய நபர்களுக்கு உதவிகளின் போது முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த நிதியானது சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின்  பேரிடர் நிவாரண அவசர நிதிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த பங்களிப்பின் ஒரு பகுதியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.