இசை அமைப்பாளரும், கதாநாயகனுமான நடிகர் விஜய் அண்டனி நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'வள்ளி மயில்' என பெயரிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் திரை உலகில் திரைப்படத்தை குறுகிய நாட்களுக்குள் விரைவாக படப்பிடிப்பு நடத்துவதில் தேர்ச்சி பெற்றவர் என்ற அடையாளத்தை பெற்றவர் இயக்குநர் சுசீந்திரன். 

அறிமுகமான குறுகிய காலத்திலேயே பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இவர், தற்போது 'வள்ளிமயில்' என்ற பெயரில் புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

 இந்தப்படத்தில் விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பஃரியா அப்துல்லா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், பாரதிராஜா, சுனில் வர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

 தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் வகையில் இந்த படம் தயாராகவிருக்கிறது. விஜய் கே. சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த படத்திற்கு, டி. இமான் இசையமைக்கிறார். 

1980 களில் நடைபெறுவது போல் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் தாய் சரவணன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

 இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 15ஆம் திகதியன்று தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சுசீந்திரன் - விஜய் அண்டனி கூட்டணி முதன் முறையாக இணைந்திருப்பதால் இந்த படத்திற்கு அறிவிப்பு நிலையிலேயே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உண்டாகியிருக்கிறது.