இலங்கை அர­சி­யலைச் சரி­யாகப் புரிந்­து­கொண்ட நிதா­ன­புத்­தி­யு­டைய எவ­ருமே அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் அதுவும் குறிப்­பாக உயர்­மட்ட அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் அவர்­களின் பரி­வா­ரங்­க­ளி­னதும் ஊழல் மோச­டி­க­ளுக்கும் முறை­கே­டு­க­ளுக்கும் எதி­ரான நட­வ­டிக்­கைகள் பய­ன­ளிக்­கக்­கூ­டிய சாத்­தி­யப்­பா­டுகள் குறித்து எந்­த­வி­த­மான மாயை­யையும் கொண்­டி­ருக்­க­மாட்­டார்கள். ராஜபக்ஷ ஆட்­சிக்­கா­லத்தில் ஊழல் மோச­டி­க­ளிலும் அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்­க­ளிலும் ஈடு­பட்­ட­வர்­களைச் சட்­டத்தின் முன்­னி­றுத்தி தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும் என்று நாட்­டு­மக்­க­ளுக்கு உறு­தி­ய­ளித்­துக்­கொண்டு கடந்த வருடம் ஜன­வ­ரியில் ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்ற மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் அவரின் தலை­மை­யி­லான அர­சாங்­கமும் அது விட­யத்தில் பய­னு­று­தி­யு­டைய நட­வ­டிக்­கை­களை எடுக்­கக்­கூ­டி­ய­தாக இருக்­கு­மென்று எவ­ரா­வது நம்­பிக்கை கொண்­டி­ருந்­தி­ருப்­பார்­க­ளே­யானால், அவர்கள் இனி­மேலும் அத்­த­கைய நம்­பிக்­கை­யுடன் இருப்­ப­தற்கு வலு­வான எந்தக் கார­ணமும் இல்லை.

இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் முன்­னென்­று­மில்­லாத வகையில் இரு பிர­தான அர­சியல் கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து தேசிய ஐக்­கிய அர­சாங்­கத்தை அமைத்­த­போது நாட்டில் புதி­ய­தொரு அர­சியல் கலா­சா­ரத்தை உரு­வாக்­கப்­போ­வ­தாகப் பிர­க­டனம் செய்­து­கொண்ட அதன் தலை­வர்கள் அதே பழைய கட்சி அர­சியல் கலா­சா­ரத்­துக்கு அப்பால் நகர முடி­யா­த­வர்­க­ளாக நகர விருப்­ப­மில்­லா­த­வர்­க­ளாக தடு­மா­றிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். 

இவ்விரு கட்சிகளினதும்  தலை­வர்கள் நாடும் மக்­களும் எதிர்­நோக்­கு­கின்ற எந்­த­வொரு முக்­கி­ய­மான பிரச்­சினை தொடர்­பிலும் கருத்­தொ­ரு­மிப்­பை­க் காண­மு­டி­யா­த­வர்­க­ளாக அல்­லது காண­வி­ருப்­ப­மில்­லா­த­வர்­க­ளாக இருப்­ப­தையும் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது ராஜபக் ஷாக்களை மீண்டும் ஆட்­சி­ய­தி­கா­ரத்­துக்கு வர­வி­டக்­கூ­டாது என்­பதைத் தவிர, வேறு எந்­த­வொரு விவ­கா­ரத்­திலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் இடையில் பெரிதாக கருத்­தொற்­றுமை இல்லை என்­றுதான் கூற­வேண்டும். ராஜபக் ஷாக்கள் மீண்­டு­வ­ரு­வதை தடுப்­ப­தற்­கா­கவே இவர்கள் இரு­வ­ருக்கும் இடை­யி­லான பிணக்­கு­களை அவ்­வப்­போது தணிப்­ப­தற்­கான மத்­தி­யஸ்தர் பாத்­தி­ரத்தை முன்னாள் ஜனா­தி­பதி திரு­மதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஏற்­றி­ருக்­கிறார் என்­பது எல்­லோ­ருக்­குமே தெரியும்.

எது எவ்­வா­றி­ருந்­தாலும்இ அண்­மைக்­கா­லத்­தி­லான பல நிகழ்வுப் போக்­குகள் தேசிய ஐக்­கிய அர­சாங்­கத்தின் எதிர்­காலம் குறித்து கடு­மை­யான சந்­தே­கங்­களைக் கிளப்­பி­யி­ருக்­கின்­றன. பல விவ­கா­ரங்­களில் முரண்­பட்ட நிலைப்­பா­டு­களைக் கொண்ட சுதந்­திரக் கட்­சிக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்­கு­மி­டையில் கடந்த 22 மாதங்­க­ளாக நீடித்­து­வந்­தி­ருக்கும். ‘அர­சியல் சக­வாழ்வு’ சஞ்­ச­லத்­துக்­கு­ரி­ய­தாக மாறிக்­கொண்­டு­வ­ரு­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை. 2015 ஆகஸ்ட் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­குப்­பி­றகு அமைக்­கப்­பட்ட தேசிய ஐக்­கிய அர­சாங்கம் இரு­வ­ரு­டங்­க­ளுக்­கா­னது என்று முதலில் கூறிய அதன் தலை­வர்கள் ராஜபக் ஷவின் அணி­தி­ரட்­டல்­க­ளினால் தோன்­றிய நிலை­வ­ரங்­க­ளை­ய­டுத்து முழு­மை­யாக தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்தின் பத­விக்­கால முடி­வு­வரை ஐந்து வரு­டங்­க­ளுக்­கா­னது என்று கடந்த மாதம் அறி­வித்­தி­ருந்­தார்கள். ஆனால் இடை­யி­டையே ஜனா­தி­பதி சிறி­சேன உட்­பட சுதந்­திரக் கட்­சியின் முக்­கிய தலை­வர்கள் பலர் தாங்கள் தனி­யாக ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான எதிர்­காலத் திட்­டங்கள் குறித்தும் பேசிக்­கொள்­கி­றார்கள். ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு தனி­யாக அர­சாங்­கத்தை அமைக்­கக்­கூ­டி­ய­தாக பாரா­ளு­மன்­றத்தில் அறுதிப் பெரும்­பான்­மைப்­பலம் இல்­லாத கார­ணத்தால் அதன் தலைவர் பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் வேறு­வ­ழி­யில்­லாமல் ஜனா­தி­பதி சிறி­சே­னவின் தலை­மை­யி­லான சுதந்­திரக் கட்சிப்  பிரி­வி­ன­ருடன் சக­வாழ்வைத் தொடர வேண்­டி­யி­ருக்­கி­றது-

ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் நில­விய முன்­னென்­று­மில்­லாத வகை­யி­லான ஊழல் மோச­டிகள், முறை­கே­டுகள் சட்­டத்தின் ஆட்­சியின் சீர்­கு­லைவுஇ குடும்ப அர­சியல் ஆதிக்கம் மற்றும் அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு எதி­ராக நாட்டின் சகல சமூ­கங்கள் மத்­தி­யிலும் தோன்­றிய வெறுப்­பு­ணர்வின் கார­ண­மாக ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்­துக்கு பிறகு புதிய ஆட்­சி­யா­ளர்கள் கடைப்­பி­டித்து வரு­கின்ற அர­சியல் அணு­கு­மு­றை­களும் முன்­னெ­டுக்­கின்ற செயற்­பா­டு­களும் மக்கள் மத்­தியில் மீண்டும் அவ­நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்த ஆரம்­பித்­து­விட்­ட­தையும் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது. முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களின் ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ராக உறு­தி­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­மென்ற மக்­களின் எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு ஏற்ற முறையில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் அமை­ய­வில்லை. மாறாக அர­சாங்­கத்தின் தலை­வர்கள் ஊழல் மோச­டிக்­கா­ரர்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் தொடர்பில் தங்­க­ளுக்குள் முரண்­பட ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்கள். அண்­மையில் கொழும்பு

இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் நடை­பெற்ற இரா­ணுவ வீரர்­களின் குடும்­பத்­த­வர்­க­ளுக்கு வீடு­களும் காணி­களும் வழங்கும் வைப­வத்தில் கலந்­து­கொண்டு ஜனா­தி­பதி சிறி­சேன நிகழ்த்­திய உரை சந்­தே­கத்­துக்கு இட­மின்றி அந்த முரண்­பா­டு­களை வெளிச்சம் போட்­டுக்­காட்­டி­யி­ருக்­கி­றது. ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்ற பிறகு சிறி­சேனஇ பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்­கவின் நிர்­வாகம் தொடர்பில் முன்­னொ­ரு­போ­துமே இத்­த­கைய கடு­மை­யான விமர்சனத்தை தெரி­வித்­த­தில்லை. அந்த உரை அர­சி­யலில் பெரும் சர்ச்­சையை ஏற்படுத்தியிருக்­கி­றது. அதுவும் குறிப்­பாக ஜனா­தி­ப­தியின் சீற்றம் ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்கும் அரச நிறு­வ­னங்­களை நோக்­கி­ய­தா­கவே இருந்­தது.

'குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளமும் நிதி­மோ­சடி விசா­ரணைப் பிரிவும் இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழுவும் ஒரு அர­சியல் நிகழ்ச்சித் திட்­டத்தின் பிர­காரம் செயற்­பட முடி­யாது. சட்டம் சக­ல­ருக்கும் ஒரே­மா­தி­ரி­யா­னதே. சில அர­சியல் நிகழ்ச்­சித்­திட்­டங்­களின் அடிப்­ப­டையில் இந்த நிறு­வ­னங்கள் செயற்­ப­டு­மாக இருந்தால் நான் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யி­ருக்கும். சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை நிறு­வி­யதில் சில இலக்­கு­களும் கொள்­கை­களும் இருக்­கின்­றன. இந்த ஆணைக்­கு­ழுக்­களில் இருப்­ப­வர்கள் தங்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட துறைகள் எவை என்­பதைத் தெரிந்­தி­ருக்க வேண்டும். தேசிய பாது­காப்பு, இரா­ணுவ நிர்­வாகம் மற்றும் முகா­மைத்­துவம் பற்றி தெரி­யா­த­வர்கள் எந்­த­வித யோச­னை­யு­மின்றி தவ­றான தீர்­மா­னங்­களை எடுக்­கி­றார்கள். இந்த நிறு­வ­னங்­களின் உய­ர­தி­கா­ரிகள் எனக்கும் பாது­காப்பு அமைச்­ச­ருக்கும் இந்த விவ­கா­ரங்கள் குறித்து அறி­விக்க வேண்­டிய பொறுப்பைக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இவை­யெல்லாம் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் என்­பதால் அவ்­வாறு எனக்கு அறி­விக்க வேண்­டி­ய­தில்லை என்று சிலர் கூறலாம். ஆணை­யா­ளர்கள் அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யினால் நிய­மிக்­கப்­பட்­டாலும் கூட ஜனா­தி­பதி என்ற வகையில் நானே இந்த ஆணைக்­கு­ழுக்­களின் தலை­வர்­க­ளையும் பணிப்­பாளர் நாய­கத்­தையும் நிய­மிக்­கின்றேன்" என்று ஜனா­தி­பதி தனது உரையில் காட்­ட­மாகக் கூறினார். 

இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­குழு பற்றி பிரத்­தி­யே­க­மாகக் குறிப்­பிட்ட அவர், அதன் விசா­ர­ணையில் உள்ள இரு வழக்­கு­களை மாத்­திரம் சுட்­டிக்­காட்டிப் பேசி­யது கவ­னிக்­கத்­தக்­கது. இதில் ஒரு வழக்கு முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோதா­பய ராஜபக் ஷவும் மூன்று முன்னாள் கடற்­படைத் தள­ப­தி­களும் சம்­பந்­தப்­பட்­டது. மற்­றை­யது இரா­ணுவ புல­னாய்வு அதி­கா­ரிகள் சம்­பந்­தப்­பட்ட ஊட­க­வி­ய­லாளர் பிரதீப் எக்­ன­லி­கொட கடத்தல், கொலை வழக்கு ஆகும். இந்த வழக்­கு­களைப் பொறுத்­த­வரை இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­குழு அதி­கா­ரிகள் எங்கே தவ­றி­ழைத்­தார்கள் என்­பதை ஜனா­தி­பதி வெளிப்­ப­டை­யாகக் கூற­வில்லை என்­ற­போ­திலும், ஒரு வழக்கு பற்­றிய விப­ரங்கள் தனக்கு தெரி­யா­தி­ருப்­ப­த­னாலும் மறு­வ­ழக்கின் தாம­தத்­துக்­கான காரணம் குறித்து தான் அறி­யா­தி­ருப்­ப­தாலும் அவர் ஆத்­தி­ர­ம­டைந்­தி­ருக்­கிறார் என்­பதை அவர் சந்­தே­கத்­திற்­கி­ட­மின்றி வெளிக்­காட்­டினார்.

இங்கு முக்­கி­ய­மாகக் கவ­னிக்­கப்­ப­ட­வேண்­டி­யது என்­ன­வெனில், வேறு எவ­ரு­மல்ல, நாட்­டி­னதும் அர­சாங்­கத்­தி­னதும் தலை­வ­ரான ஜனா­தி­ப­தியே சுயா­தீ­ன­மான ஆணைக்­கு­ழுக்கள் சுயா­தீ­ன­மாக இல்லை என்றும் அவை அர­சியல் மயப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் குற்­றஞ்­சாட்­டி­ய­மை­யே­யாகும். இத்­த­னைக்கும் கடந்­த­வ­ருடம் நிறை­வேற்­றப்­பட்ட அர­சி­ய­ல­மைப்­புக்­கான 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் கீழ் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டதை புதிய அர­சியல் கலா­சா­ரத்தை நோக்­கிய பாரி­ய­தொரு சாதனை என்று ஜனா­தி­ப­தியே முன்னர் கூறிப் பெரு­மைப்­பட்டார். இப்­போது அவர் அந்த ஆணைக்­கு­ழுக்­க­ளுக்கு எதி­ராக அதுவும் குறிப்­பாக ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு முக்­கி­ய­மான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கின்ற இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழு­வுக்கு எதி­ராக கண்­டனம் தெரி­விக்­க­வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏன் ஏற்­பட்­டது? அத்­துடன் அதை  இரா­ணுவத்தினரையும் அவர்­களின் குடும்­பத்­தி­னர்­க­ளையும் பெரு­ம­ளவில் கொண்­டி­ருந்த  அரங்­கொன்றில் பகி­ரங்­க­மாக கூற­வேண்டும் என்று ஏன் அவர் முடி­வெ­டுத்தார்? அந்த ஆணைக்­குழு தவ­றான முறையில் செயற்­ப­டு­கி­றது என்று அவர் உணர்ந்­தி­ருந்தால் அதன் உய­ர­தி­கா­ரி­க­ளையும் தலை­வர்­க­ளையும் அழைத்து தனது அதி­ருப்­தியை அவர்­க­ளி­டமே நேர­டி­யாக கூற­வேண்டும் என்று ஏன் அவர் நினைக்­க­வில்லை ?. இவ்­வாறு பகி­ரங்­க­மாக பேசி­யதன் மூலம் யார் யாருக்கு தனது செய்­தியைத் தெரி­விக்க அவர் முற்­பட்டார்? யார் யாருக்கு நம்­பிக்­கை­யூட்­டு­வ­தற்­காக அவர் அதைச் செய்தார்? இவை­யெல்லாம் முக்­கி­ய­மான கேள்­விகள்.

ஜனா­தி­ப­தியின் இந்தச் சீற்­றத்­தை­ய­டுத்து அவ­ருக்கும் பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் இடையில் சந்­திப்­பொன்று நடந்ததாகவும் முக்­கி­ய­மான தேசிய விவ­கா­ரங்கள் குறித்து முடி­வெ­டுக்க அவர்கள் இரு­வ­ரதும் தலை­மை­யி­லான குழு­வொன்றை நிய­மிக்­கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் ­ கூறப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­ப­தியின் உரை தவ­றாகப் புரிந்­து­கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது  என்றும் தவ­றாக ஊட­கங்­க­ளினால் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றது என்றும் 10 நாட்கள் கழித்து அமைச்­ச­ரவை பேச்­சா­ள­ரான சுகா­தார அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன கூறி­யி­ருக்­கின்றார். எவ்­வா­றா­யினும்இ இலஞ்ச ஊழல் விசா­ரணைக் குழுவின் இயக்­குநர் நாயகம் டில்­ருக்ஷி டயஸ் விக்­கி­ர­ம­சிங்க தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­வதை தடுக்க முடி­ய­வில்லை. அவர் பழை­ய­படி சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் பத­விக்கே சென்­று­விட்டார்.

ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ரான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் அரச நிறு­வ­னங்கள், ஆணைக்­கு­ழுக்கள் மீது ஜனா­தி­ப­தி­யினால்  தெரி­விக்­கப்­பட்ட கண்­டனம் சிவில் சமூக அமைப்­புக்­களின் பெரும் கண்­ட­னத்­துக்­குள்­ளாகி இருக்­கி­றது. முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களின் ஊழல் மோச­டிகள், அதி­காரத் துஷ்­பி­ர­யோ­கங்கள், முறை­கே­டு­க­ளுக்கு எதி­ரான போராட்­டத்தை முன்­னின்று நடத்­திய இந்த சிவில் சமூக அமைப்­புகள் 2015 ஜன­வரி ஜனா­தி­பதி தேர்­தலில் எதி­ர­ணியின் பொது வேட்­பா­ள­ராக மைத்­தி­ரி­பால சிறி­சே­னாவை உறு­தி­யாக ஆத­ரித்து நின்­ற­வை­யாகும். தன்னை ஆத­ரித்து நின்ற அர­சியல் சக்­தி­க­ளையும் சிவில் சமூ­கத்­தையும் மேலும் பலப்­ப­டுத்­தக்­கூ­டிய செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்குப் பதி­லாக அவற்றை பல­வீ­னப்­ப­டுத்­தக்­கூ­டிய கைங்­க­ரி­யங்­களில்  ஜனா­தி­பதி நாட்டம் காட்ட ஆரம்­பித்­தி­ருக்­கின்றார்.  ராஜபக் ஷாக்­களின் ஆத­ர­வுத்­த­ள­மாக விளங்கும் சிங்­கள பௌத்த தேசியவாத சக்­தி­க­ளையும் இரா­ணு­வ­வாத சக்­தி­க­ளையும் சாந்­தப் ­படுத்தும் அணு­கு­மு­றைகளை அவர் கடைப்­பி­டிக்க  ஆரம்­பித்­தி­ருக்­கிறார்.

ஊழல் மோசடி விசா­ர­ணை­களில் இருந்து ராஜ­ப­க் ஷாக்­களை காப்­பாற்­று­வதில் பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்க அக்­க­றை­யாக இருக்­கின்றார் என்று பகி­ரங்­க­மா­கவே குற்­றச்­சாட்­டுகள் தெரி­விக்­கப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றன. ஜனதா விமுக்தி பெர­முன (ஜே.வி.பி.) இக் குற்­றச்­சாட்டை முன்­வைப்­பதில் முன்­ன­ணியில் நின்­றது. 

இப்­போது பார்த்தால் ராஜ­ப­க் ஷாக்­களை காப்­பாற்­று­வதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் அக்­க­றை­யாக இருக்­கின்றார் எனத் தெரி­கி­றது. ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி ஆத­ர­வா­ளர்கள் பெரு­ம­ளவில் ராஜபக் ஷாக்கள் பக்­கமே இருப்­பதால் கட்­சியின்  தலை­மைத்­து­வத்தை தனது கையில் வைத்­தி­ருந்தும் கூட  அது முழு­மை­யாகத் தனது கட்­டுப்­பாட்­டுக்குள் வரா­ததால் அர­சியல் ரீதியில் ஜனா­தி­பதி பெரும் சங்­க­டத்­துக்­குள்­ளா­கி­யி­ருக்­கிறார். அதி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்­கா­கவே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களின் உணர்வுகளைத் திருப்திப்படுத்தும் தந்திரோபாயத்தை கடைப்பிடிக்க அவர் ஆரம்பித்திருக்கிறார் என்று தெரிகிறது. 

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் விவகாரத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடு நிலவியதைப் போன்றே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் நிதி மோசடிப் பிரிவும் முன்னெடுக்கின்ற ராஜபக் ஷாக்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகளிலும் இருவருக்கிடையிலும் முரண்பாடுகள் வளர ஆரம்பித்திருக்கின்றன என்று தோன்றுகிறது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் கடற்படைத் தளபதிகளும் போரை  முடிவுக்கு கொண்டு வருதற்கு தங்களை அர்ப்பணித்தவர்கள் என்பதால் அவர்களை  ஊழல் விசாரணைகளின் போது  கண்ணியமாக நடத்தியிருக்க வேண்டும் என்றும் படையினரின் மனதைப் புண்படுத்தக் கூடாதென்றும்  ஜனாதிபதி கருதுகின்றார் என்றால் போருக்கு உறுதியான  அரசியல் தலைமைத்துவத்தை  வழங்கியதாக எப்போதும் கூறிக்கொண்டிருக்கின்ற மஹிந்த ராஜபக் ஷவை எதிர்த்து அவர் தேர்தலில் போட்டியிடாமல் அல்லவா இருந்திருக்க வேண்டும்?

ஆணைக்குழுவும் நிதி மோசடிப்பிரிவும் குற்றப்புலனாய்வு திணைக்களமும் அரசியல் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றின் பிரகாரமே செயற்படுகின்றன என்று ஜனாதிபதி கூறுகின்றாரென்றால், அரசியல்வாதிகளின்  முறைகேடான நடவடிக்கைகள் தொடர்பில் அரசியல் நிகழ்ச்சித் திட்டமில்லாத விசாரணை எதுவும் இலங்கையில் எப்போதாவது நடைபெற்றிருக்கின்றதா என்பதை அவர் கூறவேண்டும்.  திருமதி சிறிமா பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகளை பறிக்க சிபாரிசு செய்த ஜனாதிபதி  ஆணைக்குழு தொடக்கம் முன்னாள் இராணுவத்திதளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை சிறைக்கு அனுப்பிய இராணுவ நீதிமன்ற விசாரணை வரை எல்லாம் அரசியல் நிகழ்ச்சித்திட்டதின் பிரகாரம்தானே நடந்தேறின.

இன்று விசாரணைகள் ஒரு அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தின் படி நடக்கின்றன என்று ஜனாதிபதி கருதுகின்றார் என்றால் தனது அரசியல் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அவை குந்தகமாக அமைகின்றன என்று அவர் கவலைப்படுகிறார் என்பதே அர்த்தம். உண்மையில் இன்று நாம் காண்பதென்னவென்றால் ஊழல் மோசடிகளை ஒழித்துக் கட்டப்போவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்துக்கொண்டு ஆட்சியதிகாரத்துக்கு  வந்தவர்கள் அதே ஊழல் மோசடிகளைச் செய்தவர்களை பாதுகாப்பதற்கு தங்களுக்குள் முட்டி மோதிக்கொள்கிறார்கள். இதில் அவரவரின் அரசியல்  நலன்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

(வீ.தனபாலசிங்கம்)